தூண்டில் பட்சி!



தனது எழுத்துகளின் வேர்களை இந்த தமிழ் மண்ணில் படர விட்ட இலக்கியவாதி தேனுகாவின் மரணம் பெரும் அதிர்ச்சி. அவரின் படைப்புகள் என்றும் உயிரோடு தமிழர்களிடம் இருக்கும்!
- காந்தி லெனின், திருச்சி-26.

‘இதுவரை யாரையும் லவ் பண்ணலை. ஆனா, கண்டிப்பா எனக்கு லவ் மேரேஜ்தான்’ என்று தன்ஷிகா சொல்வது ஒண்ணுமே புரியவில்லை. ஆனா, பட்சி யாருக்கோ தூண்டில் போட்டிருக்குன்னு மட்டும் தெரியுதுங்கோ!
- மு.மதிவாணன், அரூர்.

‘காப்புரிமை பெறுவது எப்படி?’ என்ற தகவல் அபாரம். கதை முதல் கண்டுபிடிப்பு வரை களவாடப்பட்டு படைப்பாளிகள் பாதிக்கப்படுவதற்கு பரிகாரமாக அமைந்திருந்தது கட்டுரை.
- எஸ்.விஜயலட்சுமி சுந்தர், தேனி.

தமிழில் பேய்ப் படமான ‘கங்கா’ மட்டுமே நடித்து வரும் டாப்ஸி, கூடிய சீக்கிரம் தமிழைக் கற்றுக்கொள்ளட்டும். ஆனி போயி ஆவணி வந்தா, டாப்ஸ் டாப்பா வரும் பாருங்க!
- ஜெ.வி.டார்வின் பிரபு, திருப்பூர்.

‘சாட்டை’ படத்தில் பார்த்த பொண்ணா இது! தளதளவென்று இப்போது ‘கிட்ணா’ நாயகியாக மனதை அள்ளுதே இந்த மகிமா! எல்லாம் காலத்தின்
மகிமைமா!
- வெ.வி.சூர்யபிரசாத், சென்னை-49.

‘இரட்டை அர்த்த வசன’ நடிகராக மட்டுமே அறியப்பட்ட வெண்ணிற ஆடை மூர்த்தியை சூப்பர் எழுத்தாளராக நிலைநிறுத்தி விட்டது பேட்டி. அதிலும், அவர் எழுதிய புத்தகத்தி
லிருந்து தரப்பட்டிருந்த வாசகங்கள் சிரிப்பு மழை!
- வி.எஸ்.முத்தையா, கூத்தப்பாக்கம்.

விடுதலைப் புலிகளின் தார்மீக வலி என்னவென்பதை ஐரோப்பிய நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது. ஆனால், நம் தொப்புள் கொடி உறவை அறுத்தெறியும் இந்திய அரசை நாம் என்ன சொல்வது?
- பிரபா லிங்கேஷ்,
மேலகிருஷ்ணன்புதூர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காட்டி, பிற பொருட்களின் விலையையும் உயர்த்தியவர்கள், இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்தபோது அப்பொருட்களின் விலையைக் குறைக்காதது என்ன சார் நியாயம்?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

மஞ்சள் காமாலைக்கு கையில் சூடு வைப்பதா? இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் மாறாத மூடநம்பிக்கை முத்தண்ணாக்களை என்னவென்று சொல்வது?
- எஸ்.பூபதி, ஆரணி.

அமரர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் ‘நான் வந்த பாதை’ சுயசரிதையில் இருந்து சில வார்த்தைப் பூக்களையே தொடுத்து நினைவஞ்சலி செலுத்திய விதம் அருமை!
- இரா.குணசேகரன், புதுச்சேரி.