குட்டிச்சுவர் சிந்தனைகள்



‘இறைவன் உன்னை விட்டு விலகுவதுமில்லை; இறைவன் உன்னை என்றும் கைவிடுவதுமில்லை’ - இதுதான் இறைவனைப் பற்றிய வாசகம். இப்போ இறைவனுக்கு பதிலா வேற என்னென்ன போட்டா வாசகம் சரியா வரும்னு பாருங்க...நட்பு உன்னை விட்டு விலகுவதுமில்லை; நட்பு உன்னை என்றும் கைவிடுவதுமில்லை.கஷ்டம் உன்னை விட்டு விலகுவதுமில்லை; கஷ்டம் உன்னை என்றும் கைவிடுவதுமில்லை.கடன் உன்னை விட்டு விலகுவதுமில்லை; கடன் உன்னை என்றும் கைவிடுவதுமில்லை.

மாமனார் உன்னை விட்டு விலகுவதுமில்லை; மாமனார் உன்னை என்றும் கைவிடுவதுமில்லை.இந்திய அரசு உன்னை விட்டு விலகுவதுமில்லை; இந்திய அரசு உன்னை என்றும் கைவிடுவதுமில்லை.தேர்தல் உன்னை விட்டு விலகுவதுமில்லை; தேர்தல் உன்னை என்றும் கைவிடுவதுமில்லை.இறைவன், நட்பு முதல் தேர்தல் வரை, தூண் முதல் துரும்பு வரை இருப்பாருன்னு இதன் மூலம்  நிரூபணம் ஆகுது.

கோயிலுக்கு வெளியே ‘அம்மா தாயே... அய்யா தர்ம பிரபு... தர்மம் பண்ணுங்க’ என வாய் விட்டு கூவி யாசகம் கேட்பவரை விட, வாயே திறக்காமல் கடமையைச் செய்யும் கோயில் அர்ச்சகர் அதிகம் சம்பாதிக்கிறார். ‘சில்லறையா கொடு, படில நிக்காத, மிச்சத்த அப்புறம் வாங்கிக்க’ என பேசிக்கொண்டே இருக்கும் கண்டக்டர் கொடுக்கும் டிக்கெட்களை விட, எதுவுமே பேசாமல் எமதர்மராஜா கொடுக்கும் டிக்கெட்களுக்குத்தான் மக்களிடம் மரியாதையும் பயமும் அதிகம்.

வளவளவென பேசிக்கொண்டிருக்கும் வயசான தாத்தா பாட்டிகளை விட, எதுவுமே பேசாமல் பொக்கை வாய் புன்னகையால் எல்லோரையும் தன் பக்கம் இழுப்பது கைக்குழந்தைதான்.
நிமிஷத்துக்கு நானூறு பக்க டயலாக் வைக்கும் டைரக்டர்களை விட ஒரு வரியிலும் ஒரு வார்த்தையிலும் டயலாக் வைக்கும் மணிரத்னம்தான் தமிழ் சினிமாவின் அடையாளம்.
பொண்டாட்டிகளின் பேச்சை விட பொண்டாட்டி களின் பார்வைதான் பல கணவர்களை பயமுறுத்துகிறது, பதற வைக்கிறது.

வாய் மூடாமல் பாடம் நடத்தும் வாத்தியார்களை விட, பார்வையாலேயே பயமுறுத்திப்போகும் ஹெட்மாஸ்டருக்குத்தான் சம்பளம் அதிகம். கட்சி பேச்சாளர்களை விட, அவர்களை பேச வைக்கும் கட்சித் தலைவர்களின் வருமானம் எவ்வளவு அதிகம் என்பதை உலகம் அறியும்.சரி, இப்ப என்னதான் சொல்ல வர்றீங்கன்னு நீங்க கேட்கறது தெரியுது! ஒண்ணுமில்லங்க, இதனால நான் சொல்ல வரும் செய்தி, நல்லா சம்பாத்தியமும் புகழும் வரணும்னா ‘பேச்சைக் குறை’!தமிழ் வளர்க்க சங்கங்கள் இருந்தது போய், தமிழ்நாடு முழுக்க சங்கங்கள் இருக்கிற காலத்துக்கு வந்துட்டோம். அவங்கல்லாம் எது எதுக்கோ போராட்டம் நடத்துறாங்க. ஆனா, வருஷம் 25000 கோடி ரூபாய் புழங்குற டாஸ்மாக்கை வாழ வைக்கும் குடிகாரர்கள் எதுக்கும் போராடுறதில்லை.

