இந்தியக் கடல்கள் விற்பனைக்கு..!



தலைமுறை தலைமுறையாக செய்துவந்த பாரம்பரிய விவசாயத்துக்கு முடிவு கட்டியது பசுமைப் புரட்சி. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் கலப்பின மாடுகளைக் கொண்டு  வந்து நாட்டு மாடுகளை அழித்தார்கள். இப்போது ‘புரட்சியாளர்கள்’ கையில் சிக்கியிருக்கிறது கடல்... ‘நீலப்புரட்சி’ செய்து பாரம்பரிய மீனவர்களை முடக்கி, பெரு  முதலாளிகளுக்கு கடலை விற்பதற்கான முகாந்திரங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். மீனாகுமாரி அறிக்கை அதைத்தான் உறுதி ெசய்கிறது.

மக்களை அகற்றி எல்லா வளங்களையும் பெரு நிறுவனங்கள் கையில் தருவதை எல்லா அரசுகளுமே சிரமேற்கொண்டு செய்து வருகின்றன. இப்போதைய இலக்கு மீனவர்கள்.  சட்டங்களாலும் தண்டனைகளாலும் அச்சுறுத்தி அவர்களை கடல்புறத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டு பெரிய நிறுவனங்களின் அசுரக் கரங்களில் கடலை ஒப்படைக்கத்  துடிக்கிறார்கள். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அடுத்த கட்டமாக இந்தக் கடல் விற்பனைக்கு வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து 13 கடலோர மாநிலங்கள் உள்ளன. கரையிலிருந்து 12 கடல் மைல் தொலைவு வரை மாநிலத்தின் வரம்புக்கு உட்பட்ட எல்லை.  இந்தப் பகுதிக்குள் நடக்கும் அனைத்து செயல்பாடுகளும் மாநில அரசின் வரம்புக்குள் வரும். 12 முதல் 200 கடல் மைல் தொலைவு வரை ‘எக்ஸ்க்ளூசிவ் எகனாமிக் ஸோன்’  எனப்படும். இப்பகுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருபவை. 200 கடல் மைலுக்கு அப்பால் இருப்பவை சர்வதேச கடற்பரப்பு.

பெரும்பாலான இந்திய மீனவர்கள் அண்மைக்கடல் தொழில் செய்பவர்கள். குமரி மாவட்டம் தூத்தூர் உள்பட, சில பகுதி மீனவர்கள் ஆழ்கடல் தொழில் செய்வதில்  நிபுணத்துவம் பெற்றவர்கள். 1980களில், பெரு நிறுவனங்கள் தலையெடுக்கத் தொடங்கியபோது, சில பெரு முதலாளிகள் வெளிநாட்டினரை பங்குதாரர்களாகக் கொண்டு  ஆழ்கடலில் (12 கடல் மைலுக்கு அப்பால் 200 கடல் மைலைக் கடந்து) கப்பல்கள் மூலம் மீன்பிடிக்கத் தொடங்கினார்கள்.

இதை மத்தியில் இருந்த அரசுகளும் அனுமதித்தன. தைவான் உள்ளிட்ட சகலகலா நாடுகளின் மீன்பிடித் தொழில்நுட்பத்தைக் கொண்டு, மொத்த மீன்வளத்தையும் அடிமுதல்  நுனி வரை இந்தக் கப்பல்கள் அள்ளிச் சென்றன. இந்தக் கப்பல்களுக்கு எவ்வித கண்காணிப்பும் இல்லை. இந்திய மீனவன் தன் சிறு தக்கையில் மிதந்து சென்று உயிரைப் பணயம்  வைத்துப் பிடிக்கிற மீனுக்கு கணக்குப் பார்க்கிற அரசுகள்,  இப்படிப்பட்ட கப்பல்களிடம் எவ்வித வரியும் வசூலிப்பதில்லை. 

2005 வரை இதுதான் நிலை. வெளிநாட்டுக் கப்பல்கள் இந்திய மீன் வளத்தைக் கொள்ளையடிப்பதைக் கண்டித்து மீனவர் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்ததை அடுத்து  முராரி கமிஷனை அமைத்தது மத்திய அரசு. நாடு முழுவதும் கருத்துக் ேகட்பு கூட்டங்கள் நடத்தி அறிக்கையை தயாரித்தது அந்தக் கமிஷன். வெளிநாட்டுக் கப்பல்கள் அடிக்கும்  கொள்ளையையும், உள்நாட்டு மீனவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அம்பலப்படுத்தியது அந்த அறிக்கை. அதன் 21 பரிந்துரைகளை நாடாளுமன்றம்  ஏற்றுக்கொண்டது. இனி புதிதாக எந்த கப்பலுக்கும் லைசென்ஸ் வழங்கப்படாது என்றும், லைசென்ஸ் பெற்ற கப்பல்களுக்கு அவை புதுப்பிக்கப்படமாட்டாது என்றும்  அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு சிறிதளவும் மீன்பிடிக் கப்பல்களை பாதிக்கவில்லை. லைசென்ஸ் இல்லாமலும், லைசென்ஸை புதுப்பிக்கப்படாமலும் அவர்கள் சர்வ  சுதந்திரமாக தொழில் ெசய்து கொண்டே இருக்கிறார்கள். 

இந்த நிலையில், ஆழ்கடல் மீன்பிடிப்பு பற்றி புதிய கொள்கையை வகுப்பதற்காக கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை ைடரக்டர்  ஜெனரல் மீனாகுமாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக்குழு, தற்போதைய அரசிடம் சமீபத்தில் தன் அறிக்கையை அளித்தது. உள்நாட்டு மீனவர்களை கரைகளுக்கு  அருகில் முடக்கி, வளம் நிறைந்த ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை வெளிநாட்டுக் கப்பல்களுக்கு திறந்து விட பரிந்துரைக்கிறது அந்த அறிக்கை. மேலும் இந்திய மீனவர்களின்  பாரம்பரிய அறிவையும் கேலிக்கு உள்ளாக்குகிறது.

