முதல் குடிமகனின் படம்!



போதனை செய்யும்போது குறுக்கே வந்து தொந்தரவு செய்த பூனையை ஒரு மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு பாடம் எடுத்தார் குரு. அவர் மறைந்தபின் அடுத்து அந்தப்  பொறுப்புக்கு வந்த இன்னொருவர், அந்தப் பூனை இறந்ததும் இன்னொரு பூனையை வாங்கி வந்து மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு பாடம் நடத்தினாராம். இந்தப் பூனைக் கதை போலவே சில சம்பிரதாயங்கள் தொடர்கின்றன. இதுவும் அப்படியான ஒன்றுதான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் வைசிராயாக இருந்தவர்களை ஆளுயர ஓவியமாக வரைந்து ஜனாதிபதி மாளிகையில் தொங்க விடுவது ஒரு வழக்கமாக இருந்தது.  சுதந்திரம் வாங்கியதும், அந்தப் பழைய வைசிராய்களின் படங்களை ஒரு அறையில் தனியாக அலங்கரித்து வைத்துவிட்டு, நம் ஜனாதிபதிகளையும் ஓவியங்களாக்கித் தொங்கவிட  ஆரம்பித்தார்கள்.

விருந்தினர்களுக்கு ஜனாதிபதி விருந்து கொடுக்கும் ஹாலின் சுவர்களை இந்த ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. ஒரு முழு உருவ ஓவியம், இடுப்பு வரை ஒரு ஓவியம், மார்பளவில்  ஒரு வெண்கலச் சிலை... ஒரு ஜனாதிபதி பதவி ஏற்ற சில மாதங்களிலேயே இதையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

கிராஃப்ட் மியூசியம், நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் உள்ளிட்ட முக்கியமான ஓவியக் கூடங்களின் இயக்குனர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை இதற்காக நியமித்து,  எந்த ஓவியரைக் கொண்டு ஜனாதிபதியின் உருவத்தைத் தீட்டலாம் என முடிவெடுப்பார்கள். அதன்பின் அந்த ஓவியர் ஜனாதிபதி மாளிகைக்கு வந்து, `எந்த இடத்தில் வைத்து  ஜனாதிபதியை வரையலாம்’’ என தீர்மானிப்பார். பெரும்பாலான ஜனாதிபதிகள், நூலகத்தின் பின்னணியில் தங்களை வரையவே விரும்புவார்கள். குலாம் ரசூல், சஞ்சய்  பட்டாச்சார்யா, என்.எஸ்.சுப்பகிருஷ்ணா என நாட்டின் முன்னணி ஓவியர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும்.

இப்போது பிரணாப் முகர்ஜியின் ஓவியத்தை வரைந்திருப்பவர் வாசுதேவ் காமத். தனது படிக்கும் அறையில் பொன்னிற விளக்குகளின் ஒளியில், ஒரு பாரம்பரிய நாற்காலியில்  பிரணாப் முகர்ஜி கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சியை வரைந்து தந்திருக்கிறார் வாசுதேவ். பார்த்ததுமே ஜனாதிபதிக்கு இது பிடித்துப் போய் விட்டதாம்.

- அகஸ்டஸ்