விருந்து



``என்ன இருந்தாலும் நீங்க வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை! எங்க அப்பா, அம்மா உங்களை மதிச்சுக் கூப்பிடறப்ப நாம போகாம இருந்தா எப்படிங்க... அவங்க தப்பா நினைக்க  மாட்டாங்களா?’’ - கணவனிடம் கேட்டாள் சாந்தி.``உன் தங்கச்சிக்கு இது தலை தீபாவளி... அதனால அவங்க போறது சரி! நாம எதுக்கு இந்த நேரத்துல கூடுதல்  விருந்தாளியா..?’’ - இழுத்தான் ரவி.``பிரியமா கூப்பிடறப்ப எப்படிங்க மறுக்கறது?’’ - விடாமல் கேட்டாள் சாந்தி.

``பிரியம் எல்லாம் சரிதான்! கோயம்புத்தூரும், சென்னையும் பக்கத்துல பக்கத்துலயா இருக்கு? நாம போனா எப்படியும் ரெண்டு, மூணு நாளாவது அங்க தங்கறாப்ல வரும்...’’
``அதனால என்னங்க? சொந்தங்கள் வந்தா எல்லாருக்கும் சந்தோஷம்தானே! நமக்கு போக வர நிறைய செலவாயிடும்னு யோசிக்கிறீங்களா?’’

``நமக்கு செலவாகுறதை விடு. சமாளிச்சிக்கலாம். ஆனா, உங்க குடும்பம் ஏற்கனவே உன் தங்கச்சிக்கு செய்ய வேண்டிய சீர் வரிசையைச் செய்ய கஷ்டப்பட்டுக்கிட்டு இருப்பாங்க.  இந்த நேரத்துல நாமளும் போய் ரெண்டு மூணு நாள் தங்கினா அது அவங்களுக்கு பெரிய பாரமாகிடாதா?’’ என்றான் ரவி.தன்னை விட அக்கறையாக தன் குடும்பத்தை தன்  கணவன் பார்ப்பதில் சந்தோஷப்பட்டு ஆமோதித்தாள் சாந்தி.

எம்.சுப்பையா