எம்.ஜி.ஆருக்காக போன தூது!



தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞன் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இறங்கி ஏறும் தமிழை தெளிவுடன் பேசுவதில் அவரது பாணி இன்று வரை மறக்க முடியாத ஸ்பெஷல்! முதன்முதலாக அரசியலில் நுழைந்து வெற்றி கொண்ட நடிகர்.

நாடகம், சினிமா, அரசியல் என அத்தனை துறையிலும் தடம் பதித்தவரின் தடாலடியான பர்சனல் வாழ்க்கையும், பரபரப்பானதே. வார்த்தைகளில் மட்டு மில்லாமல் வாழ்க்கையிலும் காட்டாறாய் பொங்கிப் பிரவகித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய ‘நான் வந்த பாதை’ சுயசரிதை குறிப்புகளிலிருந்து சில நினைவுகள் இங்கே...

* டி.பி.பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஆர்.ராதா, பிரபல பாடகர் திருவாரூர் ராமசாமியுடன் எங்கள் நாடகம் காண வந்திருந்தார். அவர்களுடன், பெண்களுக்கு இருக்கிற மாதிரி நிறைய தலைமுடி, நீண்ட மூக்கு, பளிச்சென்ற கண்கள், கவர்ச்சித் தோற்ற முடைய ஒரு பையனும் வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து எங்கள் நாடகக் குழுத் தலைவர் அவ்வை டி.கே.ஷண்முகத்திடம் பேசிவிட்டு, ‘‘பையன் கணேசன், உங்கள் நாடகக் குழுவினரோடு தங்கி இருக்கட்டும்’’ என விட்டுச் சென்றார்.

நாங்கள் நிறையப் பேசி, நீண்ட நாள் பழகியவர்கள் போல ஆகிவிட்டோம். என்னைவிட அவர் வயதில் மூத்தவராக இருந்தார். நான் அவரைவிட உயரமாக இருந்தேன். நாடகத்தில் கதாநாயகியாகப் பெண் வேடத்தில் நடித்து வந்தார்.அந்த கணேசன் பிற்காலத்தில் சிவாஜி கணேசனாகி கலைத்துறையில் நீங்காப் புகழோடு விளங்கியவர். வேறு வேறு நாடகக் குழுக்களில் நாங்கள் பணியாற்றி வந்தாலும், எங்கள் நட்பு தொடர்ந்தது.

* ஒரு சமயம் கோவை சிதம்பரம் பூங்காவில் பொதுக் கூட்டம். அடுத்த நாள் ஈரோட்டிலும் அண்ணா அவர்கள் தலைமையில் ஒரு திருமணம். இரு நிகழ்ச்சிகளிலும் நானும் கலந்து கொள்கிறேன் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. எனது காரில்தான் புறப்பட்டோம். அண்ணா எப்போதும் வெளியூர் செல்லும்போது ஒரு பழைய தோல் பையில்தான் சட்டை, வேட்டி, துண்டுகளை எடுத்து வருவார்.

மாலையில் கூட்டத்துக்குக் கிளம்ப, குளித்துவிட்டு வந்து தோல் பையைத் திறந்தார். வேட்டி, துண்டு, பனியன் இருக்கிறது. ஆனால், சட்டையை எடுத்து வைக்க மறந்துவிட்டார் அண்ணா! ‘‘கடைக்குப் போய் ரெடிமேட் சட்டை வாங்கி வரலாமா?’’ என்று கேட்டேன். ‘‘வேண்டாம், இப்போதே நேரமாகிவிட்டது.

உன் சட்டைகளில் ஒன்றை எடுத்துக் கொடு. நான் போட்டுக்கொள்கிறேன்’’ என்றார் அண்ணா. அவருக்கு எனது சட்டை முழங்கால் அளவுக்குத் தொங்குகிறது. சட்டையைப் போட்டு கையில் பொத்தானையும் போட்டுக் கொண்டார். எனது முழுக்கைச் சட்டை தொங்கி அவர் கைகளையும் மறைக்கிறது. எனக்கே வேடிக்கையாக இருந்தது.

