அழுக்கு தண்ணீரை குடிச்சு உயிர் வாழ்ந்தோம்!



கடற்கொள்ளையர்களிடமிருந்து மீண்ட தமிழர்

‘44 மாதம்... நாராய்ப் போன தேகம்...’ - இந்தத் தலைப்பை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா? சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் பிடிபட்டிருந்த தமிழக மாலுமியான டனிஸ்டன் பற்றி 25-8-2014 தேதியிட்ட நம் இதழில், இப்படித்தான் விவரித்திருந்தோம். அந்த வரிகளுக்கு அச்சு அசல் பொருத்தமாக டனிஸ்டனின் உருவத்தை நேரில் பார்க்க கஷ்டமாய் இருக்கிறது. இப்போது அவர் நாடு திரும்பியிருக்கிறார்... குடும்பத்தோடு சேர்ந்திருக்கிறார். ஸோ, இது ஒரு சந்தோஷ ஃபாலோ அப்!

‘‘முதல்ல எனக்காகப் போராடிய எங்க மக்களுக்கும், ஊடகங்களுக்கும், அரசுக்கும் நன்றி சொல்லிக்கிறேன் சார்’’ எனப் பேச ஆரம்பிக்கும் டனிஸ்டனின் கண்ணில் கடுமையான மனச்சோர்வு. சரளமாகப் பேச முடியாமல் வார்த்தைகள் வட்டமடிக்கின்றன. வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர், மருத்துவ கவுன்சிலிங் எடுத்து வருகிறார்.‘‘சார்... அன்றைக்கு எங்க கப்பல் ஆப்ரிக்க கடல் வழியா போகும்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடிச்சுட்டாங்க.

எல்லாம் ஒரு நிமிஷத்துல நடந்து முடிஞ்சுடுச்சு. எங்களை கடல்ல இருந்து கரைக்கு கொண்டு வந்தவங்க, அங்கிருந்து 50 கி.மீ தூரத்துக்கு கார்ல கூட்டிட்டுப் போனாங்க. ஒரே பாலைவனக் காடு. அங்க ஒரு இடத்துல கூடாரம் அமைச்சு எங்க 7 பேரை சிறை வச்சுட்டாங்க. எங்களுக்குப் பக்கத்துல இன்னொரு கூடாரத்துல கொரியாகாரங்க 4 பேரைப் பிடிச்சு வச்சிருந்தாங்க. ‘எங்களை இப்போ விட்டுருவாங்க... அப்போ விட்டுருவாங்க’ன்னு ஒரு வருஷம் ஏக்கத்துலயே கழிஞ்சுது.

சாப்பிட அரிசியும், உருளைக்கிழங்கும், வெங்காயமும், தக்காளியும் கொடுப்பாங்க. இதை நாங்க சமைச்சு அவங்களுக்கும் கொடுத் துட்டு சாப்பிடணும். தீவிரவாதிங்களுக்கு ஒரு கமாண்டர் இருந்தார். அவர் காரில் தான் வருவார், போவார். அவருக்கு மட்டும் இங்கிலீஷ் தெரியும். அவர்கிட்டதான் நாங்க பேசுவோம். ‘எங்களை எதுக்காக பிடிச்சு வச்சிருக்கீங்க? எப்ப விடுவீங்க?’ன்னு கேட்டுகிட்டே இருப்போம். அதற்கு அவர், ‘எங்க ஆளுங்க உங்க ஊர் ஜெயில்ல இருக்காங்க. அவங்களை விட்டதும் உங்களை விடுறோம்’னு சொல்லிட்டுப் போயிடுவார்.

திடீர்னு, ‘இன்னும் ரெண்டு நாள்ல உங்களை விட்ருவோம்’னு சொல்லுவாங்க. அப்புறம், ‘இன்னும் நாலு நாள்ல விடுதலை’ன்னு சொல்லுவாங்க. இப்படியே அலைக்கழிச்சு நாலு வருஷமா உயிரைக் கையில் பிடிச்சிட்டு வாழ்ந்தோம். முதல்ல ரெண்டு வேளைக்கு இருந்த சாப்பாடு, ஒரு வேளையா மாறிச்சு. சில நாட்கள்ல சாப்பாடே கிடையாது. தொடர்ந்து ரெண்டு நாள் கூட சாப்பிடாமல் இருந்திருக்கோம். வெறும் தண்ணிதான்.

