வண்டு முருகன் நாய் சேகர் கைப்புள்ள... இப்ப எலி!



கிளம்பிருச்சு வடிவேலு வண்டி!

``வணக்கம்ணே! பெருசா ஒரு பேட்டிய தட்டிவிடுங்க! `எலி’ பெரிய படமா வந்துருச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே. ஜெகஜோதியா சித்திரம் சித்திரமா எடுத்துக்  கொடுத்திருக்கு டைரக்டர் யுவராஜ் தம்பி. எனக்கு உண்மையிலே ரொம்ப நிறைவா இருக்கு’’ எனச் சொல்லிக்கொண்டே பக்கத்தில் இருந்த பையனைக் கூப்பிட்டு ``தம்பி,  அண்ணய்ங்களுக்கு அழகா ஒரு டீ கொண்டா, ஓடு ராசா!’’ என விரட்ட, ஆரம்பித்தது பேட்டி. மீனம்பாக்கம் பின்னி மில்லில் ஷூட்டிங். புதுவித ஹேர் ஸ்டைலும்  சாப்ளின்  மீசையுமாய் பார்க்கும்போதே சிரிப்பு வருகிறது. பேசினால்...

`` ‘தெனாலிராமனு’க்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவெளி?’’`` ‘தெனாலிராமன்’ ஒரு செந்தமிழ்ப் படம்ணே. அந்த மாதிரி படத்த ஒரு வளையத்தைத் தாண்டி, இப்ப இருக்கிற  வடிவேலுவைக் கொண்டு வந்து அதில் அடைக்க முடியாது. தெனாலியும் வெற்றிப் படம்தான். சில பேர் தோல்வின்னு எழுதுறாங்க. சிலர் என்கிட்டேயே, ‘தெனாலிராமன்’  தோல்விப் படமா?’ன்னு கேட்டாங்க. ‘நீங்க புரொடியூசரா?’ன்னு திருப்பிக் கேட்டேன்.

 ‘இல்லை, சொன்னாங்க’ன்னு சொல்லி தப்பிச்சிட்டாரு. படம் எடுத்தவர் புலம்பியிருந்தா பரவாயில்லை. டிஸ்ட்ரிபியூட்டர்  கண் கலங்கி ரோட்டில் விழுந்து அழுது புரண்டு  கதறியிருந்தா பரவாயில்லை. அப்படியும் இல்லை. தோல்விப் படம்னு எப்படிச் சொல்றாங்கனு தெரிய மாட்டேங்குதுண்ணே.

 போலீசைப் பாருங்க... வீட்ல சண்டைன்னா  ஒன்வேயில் சிக்கினவனை இழுத்துப் போட்டு அடிப்பாங்க. பொறணி கெளப்புறவங்க கதையும் அப்படித்தான்ணே. அந்த புரொடியூசர் ‘மறுபடியும் படம் பண்ணுங்க’ன்னு  சொன்னார். ‘இதோ, இன்னொருத்தர் கேட்டு இருக்கார். போயிட்டு வந்துடுறேன்’னு சொல்லிட்டு வந்தேன்.’’

``விடுங்கண்ணே... போயிட்டு போறாங்க. `எலி’ எப்படியிருக்கும் சொல்லுங்க?’’
`` `எலி’ ஹைலைட்ஸ் என்னான்னா, எலி இல்லாத நாடும்  வீடும் கிடையாது. என்னதான் எலியை ஒழிக்கணும்னு நினைச்சாலும் அது எந்த மூலையில் இருந்தும் வந்து உங்க  முன்னாடி நின்னு மொறைக்கும். அரண்மனையிலும் இருக்கும், குடிசையிலும் சுத்தித் திரியும். ஏதாவது அழிவு வர்றதா இருந்தா, மனுஷன் அடுத்தவன்கிட்ட அதைப் பத்தி  சொல்லமாட்டான். ஆனா, எலி உலகத்திற்கே ஒரு பேராபத்து வந்தா, அதை வெளியே சொல்லிடுற நல்ல ஆத்மா.

பூகம்பம் வந்தா, எலி தெறிச்சு ஓடுறதைப் பார்த்தாலே  புரிஞ்சுக்குவாங்க. எனக்குப் பின்னாடி புறப்பட்டுடுங்கடா மனுஷப் பசங்களா என்பதுதான் அதனோட மெசேஜ். அதை விடுங்க. எலியை வச்சுத்தான் விஞ்ஞானிகள் சோதனை  பண்றாங்க. நமக்கு போடுற ஊசியை அதுக்குத்தான் போடுறாங்க.