* பால் விலை பத்து ரூபா ஏறுனதுக்கு இத்தனை பேரு போராட்டம் பண்றாங்களே, இந்த ரெண்டு மாசத்துக்குள்ள ரெண்டு தடவை பீர் விலை ஏறியிருக்கே, மீட்டர் வட்டி மாதிரி குவார்ட்டர் விலை ஏறியிருக்கே, ஒருத்தராவது இதுக்குப் போராட்டம் பண்றாங்களா? 
* தீபாவளி சிறப்பு பஸ், பொங்கல் சிறப்பு பஸ், பழநிக்கு சிறப்பு பஸ்னு விடுறப்ப, நையன்டி போட்டுட்டு நைட்டு டைட்டாகி கிடக்கிற குடிமகன்களை வீட்டுக்குக் கொண்டு போயி விட ஒரு சிறப்பு பஸ் இருக்கா? இந்தக் கோரிக்கைய எப்படி நாம கவர்மென்டுக்குக் கொண்டு போறது?
* பத்து காசுக்கு ஒரு போன் கால் பண்ணறதுல இருந்து பல ஆயிரத்துக்கு பொருள் வாங்குற வரைக்கும் எல்லா இடத்துலயும் கஸ்டமர் கேர் இருக்கு. டாஸ்மாக்குக்கு ஒரு கஸ்டமர் கேர் வேணாமா? இல்ல நாமதான் கஸ்டமர் இல்லையா?
* பல கோடி புழங்குற பொதுப்பணித்துறையில இருந்து, ஒண்ணுமே புழங்காத விவசாயத்துறை வரைக்கும் அமைச்சர்கள் இருக்கிறப்ப, கவர்மென்ட் நடக்கிறதுக்கே கல்லா நிரப்புற நம்ம குறைகளை கவனிக்க ஒரு துறையும் அமைச்சரும் வேணாமா? இதை எப்படி நாம போராடிப் பெறுவது?
இப்போ சொல்லுங்க, போராட்டம் வேணுமா? வேணாமா?

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...

படத்தோட க்ளைமேக்ஸ்ல சிரிப்பு போலீஸ் வர்ற மாதிரி, கூடாரமே காலியான பின்னால காங்கிரசுக்குள் நுழையப் பார்க்கும் பொலிடிகல் காமெடி போலீஸ் கார்த்திக்தான்!

சவுண்ட் வாய்ஸும்
மைண்ட் வாய்ஸும்...
சவுண்ட் வாய்ஸ்: நானெல்லாம் 15 கிலோ மீட்டர் நடந்து போயி பள்ளிக்கூடம் படிச்சேன்
மைண்ட் வாய்ஸ்: அந்த பள்ளிக்
கூடத்துலதான், மத்தியானம் சத்துணவு திட்டம் இருந்துச்சு
சவுண்ட் வாய்ஸ்: எனக்கு 55 வயசாச்சு, இதுவரை ரத்தக்கொதிப்பு இல்ல
மைண்ட் வாய்ஸ்: ரத்தக்கொதிப்ப தவிர மீதி எல்லாமே இருக்கு
சவுண்ட் வாய்ஸ்: கேட்டவங்களுக்கு எல்லாம் பணத்தை எடுத்து எடுத்துக் கொடுத்தேன்
மைண்ட் வாய்ஸ்: பூரா பேரும் கொடுத்த கடனதானே கேட்டாங்க
சவுண்ட் வாய்ஸ்: எங்க போனாலும் படுத்தா பத்து நிமிஷத்துல தூங்கிடுவேன்
மைண்ட் வாய்ஸ்: பஸ்ல பக்கத்து சீட்காரன் தோளுல தூங்கி விழுந்து, அவன் கண்டபடி திட்டுவான்
சவுண்ட் வாய்ஸ்: எங்க ஊருல வந்து என் பேர கேட்டா, சின்னக் குழந்தை கூட சொல்லும்
மைண்ட் வாய்ஸ்: எல்லாக் குழந்தைங்களுக்கும் நாமதானே மூணு கண் பூச்சாண்டி
சவுண்ட் வாய்ஸ்: நான் ஓடுனா பி.டி.உஷாவால கூட பிடிக்க முடியாது
மைண்ட் வாய்ஸ்: பொண்டாட்டி அடிக்கத் துரத்தினப்போ ஓடிப் பழகினது
சவுண்ட் வாய்ஸ்: நல்லவன்னு நம்பி நிறைய ஏமாந்திருக்கேன் சார்
மைண்ட் வாய்ஸ்: நல்லவன்னு நம்ப வச்சு ஏமாத்தி இருக்கேங்கிறதுதான் சரி
சவுண்ட் வாய்ஸ்: காலைல 2 இட்லி தான் சாப்பிடுவேன்
மைண்ட் வாய்ஸ்: ஆனா, இட்லிகூட பொங்கல், வடை ஒரு மசால் தோசையும் சாப்பிடுவேன்
சவுண்ட் வாய்ஸ்: எனக்கு லவ்வுன்னாலே புடிக்காது
மைண்ட் வாய்ஸ்: ஏன்னா ஆல்ரெடி ஏழு, எட்டு லவ் ஃபெயிலியர் ஆயிடுச்சு
சவுண்ட் வாய்ஸ்: பொண்டாட்டி வார்த்தைக்கு என்னைக்கும் மரியாதை தருவேன்
மைண்ட் வாய்ஸ்: இல்லன்னா, சமையல் ரூம்ல தூக்கிப் போட்டு மிதிப்பா
சவுண்ட் வாய்ஸ்: வீட்டுல என்னைக்கும் என் வார்த்தைதான் கடைசி வார்த்தை
மைண்ட் வாய்ஸ்: ‘சரி’ன்னு சொல்றதுதான் அந்த வார்த்தை
சவுண்ட் வாய்ஸ்: என் பசங்களுக்கு மரியாதையை கத்துக்கொடுத்து வளர்த்திருக்கேன்
மைண்ட் வாய்ஸ்: ஆனா, எவனுமே கத்துக்கிட்டத வெளிய சொல்ல மாட்டாங்க
சவுண்ட் வாய்ஸ்: நான் தேவையில்லாம பேச மாட்டேன்
மைண்ட் வாய்ஸ்: நான் தேவையில்லாம நல்ல விஷயத்தப் பேச மாட்டேன்

ஆல்தோட்ட பூபதி