பொதுக் கூட்டத்துக்குப் போனோம். நான் பேசி முடித்த பிறகு அண்ணா எழுந்து வந்து ஒலிபெருக்கியின் அருகில் நின்றார். மக்கள் அண்ணாவின் தோற்றத்தைக் கண்டு வியந்தார்கள். அண்ணா பேசினார்... ‘‘ஏன் ஒரு மாதிரியாகப் பார்க்கிறீர்கள்? வேறு ஒன்றுமில்லை.

இங்கு வரும்போது எனது சட்டையை எடுத்துவர மறந்து விட்டேன். நான் போட்டிருப்பது, தம்பி ராஜேந்திரன் சட்டை. அதுதான் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறேன்’’ என்றார். மக்கள் அதைக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்தனர். பிறகு அண்ணா ஒரு மணி நேரம் அழகு தமிழில் பேசினார். கூடியிருந்த மக்கள் தம்மை மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

* எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை தொகுதியில் நிற்க முடிவெடுத்து நாமினேஷன் போட்டுவிட்டார். நான்தான் அந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவனே. திடீரென்று அருப்புக்கோட்டை தொகுதி யில் செல்வாக்கு படைத்த தேவர் ஒருவர் பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நாமினேஷன் போட்டுவிட்டார்.அப்போது நான் சென்னையில் இருக்கிறேன். எம்.ஜி.ஆர் மதுரையில் இருக்கிறார். நான் உடனே புறப்பட்டு மதுரை வந்து தன்னைப் பார்க்க வேண்டும் என்கிறார். அப்போதே காரில் புறப்பட்டு மதுரை வந்து அண்ணன் எம்.ஜி.ஆரைக் கண்டேன்.

‘‘அருப்புக்கோட்டை தொகுதி யில் உங்களுக்கு வேண்டியவர், தேவர் ஒருவர் தேர்தலில் நிற்க நாமினேஷன் தாக்கல் செய்துவிட்டாராம். தங்களுக்கு அவர் நெருங்கிய உறவினராம். அவரை எப்படியும் நாமினேஷன் வாபஸ் பெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து விட்டால் நாம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும்’’ என்றார்.

நான் அப்போதே அருப்புக்கோட்டைக்குப் புறப்பட்டேன். போகுமுன் அவருக்கு ‘‘தங்களைக் காண வருகிறேன்’’ என போன் பண்ணித் தெரிவித்து விட்டேன். நான் வரப்போகிற செய்தி கேட்டு அவர் வீட்டு முன் ஒரு கூட்டமே கூடி நிற்கிறது. நான் அவர்களுக்கெல்லாம் வணக்கம் தெரிவித்து விட்டு, வீட்டுக்குள்ளே போனேன். கோழி, மீன் என வகைவகையாகச் செய்து ஒரு விருந்தே ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரது துணைவியாரை அழைத்துப் பேசினேன்.

‘‘உங்கள் கணவர், அண்ணன் எம்.ஜி.ஆரை எதிர்த்துப் போட்டியிடு வது சரியில்லை. நீங்கள் வெற்றி பெறப் போவதும் இல்லை. இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்து அவரை இங்கே நான்தான் நிற்கச் சொன்னேன். நான் இந்தத் தொகுதி யில் நின்றால், என்னை எதிர்த்து நீங்கள் போட்டியிடுவீர்களா?’’ என்றேன். அதற்குள் அவரும் வந்து, ‘‘நீங்கள் போன் பண்ணியவுடனேயே நான் இதற்காகத்தான் எனப் புரிஞ்சிக்கிட்டேன். நீங்கள் சொல்கிற மாதிரியே நான் செய்துவிடுகிறேன்.

வாங்க சாப்பிடலாம்’’ என்றார். பிறகு தேர்தல் அதிகாரியை சந்தித்து, ‘வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்’ என முறையோடு எழுதி, அதில் கையெழுத்துப் போட்டு என்னிடம் கொடுத்தார். பிறகு எம்.ஜி.ஆர். வெற்றிக்காக உழைத்தார். அண்ணன் எம்.ஜி.ஆருக்குப் பெரிய திருப்தி. (நான் வந்த பாதை - எஸ்.எஸ்.ராஜேந்திரன். விலை: ரூ.500/-, அகநி வெளீயீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604408. பேசி: 9444360421)