மனக்குறை நீக்கும் மகான்கள்




ஸ்ரீ அரவிந்த அன்னை

எஸ்.ஆா்.செந்தில்குமாா்/ஓவியம்:மணியம் செல்வன்

‘உண்மையான ஞானம் பெறுவதற்குரிய நிபந்தனை என்னவென்றால் ஆரோக்கியமான பணிவுதான்.
கடவுள் உன்னைத் தாங்குகிறார்.
உன்னைப் பேணி வளர்க்கிறார்.
உனக்கு உதவுகிறார்.
உனக்கு அறிவூட்டுகிறார்.
உனக்கு வழிகாட்டுகிறார்.
இவ்வாறெல்லாம் அவர்தான்
செய்கின்றார் என்று நம்பி நீ
பணிவுடன் இருக்க வேண்டும்.’
- ஸ்ரீ அன்னை



இதுநாள் வரை உடனிருந்து வழிநடத்திய ஸ்ரீ அரவிந்தர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவரது பேருணர்வு இப்போது அகிலம் முழுதும் நிரம்பி வழிகிறது. அதை உணர்ந்து உள்வாங்கிக் கொள்ள பக்குவமான தெய்வீக மனநிலை வேண்டும். அந்த மனநிலை அன்னையிடம் இருந்தது. அரவிந்தரின் நினைவு மனதில் தோன்றும்போதெல்லாம் அவர் அருகாமையில் இருப்பதை அன்னை உணர்ந்தார். ‘அரவிந்தர் மறைந்துவிட்டார். இனி ஆஸ்ரமம் அவ்வளவுதான்’ என மனப்பால் குடித்தவர்கள் எல்லாம் மலைத்துப் போகும் விதமாக  ஆஸ்ரமத்தை அன்னை வளர்த்தெடுத்தார். 1951ம் ஆண்டு ஆசிரமத்திற்கு வருகை தந்த  சீனப் பேராசிரியர் யுன்-ஷான், ‘‘ஆசிரமம் வெகுவாக வளர்ந்துவிட்டது. இந்த  பூமியிலேயே ஒரு தெய்வீகத் தாயகம் உண்டென்றால் அது இதுதான்!’’ என்று  குறிப்பிடுகிறார். பாரம்பரியமும் நவீனமும் கலந்த புதிய கல்விமுறையைப் புகுத்தி புதிய பாரதத்தை உருவாக்கும் செயல்வீரர்களை உருவாக்கும் கல்விக் கூடங்களை அமைத்தார் அன்னை. புகழ்பெற்ற இந்த கல்விச்சாலைக்கு அன்னை வைத்த பெயர் ‘ அரவிந்தர் அனைத்துலக கல்வி கேந்திரம்’. அன்றாட ஆசிரமப் பணிகளுக்கிடையே  அன்னையின் யோகப் பணிகளும் தொடரத்தான் செய்தன. 1956 பிப்ரவரி 29ம் தேதி மாலை விளையாட்டு மைதானத்தில் கூட்டு தியானத்தின்போது அன்னை இதுவரை கண்டறியாத பேருணர்வு நிலைக்குச் சென்றார். இதுகுறித்து அன்னை பகிர்ந்துகொண்டது இதுதான்... ‘‘இன்று மாலை கூட்டு தியானத்தின்போது உங்களிடையே இறைவனது சாந்நித்யம் மிகத் திண்மையாகவும் தூலமாகவும் நிலவி இருந்தது. நான் ஓர் உயிருள்ள தங்க மயமான வடிவில் இப்பிரபஞ்சத்தை விட பெரியதொரு  உருவில் இருந்தேன். உலகையும் இறைவனையும் பிரித்து வைக்கும் ஒரு பெரிய கடினமான தங்கக் கதவின் எதிரில் இருந்தேன்.



நான் கதவைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, ‘வேளை வந்துவிட்டது’ என்று ஒரு குரல் என் உள்ளத்தில் கேட்டது. அது பிரபு அரவிந்தருடையதுதான். நானும் அந்த வேளை வந்துவிட்டதை உணர்ந்து கொண்டேன்.  உடனே என் இரு கைகளாலும் ஒரு பெரிய தங்கச் சம்மட்டியை உயரே தூக்கி கதவின் மீது பலமாக ஓர் அடி கொடுத்தேன். கதவு பொடிப் பொடியானது. உடனே மேலிருந்து அதி மானச பேரொளியும் சக்தியும் உணர்வும் புவி மீது தடைபடாது வெள்ளமாகப் பாய்ந்தன. இருபது நிமிடங்கள் இவ்வுணர்வு நீடித்தது’ என்கிறார்.
அரவிந்தரின் மகத்தான யோகத்தின் குறிக்கோள்... அன்னையுடைய வாழ்வின் இலக்கு...

