உத்தம வில்லனில் என் சாயல் இருக்கு!



கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி

கூத்துக் கலைஞன், நடிகன் வேடங்களில் கமல் எப்படி இருப்பார்?

- எக்கச்சக்க சஸ்பென்ஸில் காத்திருக்கிறது தமிழ் சினிமா. மகா கலைஞன் கமலோ, அனுபவமும் அபாரத் திறமையும் கொண்டு உருவாக்கிய ‘உத்தம வில்லனோ’டு காத்திருக்கிறார். ஏகத்துக்கும் அடுக்கிய புத்தகங்கள், கறுப்பு - வெள்ளையில் சிரிக்கிற ஈ.வெ.ரா... தியானக்கூடம் போலிருக்கிற கமலின் தனியறையில் நிகழ்ந்தது இந்த உரையாடல். வேறென்ன? கலா ரசனையும், சினிமாவின் மீதான காதலும், வாழ்க்கையின் மீதான பரிவுமாகக் கொட்டியது கமல் சாரல்!

‘‘அத்தனை கண்களும் எதிர்பார்க்கின்றன ‘உத்தம வில்லனை’... எப்படி வந்திருக்கு?’’

‘‘ ‘சர்வர் சுந்தரம்’, ‘புன்னகை மன்னன்’ மாதிரி உணர்ச்சிகரமாகவும், அதேநேரம் சந்தோஷமாக சிரிக்கக்கூடிய படமாகவும் இருக்கணும். சார்லி சாப்ளின், நாகேஷெல்லாம் மனசை உலுக்கவும் செய்திருக்காங்க; சிரிக்கவும் வச்சாங்க. நாங்க இதற்கு ‘பிட்டர் சாக்லெட்’னு பெயர் வச்சிருந்தோம். தமிழை சாகடிக்கிறேன்னு சொல்லிடுவாங்களோன்னு தயங்கினேன். அதான் தமிழில் ‘உத்தம வில்லன்’ ஆச்சு. ‘வில்லன்னா ஆங்கிலமாச்சே...

 அதில் கொக்கி போடுவாங்களா’ன்னு படத்திலேயே ஒரு டயலாக் வருது. மல்யுத்தம் செய்பவன் மல்லன், வில்யுத்தம் செய்பவன் வில்லன்னு வச்சிட்டோம். ‘இல்லை’ன்னு ஒரு தமிழ் வாத்தியார் சொல்லட்டும்... நான் குறிஞ்சியிலிருந்து பாட்டு எடுத்துக் காட்டுறேன்!

‘உத்தம வில்லன்’னா அது சிவனையும் குறிக்கும்... அர்ஜுனனையும் குறிக்கும். அப்படி ஒரு சின்ன உட்கருத்து இருக்கு. இதெல்லாம் டைட்டில் மட்டும்தான். ரொம்ப நாளா வேணும்னே அரங்கேறாமல் ஒதுங்கியே இருந்தார் கே.பாலசந்தர். என்னை அறிமுகப்படுத்தின பெருமை அவருக்கு இருக்கிற மாதிரி, அவரை அறிமுகப்படுத்திய பெருமையும் எனக்குத்தான் சேரணும்.

 ‘87 வயதுக்கு மேலே உள்ளவரை நடிக்க வைக்கிறீங்களே’ன்னு கேட்டாங்க. ‘எனக்கு நடிக்க வருமா’ன்னு சந்தேகப்பட்டு கேட்டபோது அவர் எப்படி நம்பிக்கையா சொன்னாரோ, அதையே நானும் சொன்னேன். அந்த நம்பிக்கை வீண் போகலை. இவரை விட ஆறு மாதம் பெரியவர் கே.விஸ்வநாத். பின்னி எடுத்திருக்கார்.

இது என் படம் விற்பனையாகணும், வெற்றி பெறணும் என்ற ஆசைகள் போக... சில சினிமாக்கள்லதான் எல்லார் நடிப்பும் பிரமாதமா இருக்கும். சிவாஜி நடிச்ச ஒரு படத்தை சிறந்த படமா எடுத்துக்கிட்டா, அதுல சிவாஜியை அதட்டுகிற ஒரு போலீஸ்காரர் தப்பா நடிச்சிருப்பார். அது மாதிரி சின்னச் சின்ன தப்புகூட இல்லை. நாங்களே அப்படி இருக்கணும்னு வடிவமைச்சதால அப்படி வந்திருக்கு!’’‘‘கூத்துக் கலைஞராக சிரமமான நடிப்பை ஈஸியாக கொண்டு வந்திருக்கீங்கன்னு பேசுறாங்க...’’

