கல்விக்கடன் பறித்த உயிர்



கண்ணதாசனால் ஏன் டாக்டராக முடியவில்லை?

ஆர்மீனியாவிலிருந்து இந்தியா திரும்பினால் நான் டாக்டராக மட்டுமே திரும்புவேன்...’’
- டைரியில் கண்ணதாசனின் கடைசிப்பதிவு இப்படித்தான் முடிகிறது. ஆனால், அவரது உயிரற்ற உடல் மட்டுமே இந்தியாவுக்கு வந்தது. கண்ண தாசன் தற்கொலை செய்து கொண்டார். படிப்பு முடித்து மருத்துவனாக திரும்பும் மகனைக் கட்டியணைத்து வரவேற்கக் காத்திருந்த தந்தை ராஜா, கண்ணாடிப் பெட்டிக்குள் சலனமின்றி துயிலும் மகனைத் தொட்டுப் பார்க்கத் திராணியற்று மயங்கிக் கிடக்கிறார்.

கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஜம்புக்குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன். அவருக்கு 5 வயதானபோது அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, அப்போதிருந்தே மருத்துவராகும் கனவுடன் வளர்ந்திருக்கிறார். +2வில் 984 மதிப்பெண்களே கிடைத்துள்ளது. ‘‘நல்லா படிக்கிற புள்ள. அவன் விருப்பப்படியே டாக்டருக்குப் படிக்க வச்சிரணும்ங்கிறதுக்காக மத்த புள்ளைகளக் கூட பெரிசா படிக்க வைக்கலே. 7 ஏக்கர் நிலம் இருந்துச்சு... அதைக் கொஞ்சம் கொஞ்சமா வித்து படிக்க வச்சேன். தனியார் பள்ளியிலதான் படிச்சான்.

பத்தாவதுல 440 மார்க். 12ல கொஞ்சம் குறைஞ்சுபோச்சு. ‘டாக்டரு வேலையிலயே வேற படிப்பு எதுனாப் படிய்யா’ன்னு சொன்னேன். கேக்கல. ஒரு வருஷம் எங்கேயும் படிக்கப் போகாம வீட்டுலயே இருந்தான். திடீர்னு ஒருநாள், ‘ரஷ்யாவுக்கு பக்கத்துல ஆர்மீனியான்னு ஒரு நாட்டுல கவர்மென்டு காலேஜ்லயே டாக்டர் சீட்டு கிடைக்குமாம்’னு சொல்லிட்டு கோயமுத்தூருக்குப் போயி ஒரு பரீட்சை எழுதுனான். அதுல பாஸ் பண்ணிட்டான். காலேஜ்ல இருந்து ஆர்டரும் வந்திடுச்சு.

‘மொத்தம் 30 லட்ச ரூபா செலவாகுமாம்... வருஷத்துக்கு அஞ்சாறு லட்சம் வேணும். உன்னால கட்ட முடியுமாப்பா’ன்னு கேட்டான். ‘அவ்வளவு பெரிய தொகையை எப்பிடிய்யா புரட்ட முடியும்’னு கேட்டப்போ, அவனோட தம்பி, தங்கச்சிங்க முன்வந்தாங்க. ‘இருக்கிற காட்டை வித்து அண்ணனைப் படிக்க வையுப்பா...’ன்னு சொன்னாங்க.

 தெரிஞ்சவங்க புரிஞ்சவங்ககிட்ட எல்லாம் விசாரிச்சேன். ‘நம்பகமான காலேஜ்... தைரியமா சேத்து விடுங்க’ன்னு சொன்னாங்க. ஆனா நினைச்ச சீக்கிரத்துல நிலத்தை விக்க முடியல. புள்ள சோர்ந்து போயிட்டான். ‘கவலைப்படாதய்யா... கண்டிப்பா அடுத்த வருஷம் சேத்து விட்டுடுறேன்’னு சமாதானப்படுத்துனேன்.