“முராரி கமிஷனில் மீனவர் சங்க பிரதிநிதிகள் இருந்தார்கள். மீனாகுமாரி கமிஷனில் அறிவார்ந்த விஞ்ஞானிகள் மட்டும்தான் இடம் பெற்றிருந்தார்கள். இந்த விஞ்ஞானிகளின்  அறிக்கை ஒட்டுமொத்தமாக இந்திய மீன்பிடித் தொழிலுக்கு முடிவு கட்டும் முயற்சி. வெளிநாட்டுக் கப்பல்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் விவகாரத்தில் பெரும் பணம்  விளையாடுகிறது...” என்று குற்றம் சாட்டுகிறார் தேசிய மீனவர் ேபரவையின் தலைவர் இளங்கோ.

“நம் பாரம்பரிய மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தொழில்நுட்பம் போதாது. ஆண்டுக்கு 12 ஆயிரம் டன் மீன்களைத்தான் இவர்கள் பிடிக்கிறார்கள். ஆனால் இதைவிட  அதிகம் பிடிக்க முடியும் என்கிறது அறிக்கை. 900 படகுகளை ைவத்திருக்கிற தூத்தூர் மீனவர்கள் சாதாரணமாக 40 ஆயிரம் டன் மீன்களை அள்ளி வருகிறார்கள். அதைப்பற்றி  அந்த அறிக்கையில் எந்த ெசய்தியும் இல்லை.

கட்டுமரம் உள்ளிட்ட அனைத்து படகு வகைகளையும் இனம் பிரித்து அடையாளம் காணும் வகையில் வண்ணம் தீட்ட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை. ஆழ்கடலில்  மீன்பிடித்தால் சேட்டிலைட் மூலம் கண்டுபிடித்து தண்டிப்பதற்காகவே இந்த ஏற்பாடு.  இனி மீன்பிடிக் கப்பல்களுக்கு லைசென்ஸ் வாங்குவது போல படகுகளுக்கும் மத்திய  அரசிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்கிறது அறிக்கை. 9 துறைகளில் என்.ஓ.சி. வாங்கினால்தான் லைசென்ஸ் வாங்க முடியும். தன் வாழ்நாளை அடகு வைத்து படகு  வாங்குகிற அன்றாடங்காய்ச்சியான மீனவன் எங்கிருந்து வாங்குவான்...” என்று கேள்வி எழுப்புகிறார் இளங்கோ.

மீனாகுமாரி அறிக்கையை ‘மீனவர்கள் மீதான வன்முறை’ என்று குற்றம் சாட்டுகிறார் தென்னிந்திய மீனவர் நல சங்கத்தலைவர் பாரதி.“இந்த அறிக்கையின் அடிப்படையில் கடல்  மீன்பிடிச் சட்டம்-2012 என்ற சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தலைமுறை தலைமுறையாக கடலை  நேசித்து அதையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஒரு ஆதி சமூகத்தை ஒட்டுமொத்தமாக வஞ்சித்து கடலை ஆட்கொள்ளத் துடிக்கிறார்கள். எந்தத் தொந்தரவும் இல்லாமல்  வெளிநாட்டுக் கப்பல்கள் வந்து மீன்பிடித்துச் செல்ல வழிவகுக்கிறார்கள். பரந்து விரிந்த கடல் மீனவனுக்கே சொந்தம்.

அவன் கடலை தொந்தரவு செய்யவில்லை. அழிக்கவில்லை. குற்றம் புரியவில்லை. அதில் வாழ்கிறான். அந்த உரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரமில்லை. சுருக்கு வலையைப்  பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். ஆனால் வெளிநாட்டுக் கப்பல்கள் சுருக்கு வலையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்கிறது மீனாகுமாரி அறிக்கை. எல்லா  விதிமுறைகளையும் முதலாளிகளுக்காக வளைக்கிறார்கள். தமிழகத்தில் 20 ஆயிரம் படகுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் சமுதாயத்தினர் கூடி, யார் எங்கு தொழில்  செய்ய வேண்டும் என்று விதிகள் வகுத்து பிரச்னை இல்லாமல் தொழில் செய்கிறார்கள். 12 கடல் மைலுக்குள் எல்லோரையும் ஒடுக்கினால் பெரிய பிரச்னைகள் எழும்”  என்கிறார் பாரதி.

அனைத்து கடலோர மாநில அரசுகளும் அறிக்கையை எதிர்த்துள்ளன. ஆனால்  முதற்கட்டமாக 270 கப்பல்களுக்கு அனுமதி வழங்க விண்ணப்பங்களை வரவேற்றுள்ளதாகச்  சொல்கிறார்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள். ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டித் தருகிற மீனவன் முக்கியமல்ல. அவர்கள் இந்த நாட்டை இயக்கவில்லை.  அவர்களுக்கு குரல் இல்லை. பெரும் முதலாளிகளின் தேசம் இது. அவர்களுக்கானதாகவே இருக்கின்றன அரசுகளும் அறிக்கைகளும்!தலைமுறை தலைமுறையாக கடலை நேசித்து  அதையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் மீனவர்களை ஒட்டுமொத்தமாக வஞ்சித்து, கடலை வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்கு விற்கத் துடிக்கிறார்கள்!

- வெ.நீலகண்டன்