‘‘ ‘தெய்யம்’னு ஒரு கலை இருக்கு. கேரளாவில் ரொம்ப மரியாதையா வச்சிருக்கற கலை இது. அந்தக் கலை கேரளாவோட நிக்கக் கூடாதுன்னு நான் நினைச்சேன். அது நம்ம கலைதான். சேர, சோழ, பாண்டிய நாடா இருந்தப்ப அது தமிழ்க் கலையாதான் இருந்திருக்கணும். ‘தெய்யம்’ நடனத்தையும், நம்ம வில்லுப்பாட்டையும் இதில் சேர்த்திருக்கோம். இந்த மாதிரி காம்பினேஷன் சினிமாவில்தான் சாத்தியம். அந்தக் காலத்தில் எந்த இரண்டையும் பண்டிதர்கள் சேர விடமாட்டாங்க.

இப்பத்தானே அஜய் சக்கரவர்த்தியும், எங்க வாத்தியார் பாலமுரளி கிருஷ்ணாவும் சேர்ந்து பாடுறது நடக்கிறது! இதில் புது நடன அமைப்பு வந்திருக்கு. நான் கூட அமைச்சிருக்கேன். டி.கே.சண்முகம் அண்ணாச்சி கம்பெனியில் இருந்தபோது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதை இந்த சினிமா பண்ணும்போது அனுபவிச்சேன்.’’

‘‘இதில் நீங்க நடிகராகவும் வர்றீங்க. அது நீங்களேவா... அல்லது சாயலா?’’

‘‘நான் கொலைகாரனா நடிச்சாலும் அதில் என் சாயல் இருக்கும். கொலை பண்ணுவது சரியில்லை, பண்ணக்கூடாதுன்னு இருக்கேன். இந்தப் படத்தில் வருகிற கமல்ஹாசனிலும் கமல்ஹாசன் சாயல் இருக்கு. நானும் என் வாழ்க்கையில் பல நேரங்களில் முட்டாளா இருந்திருக்கேன்; ஏமாளியா இருந்திருக்கேன். ஏமாளியா வர்ற கமல்ஹாசனில் என் சாயல் இருக்கும். நல்ல பாட்டு போட்டால் ‘கொன்னுட்டான்டா’ன்னு சொல்றோம் இல்லையா, அந்த மாதிரி வன்முறையும் நம்மகிட்ட இருக்கு.

ஆக, கொலைகாரனும் நம்ம கூட இருக்கான். சமூகநலன் கருதி, ‘இதுதான் நேர்மை; நன்மை’ன்னு நம்பிக்கிட்டு இருக்கிறதால அப்படியெல்லாம் செய்யறதில்லை. எல்லாரிடத்திலும் ஒரு ஸ்திரீலோலன் இருக்கான்; எல்லார் மனசிலும் ஒரு திருஞானசம்பந்தரும் இருக்கான். அதனால்தான் நம்மில் ஒருத்தரை ‘மகான்’னு நினைக்கிறோம். இது மட்டுமில்லை, என்னுடைய 210 படங்களுமே கொஞ்சம் கொஞ்சம் கமல்ஹாசனை நறுக்கிப் போட்டதுதான். பெருங்காயம் மாதிரி என்னுடைய சாயல் எல்லாத்திலும் இருக்கும்!’’

‘‘ஒரே நேரத்தில் மூணு படம்... ‘உத்தம வில்லன்’, ‘விஸ்வரூபம் 2’, ‘பாபநாசம்’னு ரெடியாகி நிக்கிறது ஆச்சர்யம்...’’

‘‘அப்படிச் செய்ய வச்சிட்டாங்க. மூணுமே மூணு வித்தியாசமான படங்கள். ரா.கி.ரங்கராஜன் ஒரு பக்கம் ‘இது சத்தியம்’ எழுதுவார். நாலைந்து மாசம் கழிச்சு, ‘அடிமையின் காதல்’னு மோகினிங்கிற பேரில் எழுதுவார். அதற்கடுத்து வேறு மாதிரி துப்பறியும் நாவலில் வருவார். சுஜாதாவின் ‘காகிதச் சங்கிலி’யும், கணேஷ் வசந்த் கதையும், ‘ஸ்ரீரங்கத்து தேவதைகளும்’ வேறுவேறு மாதிரி தான் இருக்கும்.

‘விஸ்வரூபம் 2’... ‘விஸ்வரூப’த்தை விட உழைப்பு மும்மடங்கு. எனக்குத் தெரிஞ்சு அடக்கி வாசித்து பணிவுடன் சொன்னால், ‘விஸ்வரூபம் 2’ இரண்டு மடங்கு. ‘விஸ்வரூப’மெல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொல்றா மாதிரியிருக்கும். பொழுதுபோக்கு அம்சமும், வியத்தகு வீரச்செயல்களும் கதையோட்டமும் இன்னும் வேகம்.

