என் வழி தனி வழி...



களத்தில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி சாதனை மன்னனாகத் திகழ்ந்த சச்சின், தனது சுயசரிதையிலும் சிக்சர்களாகப் பறக்கவிட்டு தூள் கிளப்பியிருக்கிறார். 1997-98 கோகோ கோலா கோப்பையில் சச்சின் மட்டையில் இருந்து புறப்பட்ட பாலைவனப் புயலில் சிக்கி ஆஸ்திரேலிய அணி சின்னாபின்னமானது போல, இந்த புத்தகப் புயலில் முன்னாள் பயிற்சி யாளர் கிரேக் சேப்பலின் இமேஜ் டேமேஜாகி இருக்கிறது.

‘என் வழி தனி வழி’ என்று சூப்பர் ஸ்டார் பாணியில் ‘பிளேயிங் இட் மை வே’ என்கிற நெத்தியடி டைட்டிலோடு சச்சின் புத்தக அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்களிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. நவம்பர் 6ம் தேதி வெளியீடு என தகவல் வெளியாகி இருந்த நிலையில், ஒரு நாள் முன்பாகவே மும்பையில் அமர்க்களமான விழா நடத்தி புத்தகத்தை ரிலீஸ் செய்தார் சச்சின்.காலையிலேயே அம்மா ரஜ்னிக்கு ஒரு புத்தகத்தை பரிசாகக் கொடுத்து அவர் ஆசி பெற்ற போட்டோ ட்விட்டரில் பரபரத்தது.

கவாஸ்கர், வெங்சர்க்கார், கங்குலி, சாஸ்திரி, டிராவிட், லக்ஷ்மண் என்று மேடையில் நட்சத்திர ஜொலிப்பு. மனைவி அஞ்சலி, மகள் சாரா, சகோதரர் அஜித் ஆகியோரும் ஆஜராகி இருந்தார்கள். முதல் பிரதியை குரு ராம்காந்த் அச்ரேக்கருக்கு வழங்கினார் அஞ்சலி. சச்சினை முதல் முறையாக விமானநிலையத்தில் பார்த்து மனதைப் பறிகொடுத்தது... பத்திரிகை ரிப்போர்ட்டர் என்று கூறி தன்னை வீட்டுக்கு அழைத்து அறிமுகப்படுத்த அவர் திட்டம் போட்டது... என்று அஞ்சலி வெட்கமும் சிரிப்புமாய் போட்டுக் கொடுக்க, சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பதைச் சொல்லி கவிழ்த்தார் கங்குலி. மலர்ந்த நினைவுகளின் கனத்தில் உணர்ச்சிமயமாய் உறைந்தார் விழா நாயகன்.

புத்தகம் வெளியாவதற்கு முன்பாகவே அதில் உள்ள ஹைலைட்டான அம்சங்கள் பற்றி மீடியாவுக்கு கசிய விட்டதில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருந்தது. இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் பற்றிய தகவல்கள்தான் செம ஹாட். ‘‘டிராவிட்டுக்கு கல்தா கொடுத்து விட்டு நீங்கள் கேப்டனாகி விடுங்கள். நாம் இருவரும் சேர்ந்து இந்திய கிரிக்கெட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்யலாம்’’ என்ற மாஸ்டர் பிளானோடு சேப்பல் தன்னை அணுகியதையும், இந்திய வீரர்களிடம் அவர் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போல சர்வாதி காரமாக நடந்து கொண்டதையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து சேப்பல் அலறியடித்து மறுப்பு தெரிவித்தாலும், சுயசரிதையில் சச்சின் கூறியுள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று இந்திய சகாக்கள் வழிமொழிந்துள்ளனர். ‘‘நான் இருக்கும் வரை உன்னை இந்தியாவுக்காக விளையாட விட மாட்டேன்’’ என்று சேப்பல் மிரட்டியதாகச் சொல்கிறார் ஜாகீர்.

 கங்குலிக்கு எதிராக மெயில் அனுப்பியது, இந்திய வீரர்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு அணியை பலவீனப்படுத்த முயற்சித்தது என சேப்பல் முகத்தில் ஏற்கனவே பல கரும்புள்ளிகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்திய கிரிக்கெட் வாரியம் சொந்தக் காசில் வைத்துக்கொண்ட சூனியம் அவர். அந்த திருட்டுப் பூனைக்கு ரொம்ப லேட்டாக மணி கட்டியிருக்கிறார் சச்சின்.

தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்று லக்ஷ்மணை நச்சரித்தார். ஆனால், சேப்பலின் உள்நோக்கத்தை புரிந்துகொண்ட அவர், நாசூக்காக நிராகரித்துவிட்டார். இதனால் ஆத்திரம் தாங்க முடியாத சேப்பல், ‘‘32 வயதில் அணிக்கு மீண்டும் திரும்ப முடியும் என்று கனவு காணாதே’’ என அச்சுறுத்தினார். மிடில் ஆர்டரில் ஆடிக்கொண்டிருப்பவரை தேவையில்லாமல் தொந்தரவு செய்தது சக வீரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 120 ரன்னை சேஸ் செய்ய முடியாமல் 81 ரன்னுக்கு சுருண்டபோது அடைந்த வேதனை, கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்ல... கிரிக்கெட்டிலிருந்தே விலகிவிடலாமா என யோசித்தது, அஞ்சலியின் ஆறுதலான ஆலோசனையால் தொடர்ந்து விளையாடியது என பர்சனல் பக்கங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்திருக்கிறார் சச்சின்.

* ‘‘கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டதைக் கூட மீடியா நண்பர் மூலமாகத் தெரிந்துகொள்ள நேர்ந்தபோது நொந்து போனேன். கிரிக்கெட் வாரிய தரப்பிலிருந்து ஒருவர் கூட பேசவில்லை. கேப்டன் பதவியை வேண்டுமானால் இப்படி என்னிடமிருந்து பறிக்கலாம். ஆனால், கிரிக்கெட் வீரனாக என்னை ஒருவரும் அலட்சியப்படுத்த முடியாது என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொண்டேன்...’’

* ‘‘மங்க்கி கேட் என்று குறிப்பிடப்படும் ஹர்பஜன் - சைமண்ட்ஸ் சர்ச்சையில், தவறு செய்தது சைமண்ட்ஸ்தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எப்படியாவது பாஜியை எரிச்சல்படுத்தி கவனத்தைச் சிதறவைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார் சைமண்ட்ஸ். இந்தச் சம்பவத்தில் ஆஸி. அணி கேப்டன் பாண்டிங் நடந்து கொண்ட விதமும் சரியில்லை. போட்டி நடுவரிடம் புகார் செய்வதற்கு முன்பாக இந்திய கேப்டன் கும்ப்ளே, நிர்வாகிகளிடம் ஆலோசித்திருந்தால் சுமுகமாக முடித்திருக்கலாம்...’’

* ‘‘2008 சிட்னி டெஸ்ட்டில் நடுவர்கள் செய்த சில தவறுகள், ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரின் மோசமான நடத்தை காரணமாகவே தோற்க நேர்ந்தது. இல்லையென்றால் அந்தப் போட்டியை நாங்கள் டிரா செய்திருக்க முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.’’

* ‘‘2007 உலகக் கோப்பையில் இந்தியா மோசமாகத் தோற்று வெளியேறியபோது, ‘சச்சின் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் தொடரும் அளவுக்கு ஃபார்மில் இருக்கிறோமா என சுயபரிசோதனை செய்ய வேண்டும்’ என்று இயான் சேப்பல் கிண்டலடித்திருந்தார். 2008ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலமாக, என்னுடைய கண்ணாடி எந்த அளவுக்குப் பெரியது என்பதை அவருக்கு உணர்த்தினேன்.’’

- இப்படி பல அதிரடியான, சுவாரசியமான தகவல்கள் ‘பிளேயிங் இட் மை வே’யில் அணிவகுக்கிறது. புத்தகம் விற்பதற்காக கதையளந்திருக்கிறார் என்று அலட்சியப்படுத்த முடியாது.

‘‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்; பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்த கடைசி இரண்டு ஆண்டுகளிலேயே வேலையைத் தொடங்கிவிட்டேன். ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன்’’ என்கிறார் சச்சின்.

புத்தக விற்பனை மூலமாக கிடைக்கும் தொகையை ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் குழந்தைகளுக்காக  வழங்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். 416 பக்கம், விலை ரூ.599 என்று போட்டிருந்தார்கள். ரூ.899 என்று குறிப்பிட்டு 45 சதவீத தள்ளுபடியில் ரூ.496க்கு வாங்கலாம் என்கிறது பிளிப்கார்ட். ஆன்லைனில் அலசி நல்ல டீலாக மாட்டுகிறதா பாருங்கள். சச்சினுக்காக, சொன்ன விலைக்கும் வாங்கலாம்.

-சங்கர் பார்த்தசாரதி