எல்லாம் அன்று நிறைவேறியது. அரவிந்தர் தம்மளவில் தமது உடலில் மட்டும் வரவழைத்த அதிமன ஒளி உலகிற்கெல்லாம் பொதுவாக அந்த மாலையில் வந்து இறங்கியது. அன்று முதல் இந்த நாளை ‘இறைவனது திருநாள்’ என்று அன்னை அழைத்தார். அன்னை தம் வாழ்வின் அடுத்த பணியாக, ‘மனித குலம் முழுமைக்குமான  ஒரு பொது உலக நகரை  உருவாக்க வேண்டும்’ என்று விரும்பினார். அந்த நகரில்  ஆண்களும் பெண்களும் எல்லா தேசத்தவர்களும் சாதி, மத, தேச, இன, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அமைதியாகவும் ஒற்றுமையாகவும் அன்புடனும் வாழ வேண்டும் என்று விரும்பினார். அதற்காக புதுவையிலிருந்து 13 கி.மீ தொலைவில் 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஆரோவில் என்கிற புதிய நகரை நிர்மாணித்தார். 1968ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று 124 நாடுகள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் 5 ஆயிரம் பேர் தங்கள் சொந்த மண்ணிலிருந்து கொண்டுவந்த புனித மண்ணை  வாங்கி, தாமரை மொட்டு வடிவ வெண்ணிறத் தாழியில் வைத்து ஆரோவில் பன்னாட்டு மையத்தை அமைத்தார். அந்நகரில் தற்போது 45 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்மிக வாழ்வை  வாழ்ந்து வருகிறார்கள்.

‘‘புவியின் பரிணாமத்தில் மனிதனே கடைசிப்படி அல்ல. புவியின் பரிணாமம் தொடர்கிறது. மனிதனைக் காட்டிலும் உயரியதோர் இனம் - தேவ இனம் - இங்கே தோன்றும். இந்தப் புது இனத்தின் வருகையில் பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கே இந்த ஆரோவில்’’ என்கிறார் அன்னை.

அன்னையின் அற்புதமான தவ வலிமையால் கவரப் பெற்ற பாரதியார், வினோபா, யோகி ராம் சுரத்குமார், நேரு, இந்திரா காந்தி, ராஜேந்திர பிரசாத், கரண்சிங், லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் என பலரும் அன்னையைப் பணிந்தனர். அன்னையின் புகழ் அகிலமெல்லாம் பரவியது. 1973ம் ஆண்டு மே மாதம் முற்றிலும் உருமாறிய  தமது அதிமானுட உடலைத் தமது அகக் கண்ணால் கண்டார் அன்னை. அந்த ஒளியுடல் இந்த மண்ணுலக உடலுடன் இணையுமா அல்லது புதுப் பிறவி எடுக்க வேண்டுமா என்கிற கேள்வி எழுந்தது. விடை கிடைக்க முடியாத அந்தக் கேள்வியின் முடிவை ஆண்டவனிடம் ஒப்படைத்தார் அன்னை. ஆசிரமத்தின் பொறுப்புகளையும் தகுந்த மூத்த சாதகர்களிடம் ஒப்படைத்தார். முழுமையாக எல்லா அன்றாட அலுவல்களிலிருந்தும் விலகிக்கொண்டார். தீவிர யோக சாதனையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அன்னைக்கு வயது 95. மனம் அதீத வலிமையோடு இருந்தாலும் அன்னையின் மனவேகத்திற்கு உடல் ஒத்துழைக்க முடியாமல் தவித்தது. அன்னை உடல்நலமின்மையால் படுத்த படுக்கையானார். கேட்கும் திறன் குறைந்தது. பார்வையிலும் குறைபாடு இருந்தது. குமுத் என்ற சிஷ்யையும் சம்பக்லால், பிரணவ் ஆகியோரும் அன்னையை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார்கள். பழரசம், பால் எனக் குறைவான உணவையே அன்னை எடுத்துக்கொள்ளத் துவங்கினார். அந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பக்தர்களுக்காக பால்கனி தரிசனம் தந்தார். பல்லாயிரக்கணக்கானோர் அன்னையை தரிசித்து மகிழ்ந்தாரகள். அன்னையின் தெய்வீக கண்களைக் கண்டவர்கள் வாழ்க்கை எல்லாம் மகத்தான மாற்றம் கண்டது.