‘பாபநாசம்’ பற்றி எல்லோருக்கும் தெரியும். மிட்டாய்க் கடையில கொஞ்சம் சாப்பிட்டு பார்த்திட்டு ‘எனக்கு ஒரு கிலோ கொடுங்க’ன்னு கேட்கிற மாதிரி இந்தப் படம். கேரளாவில் அதை சாப்பிட்டுப் பார்த்திட்டு பிடிச்சுப் போச்சு. நம்ம வீட்ல எப்படி ரசிக்கிறாங்கன்னு பார்க்கணும்!’’‘‘ஆபத்துகள் நிறைந்த சாகசங்களை ‘மருதநாயகம்’, ‘விஸ்வரூபம்’னு தேடிப் போய் செய்யறீங்க... பணம், முதலீடு, பிரச்னைகள் பற்றி பயமே கிடையாதா?’’

‘‘இது மாதிரி சேதாரம் வரும்னு தெரிஞ்சு போறது கிடையாது. ரோட்டை கிராஸ் பண்ணினா வலது பக்கமும் பார்த்திட்டு கிராஸ் பண்ணணும். ஏன்னா கீப் லெஃப்ட்... அதை மனசில் வச்சிக்கிட்டு லெஃப்ட்ல பார்த்துத் திரும்பினால் லாரி அடிச்சிடும். புறப்படும்போது லாரி அடிக்கும்னு நினைக்கிறதில்லை...

நினைக்காத நாளில்தான் லாரி அடிக்கும். தலை சிதறி, மூளை வெளியேறி விபத்து பார்த்திருந்தாலும், நாம் பஸ்ஸில்ஏறித்தான் ஆகணும். இந்த ரிஸ்க்கை பொதுமக்கள் எடுக்கும்போது, நான் எடுக்கிறதில் ஆச்சரியம் இல்லை. இந்த வாழ்விலிருந்து தொடர்ந்து உயிரோடு தப்பப் போவதில்லை. அப்புறமென்ன பயம்?’’

‘‘நிறைய படிக்கலை நீங்க... அதனால்தான் நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறீங்களா?
எப்போதும் புத்தகங்கள் ஊடே பயணம்... கிடைக்கிற மேதைமையில் இருக்கிற போதையா? தெரிஞ்சுக்கிட்டே ஆகணும் என்ற ஏக்கமா?’’

‘‘அந்தக் கதவுக்குப் பின்னாடி என்னன்னு ஆரம்பிச்சது... குழந்தையா இருந்தப்போ ‘அப்படின்னா’ன்னு கேட்கத் தொடங்கியது... ‘ஆகாயம் எவ்வளவு உயரம், அதுக்குப் பின்னாடி என்ன’ன்னு கேட்டது... இந்தக் கேள்விகள் இல்லாமல் நாமில்லை. அதுதான் கல்வி. அதைக் கேட்டுட்டு ஒரு கட்டத்தில் நிறுத்திடுறோம். கறுப்பு தொப்பி போட்டுட்டு, அதில் குஞ்சம் தொங்குமே, அதை வச்சுக்கிட்டு கையில் ஒரு பேப்பரை சுருட்டிக் கொடுத்ததும் படிப்பு முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிற மனுஷன் படிக்கவே வேண்டாம்.

அது சம்பளம் வாங்குவதற்கான ஒருவித டிக்கெட். அது ஒரு ஸ்டேஷன் வரையில்தான் போகும். நான் அந்த மடையனா இருக்க விரும்பலை. கூகுள் வந்த பின்னாடி எல்லோரும் கல்விமான் ஆகிட்டாங்க. கல்வி தொடர்ந்துக்கிட்டே இருக்கு. அந்த சந்தோஷம் இருக்கிற வரைக்கும் நாம் ரிட்டயர் ஆகலைன்னு அர்த்தம். ‘ஏன்’ங்கிற கேள்வி கேட்கத் தெரியலைன்னா, மனசுக்கு ‘பல்லு போச்சு’ன்னு அர்த்தம். இனி மெல்ல முடியாது. சவைச்சுதான் சாப்பிடணும்... பால்பவுடர்தான்!’’

‘‘ரஜினிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது என்ன நினைச்சீங்க?’’
‘‘உங்களின் அடுத்த வாரிசு யார்?’’‘‘சினிமாவில் அறிவுக்கும் திறமைக்கும் முதலிடம் கிடைப்பதில்லையா?’’

கறுப்பு தொப்பி போட்டுட்டு, அதில் குஞ்சம் தொங்குமே, அதை வச்சுக்கிட்டு கையில் ஒரு பேப்பரை சுருட்டிக் கொடுத்ததும் படிப்பு முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிற மனுஷன் படிக்கவே வேண்டாம். நான் அந்த மடையனா இருக்க விரும்பலை.

(அடுத்த வாரமும் தொடர்கிறார் கமல்)

- நா.கதிர்வேலன்