அங்க மழைத் தண்ணிதான் குடிக்கறதுக்கு. ஒரு பெரிய குழியைத் தோண்டி வச்சு, அதுல விழுற மழைத் தண்ணியைக் குடிக்கணும். அந்த அழுக்குத் தண்ணியில பாம்பு, தேள், பூச்சிகள் நிறைய செத்துக் கிடக்கும். கொதிக்க வச்சாலும் அந்த அழுக்கு போகாது. இதனால, எங்கள்ல சிலருக்கு தோல் அழற்சி வந்துடுச்சு. அந்தத் தண்ணியிலயே உப்பு போட்டு உடம்பைக் கழுவுவோம்.

அடிக்கிற காத்தில் பாலைவன மணல், மூக்குக்குள்ள போய் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். வயித்து வலியாலும் துடிச்சேன். அவங்களே மருந்தும் தந்தாங்க. நிலைமை ரொம்ப மோசமானா 15 கி.மீ. தூரம் அழைச்சிட்டுப் போய் ஒரு டாக்டர்கிட்ட காட்டுவாங்க. ஒரு கட்டத்துல எல்லாருமே மனதளவுல ரொம்ப பாதிக்கப்பட்டுட்டோம். வீட்டுக்குப் போன் பண்ணணும்னு கேப்போம்.

இரண்டு, மூணு மாசத்துக்கு ஒரு தடவை செல்போனைக் கொடுத்து பேசச் சொல்வாங்க. அடிக்கடி எங்களை இடம் மாத்திக்கிட்டே இருந்தாங்க. 15 தடவையாவது மாத்தியிருப்பாங்க’’ - திக்கித் திணறி பேசுகிறவர், சிறிது இடைவெளி விட்டு, ‘‘இப்போ, நாங்க உயிரோடு இருக்கோம்ங்கிறதை நம்பவே முடியல சார்...’’ என்கிறார் மெல்லிய குரலில்.

‘‘எங்களை ரிலீஸ் பண்றதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி, எங்க குழுவுல இருந்த ஒருத்தர் மயக்கம் போட்டு விழுந்துட்டார். ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போகணும்னு மன்றாடினோம். வழக்கம்போல, அவங்களே மருந்து தந்தாங்க. அப்போ திடீர்னு கமாண்டரோட டிரைவர் வந்து புது டிரஸ் கொடுத்துட்டு, ‘நீங்க இன்னைக்கு விடுதலையாகப் போறீங்க’ன்னு சொன்னார். நாங்க எப்பவும் போல இதுவும் பொய்தான்னு நினைச்சு தூங்கிட்டோம்.

ஆனா, நிஜமாவே அன்னைக்கே ஏழு கார்கள்ல எங்களை அழைச்சிட்டுப் போனாங்க. 8 மணி நேரப் பயணம். போகும்போதே கார் பழுதாகியும், மணல்ல சிக்கியும் ரொம்ப பிரச்னையாகிடுச்சு. ‘கடவுளே! எப்படி யாவது இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடு’னு எல்லோரும் வேண்ட ஆரம்பிச்சோம்.

கடைசியா, கென்யா பார்டர்ல உள்ள ஏர்போர்ட்ல சோமாலிய கவர்னர்கிட்ட எங்களை ஒப்படைச்சாங்க. அங்கிருந்து ஒரு டிரஸ்ட் நிர்வாகிகள் மூலமா, கென்யா தலைநகர் நைரோபி வந்து, அப்புறம் மும்பை வந்தோம். இங்க அப்பா, அம்மாவைப் பார்த்த பிறகுதான் எனக்கு உயிரே வந்துச்சு’’ என்கிறார் டனிஸ்டன் கண்ணீர் மல்க.

அவர் தந்தை லிட்டன் அந்தோணி தொடர்கிறார். ‘‘சார்... அந்தக் கடவுள் கிருபையால என் மகன் உயிரோடு திரும்பி வந்துட்டான். அவன்தான் எங்க குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருந்தான். அவன் இல்லாமல் நாங்க யாருமே இல்ல. போன உசுரு திரும்ப வந்த மாதிரி இருக்கு. எல்லாருக்கும் நன்றி!’’ என்கிறார் நெகிழ்ச்சியாக.நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்போதுதான் டனிஸ்டனைப் பெற்ற புன்னைக்காயல் கிராமம் புன்னகையில் மிதக்கிறது!

பேராச்சி கண்ணன்
படங்கள்: கோவிந்தன் சேவன்