1973 நவம்பர் 17.
அன்றைய சூரியன் மிக உற்சாகமாய் உதயமானான். இயற்கையின் எல்லா அம்சமும் மகிழ்ச்சியாகவே இருந்தன. ஆனால் ஆசிரமவாசிகள் மனம் மட்டும் கவலையில் தோய்ந்திருந்தது. அன்னைக்கு திடீரென விக்கல் அதிகமானது. அன்னைக்கு தெளிவாய் தெரிந்தது. நாம் இந்த உடலில் இருந்து வெளியேறி உலகம் முழுக்க நிறைந்து ஆற்ற வேண்டிய அரும்பணி இன்னும் அதிகம் இருக்கிறதென்று.  அதற்கான நேரத்தை அன்னையே தேர்வு செய்தார். இரவு 7:25. ஸ்ரீ அன்னை தனது சுவாசத்தை காற்றோடு கலந்து ஆன்மாவை பிரபஞ்சம் எங்கும் நிறையச் செய்தார்.

இன்றைய சூரியனின் உற்சாகம் புரிந்தது. அன்னையின் ஆன்ம ஒளி சூரியனின் பொன்னொளியோடு கலந்து அரவிந்தப் பேரொளியில் இரண்டறக் கலந்தது. பக்தர்களின் தரிசனத்திற்காக 2 நாட்கள் வைக்கப்பட்டிருந்த அன்னையின் பொன்னுடல், நவம்பர் 20ம் தேதி காலை 8 மணிக்கு சந்தன மரத்தாலான பெட்டியில் வைக்கப்பட்டு, பகவான் அரவிந்தரின் திருவுடல் துயில் கொண்ட சர்வீஸ் மரத்தின் கீழிருந்த சமாதியின் மேலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.  சிவ ரூபமான அரவிந்தரின் சக்தியையும் சக்தி அம்சமான அன்னையின் சக்தியையும் சுமந்த புனித உடல்கள் அந்த சர்வீஸ் மரத்தடியில் அமைதியாய் இருந்து இப்பூவுலகை தேவலோகமாக்கி வருகின்றன. மனிதர்களை அதிமனிதனாக்கும் பணியில் இருக்கின்றன.

- ஸ்ரீ அரவிந்த அன்னையின் ஜீவ சமாதியின் மீது தலை சாய்த்து, ‘உன் சரிதம் சொல் தேவி’ என  வணங்கிய நம்முள் ‘‘இதுதாம் எமது சரிதம்... இங்குதான் இருக்கிறோம்’’ என்ற அன்னையின் அமுத மொழி கேட்கிறது. அந்த இடமெங்கும் நிரம்பி வழியும் பூவாசம் நம்முள் தெய்வீகத்தைக் கிளர்ந்தெழச் செய்ய, நமக்குள்ளும் ஒரு தாமரை பூக்கிறது. அது ஆயிரம் இதழ் கொண்ட அரவிந்தம். அந்த மலரின் மணம் ஸ்ரீ அன்னையின் தெய்வீகம். இருவரையும் நம் இதயத்துள் சுமக்கிறோம். அன்னையின் அன்பில் கரைகிறோம். இனி என்ன? எல்லாம் சுபமே!
(பூ மலர்ந்தது)

அன்னையின் சின்னம்

நடுவில்  உள்ள வட்டம் இறைவனின் மெய்யுணர்வைக் குறிக்கிறது. நான்கு இதழ்கள்  அன்னையின் நான்கு சக்திகளாகிய  மகேஸ்வரி, மகாகாளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி  ஆகியோரைக் குறிக்கின்றன. சுற்றிலுமுள்ள பன்னிரண்டு இதழ்கள் அன்னையின்  செயல்பாட்டிற்காக வெளிப்படும் பன்னிரண்டு சக்திகளைக் குறிக்கின்றன. அவை:  உண்மை, பணிவு, நன்றி, விடாமுயற்சி, ஆர்வம், ஏற்புத்திறன், முன்னேற்றம்,  தைரியம்,  நற்பண்பு, பெருந்தன்மை, சமத்துவம், அமைதி ஆகியனவாகும்.