இப்படி ஒரு குணத்தில இருக்கிற எலியை வச்சு ஒரு கதை பண்ணிக் கொடுத்தார் யுவராஜ். 1965ல்  நடக்கிற கதை. கொள்ளைக் கூட்டத்தை பிடிக்க கிளம்பிப் போவான் இந்த  எலி. நீங்களே ஒரு எலியை அடிக்கப் போனா கை அடிபட்டு, முட்டி பேந்து, நெற்றி இடிச்சுக்கிட்டு, வெளக்குமாறு பிஞ்சி, கடைசியில எலி தப்பிச்சிடும்.

 அப்படி ஒரு  காமெடியை கதையில சொல்லியிருக்கோம். பங்களா, கிளப்னு தோட்டாதரணி போட்ட செட்டில் மகராசன் எளிமையா பின்றார். அப்படியே எலி லாங்குவேஜில்  புகுந்திட்டேன். சார்லி சாப்ளின் மாதிரி இருக்கேன்னு கூட சொல்றாங்க. எல்லார் மாதிரியும் இருக்கிறதோட, வடிவேலுதான் அசலா இதில் உள்ளே புகுந்து நிற்கிறான்.’’``குதூகலத்தைப் பார்த்தால், குழந்தைகளும் பார்க்கலாம் போல இருக்கே?’’

‘‘அவங்களே உங்களைக் கூட்டிட்டு வந்திடுவாங்க. ‘மேரா நாம் ஜோக்கர்’, ‘ஹாத்தி மேரா சாத்தி’ பார்ப்பீங்கல்ல... அதுதான் சங்கதி. ராஜ்கபூர் பல கெட்டப்புகளில்  பண்ணுவார்ல... அப்படியேதான்னு சொல்லக் கூடாது.

அய்யா இருந்த, அந்த இடத்துல அவரைத் தூக்கி வச்சு வணங்கிட்டு, நாம் விளையாட்டைப் போட்டிருக்கோம். எலி  ஓடிப்போய், டக்குனு திரும்பி யு-டர்ன் அடிக்கிறது மாதிரி பல ரகங்களில் காமெடி. டபுள் ஆக்டிங் கிடையாது. ஆனா, பல வேஷம்... பல கெட்டப். பல்லு சுளுக்கிக்கற அளவு  சிரிப்பு கன்ஃபார்ம்ணே!’’``என்னண்ணே சதாவை ஜோடி பிடிச்சிட்டிங்க..?’’

``பார்த்தீங்களா, நான் விரும்பிக் கேட்டது கணக்கா சொல்றீங்க?  நாம அசினோட எல்லாம் படத்துல ஆட்டம் பாட்டம் போட்ட ஆளுதான்ணே. வண்டு முருகன், நாய் சேகர்,  கைப்புள்ள, இந்த வரிசையில் இன்னும் ரெண்டு எட்டு போய் இருக்கிற வேஷம்ன்ணே.

‘இப்ப மத்த ஆளுங்க காமெடி பாத்திட்டு உங்க மேலே கோபம் வருது’ன்னு எங்கே பார்த்தாலும் ஜனங்க கையைப் பிடிச்சுக்கிட்டு கேள்வி கேட்கிறாங்க. பதில் சொல்லி  ஆகணும்ல! இப்ப நம்ம வீட்ல எலி க்ராஸ்ல போனா கூட, ‘நம்ம அப்பாவே போற மாதிரி இருக்கு. விட்டுடுங்க’ன்னு பொண்ணுங்க சொல்றாங்க.

என் வீட்டுக்காரி எலியப்  பார்த்தாலே கை கட்டி நின்னு வணங்குது. மொத்தத்தில் ஒரு ‘கூண்டு எலி’யை பூஜை அறையில வைத்து வணங்குறாங்கன்னு போட்டு விடுங்கண்ணே. இனிமேல் ஓய்வு இல்ல...  அடுத்து ஒரு படம் ஹீரோவா பண்ணிட்டு எல்லார் படங்களிலும் நடிக்க வேண்டியதுதான்ணே. வடிவேலு வண்டி ஃபுல் ஸ்பீடில் கிளம்பிடுச்சு!’’

- நா.கதிர்வேலன்