‘பேங்க்ல வெளிநாட்டுப் படிப்புக்கு 20 லட்சம் வரைக்கும் கல்விக்கடன் கொடுக்கிறாங்களாம்... கேட்டுப் பாருங்க’ன்னு ஒருத்தர் சொன்னாரு. போச்சம்பள்ளியில இருக்கிற இந்தியன் பேங்குக்குப் போனேன். அங்கே நான் ஏற்கனவே வாங்கின கடன் 5 லட்ச ரூபா கட்ட வேண்டியிருந்துச்சு.

‘அந்தப் பணத்தை முழுசா கட்டிடு... லோன் தர்றேன்’னு சொன்னாரு மேனேஜர். வந்த விலைக்குக் காட்டை வித்து பேங்குல கட்ட வேண்டிய கடனைக் கட்டிட்டு, ‘லோன் அப்ளிகேஷன் கொடுங்கய்யா’ன்னு கேட்டேன். ‘முதல்ல பையனை காலேஜுக்கு அனுப்புய்யா... அப்புறம் தர்றேன்’னு சொன்னார் மேனேஜர்.

மொத வருஷ பீஸ் 3 லட்சத்து 87 ஆயிரத்தைக் கட்டி, பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்துக் கொடுத்து அனுப்பி விட்டுட்டேன்... ஆனா நடையா நடந்தும், பேங்க்ல லோனுக்கு அப்ளிகேஷனே தரல. பழைய மேனேஜர் போயி புது மேனேஜர் வந்தார். அவரும் ‘6 மாசம் கழிச்சு வாய்யா’ன்னு அனுப்பிட்டாரு.

 ‘அய்யய்யோ... புள்ளைய வேற அனுப்பி விட்டுட்டோமே, இழுத்தடிக்கிறாங்களே’ன்னு பதைபதைப்பா போச்சு. ஒரு வக்கீல் சொன்ன யோசனைப்படி, அப்ளிகேஷனே தரமாட்டேங்கிறாங்கன்னு ஐகோர்ட்டுல வழக்கு போட்டேன். உடனே அப்ளிகேஷன் கொடுக்கணும்னு தீர்ப்பு வந்துச்சு. அந்தத் தீர்ப்பைக் கொண்டு போய் பேங்க் மேனேஜர்கிட்ட கொடுத்து அப்ளிகேஷன் கேட்டப்போ, ‘வீட்டுக்கு லெட்டர் வரும்... அதை எடுத்துக்கிட்டு வா’ன்னு அனுப்பிட்டார்.

அதுக்கப்புறம் என்கிட்ட எழுதி வாங்கிக்கிட்டு அப்ளிகேஷனைக் கொடுத்தாங்க. ரத்த சம்பந்தமுள்ள யாராவது ஷ்யூரிட்டி கொடுத்தாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க. எங்க உறவுக்காரரோட நிலத்தைக் கொடுத்தா, ‘நிலமெல்லாம் சரியா வராது... கட்டிடச் சொத்தா வேணும்’னாங்க.

 ‘ரத்த உறவுகள் யாருகிட்டயும் கட்டிடச் சொத்து இல்லை. என் நண்பர் ஒருத்தர் தாரேங்கிறாரு’ன்னு சொன்னப்போ, ‘ஷ்யூரிட்டியைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம், முதல்ல அப்ளிகேஷனைக் கொடு’ன்னு வாங்கிக்கிட்டார். 3 மாதம் கழிச்சு, ‘நீங்க ஷ்யூரிட்டி சமர்ப்பிக்கலே. அதனால அப்ளிகேஷனை நிராகரிக்கிறோம்’னு லெட்டர் வருது.

பதறி பேங்குக்கு ஓடுனேன். ‘நீங்கதானேய்யா ஷ்யூரிட்டிய அப்புறம் பாத்துக்கலாம்னு சொன்னீங்க’ன்னு மேனேஜரைக் கேட்டதுக்கு, ‘சரி... திரும்பவும் ஷ்யூரிட்டியைக் கொடு, பாப்போம்’னு சொன்னார்.