அரவிந்தரின் சின்னம்

கீழ் நோக்கிய முக்கோணம் சத்சித் ஆனந்தத்தைக் குறிக்கும். மேல் நோக்கிய முக்கோணம் உயிர், ஒளி, அன்பு என்னும் வடிவில் அதற்கு அளிக்கும் ஆர்வத்துடன் கூடிய பதிலைக் குறிக்கிறது. இரண்டு முக்கோணங்களும் சந்திக்கும் இடம், மத்தியில் உள்ள  சதுரம் பூரணமான வெளிப்பாட்டை, சிருஷ்டியைக் குறிக்கிறது. அதன் மத்தியில் உள்ள தாமரை பரம்பொருளின் அவதாரம். சதுரத்தின் உள்ளே உள்ள நீர் பலவாயிருக்கும் தன்மையை- படைப்பைக் குறிக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்க மந்திரங்கள்

1. ஓம் நமோ பகவதே
2. ஓம் ஆனந்தமயி சைதன்யமயி
சத்யமயி பரமே
3. மதர்ஸ்ரீ அரபிந்தோ சரணம் மம:
4. தத் சவிர்துர் வரம் ரூபம் ஜோதி பரஸ்ய  தீமஹி யன்ன சத்யேன தீபயேத்
( ஸ்ரீ அரவிந்தரின் காயத்ரி மந்திரம்)
-மந்திரங்களில் விரும்பியதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வர, எண்இந்த ணியது நிறைவேறும்.

ஸ்ரீ அரவிந்த அன்னை மையங்கள் தொடர்புக்கு...

* ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம், புதுவை: 04132233604 *ஆரோவில்: 04132622204
*ஸ்ரீ  சாவித்திரி பவன்: 04132622922* ஸ்ரீ அன்னை ஆஸ்ரமம், சென்னை: 9380450621
*அரபிந்தோ சொசைட்டி, சென்னை: 044-30229566* ஸ்ரீ அன்னை ஆஸ்ரமம், கோவை: 8344145214* ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மதுரை: 8870005756 * ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம், பெங்களூரு: 9980455980 * ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம், மும்பை: 9833424337

ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் சில தகவல்கள்

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில்  2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் யோக சாதனை செய்து வருகிறார்கள். இந்த சாதனையில் நீங்களும் ஈடுபட விரும்பினால் ஆசிரமத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஆசிரம நிர்வாக விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியானவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இங்கு பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களுக்கு ஆஸ்ரமம் காலை 8 மணி முதல் 12 மணி வரையும் மதியம் 2 மணி முதல் 6 வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். அரவிந்த அன்னையின் சமாதி அருகில் குறைந்தது 30 நிமிடமாவது அமர்ந்து தியானித்துவிட்டு, நேராக வீடு திரும்புவது நலம் தரும். பிப்ரவரி 21ம் தேதியும் நவம்பர் 17ம் தேதியும் அன்னையின் அறை பொது மக்களின் தரிசனத்துக்காக அதிகாலை 3 மணிக்கே திறக்கப்படும். ஸ்ரீ அரவிந்தரின் அறை தரிசனத்திற்காக தினமும் காலை 9 மணிக்கு திறக்கப்படும். பிறந்தநாள் கொண்டாடும் பக்தர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.
அரவிந்த அன்னையின் சமாதி மீது ஆண்டுதோறும் பிப்ரவரி 11, ஏப்ரல் 14, ஆகஸ்ட் 5, நவம்பர் 7 ஆகிய நான்கு நாட்கள் மதியம் 12 முதல் 2 மணிக்குள் புதிய மணல் மாற்றுவார்கள். பழைய மணல் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஆசிரம விடுதியில் தங்கிக் கொண்டால் அதிகாலையும் மாலை 6 மணி முதல் 12 மணி வரையும் தியானம் செய்ய அனுமதி உண்டு. ஆசிரமத்தில் உணவுக்காக ரூ. 40 செலுத்தினால் மூன்று வேளைக்கும் சாத்வீகமான உணவு கிடைக்கும். புளூலைட் மெடிட்டேஷன் வாரம் தோறும் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி மாலை 7:25 முதல் 7:50 வரை நடக்கும். இது கூட்டு தியானம். விளையாட்டு அரங்கு தியானம் வாரம் தோறும்  வியாழன், ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மாலை 7:40 முதல் 8:15 வரை நடைபெறும். அன்னை பயன்படுத்திய புனிதப் பொருட்களை தரிசனம் செய்ய விரும்பினால் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை அனுமதிப்பார்கள். ஞாயிறு அன்று அனுமதி இல்லை. கண் பார்வை குறைபாடு நீக்க ஆசிரமத்தில் ‘ஐ சைட்’ என்கிற இடத்தில் 6 நாள் இலவச பயிற்சி தருகிறார்கள். தொடர்புக்கு: 0413-2233604.