எல்லா டாகுமென்ட்களையும் கொண்டுபோய் கொடுத்தேன். வாங்கி வச்சுக்கிட்டு, ‘ஆர்டர் வந்தப்புறம் சொல்றேன்’னு அனுப்பிட்டாரு. அவரும் மாற்றலாகிப் போய் புது மேனேஜர் வந்தப்புறமும் லோன் கிடைக்கல. ‘புள்ளைய கண் காணா தேசத்துக்கு அனுப்பிட்டேன்யா... கருணை காட்டுங்க’ன்னு மேனேஜர் கால்ல விழுந்து அழுதேன். ‘தரமாட்டோம்’னு முதல்லயே சொல்லியிருந்தா ‘படிப்பே வேணாம், ஊருக்கு வாடா’ன்னு புள்ளைய அழைச்சிருப்பேன். ‘தர்றோம்... தர்றோம்...’னு சொல்லி ஏமாத்திட்டாங்களேய்யா...’’ - கதறி அழும் ராஜாவை சமாதானப்படுத்த நம்மிடம் வார்த்தைகள் இல்லை.

இதற்கிடையில், ஆர்மீனியாவில் கண்ணதாசனின் நிலையறிந்து இரண்டாமாண்டு கட்டணத்தை அவருடைய நண்பர்களே கட்டி விட்டார்கள். சாப்பாட்டுச் செலவுக்காக ஒரு ஹோட்டலில் பகுதி நேர வேலையில் சேர்ந்திருக்கிறார். மூன்றாம் ஆண்டு கட்டணம் கட்டவேண்டிய நிலையில், திரும்பவும் நண்பர்களிடம் உதவி கேட்க தயக்கம்.

அவரே வங்கி மேலாளர், மேலதிகாரிகளுக்கெல்லாம் போன் செய்து தன் நிலையைச் சொல்லி அழுதிருக்கிறார். எவரிடமிருந்தும் நம்பிக்கையான பதில் கிடைக்காத நிலையில், தம் மருத்துவக் கனவு கருகுவதைப் புரிந்துகொண்ட கண்ணதாசன் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்.

பெற்றோர் கடன் பெற்றிருந்தாலும் கூட பிள்ளைக்கு கல்விக்கடனை மறுக்கக்கூடாது என்று நீதிமன்றங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. அதிகபட்சம் 30 நாட்களுக்குள் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்கிறது ரிசர்வ் வங்கி விதி. எந்த விதியையுமே மதிக்காமல், ஒன்றரை ஆண்டுகள் ஒரு அபலைத் தந்தையை அலைய விட்ட வங்கி மேலாளர்களின் செயல்பாடு சரியா?

கல்விக்கடன் தொடர்பாக பல்வேறு வழக்குகளைக் கையாண்டுள்ள வழக்கறிஞர் எஸ்.பி.நெடுமாறனிடம் கேட்டோம். ‘‘கல்விக்கடனுக்கும், குடும்பத்தினரின் பிற கடனுக்கும் தொடர்பில்லை. ரத்த உறவுகளின் ஷ்யூரிட்டிதான் தரவேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. வங்கி அதிகாரிகள் செய்தது தவறு. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் வழக்கறிஞர் நெடுமாறன்.

இதுபற்றிப் பேச, இந்தியன் வங்கி புகார் பிரிவு பொது மேலாளர் மணிமாறனைத் தொடர்பு கொண்டோம். நம் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்ட அவரது உதவியாளர், ‘‘நாங்களே அழைக்கிறோம்’’ என்றார். இதழ் அச்சேறும் வரை பதில் இல்லை. கண்ணதாசனைப் போன்ற அடித்தட்டு குடும்பத்துப் பிள்ளைகளின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கத்தான் கல்விக்கடன் திட்டமே கொண்டு வரப்பட்டது. ஆனால் சில அதிகாரிகளின் அடாவடியால் பல மாணவர்களின் கனவுகள் கருகி விடுகின்றன. ஜம்புக்குட்டப்பட்டியில் கனத்த கனவுகளோடு, ஒரு உயிரும் சேர்ந்து கருகிவிட்டது.

- வெ.நீலகண்டன்
படங்கள்: சுதர்சனராவ்