கைம்மண் அளவு



நாஞ்சில் நாடன்/ஓவியம் மருது

எமது பள்ளிப்பருவம் என்பது 1953 முதல் 1964 வரை. பதினோரு வகுப்புகள். பதினோராம் வகுப்பை அன்று ‘ஸ்கூல் ஃபைனல்’ என்பார்கள். எம் காலத்தில் பால்வாடி எனப்படும் பாலர் பள்ளி, ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி என்பன இல்லை. ஆங்கில A, B, C, D வரிசை எழுத்துக்கள் அறிமுகம் ஆனது ஐந்தாம் வகுப்பில். இறுதி மூன்று வருடங்கள் இந்தியும் பயின்றோம். இந்தியில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றாலும், தேர்வு எழுத வேண்டும். இந்தியிலும் நாங்கள் சிலர் தேர்ச்சி அடைந்தோம். இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்துக்கு முந்திய காலகட்டம் அது.



இந்தி கற்றமைக்காக என்றும் நான் வருத்தப்பட்டதில்லை. இன்று ப்ரீ கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர் ஆங்கில வழியிலும் தமிழ் வழியிலும் கல்வி பெறுகிறார்கள், 15 ஆண்டுகள். இன்று அவர்கள் மொழித்திறன் பற்றி யோசிக்கும்போது மகிழ்ச்சியாக இல்லை. சரியான உச்சரிப்பு வழிகாட்டுதல் இன்றி, WORLD என்ற சொல்லை நாங்கள் ‘வொரல்டு’ என்று வாசித்தாலும், எழுதும்போது எம்மிடம் இலக்கணப் பிழை இருந்ததில்லை. ஐந்தும் மூன்றும் எட்டு என்று கூட்ட கால்குலேட்டர் பயன்படுத்தவில்லை. He என்ற சொல்லுக்கு spell check பயன்படுத்தவில்லை. பள்ளி வகுப்பு மணி அடிக்கும் முன் எண்சுவடி வாய்ப்பாடு மனப்பாடம். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மனப்பாடம்...

என்றும் எமக்குக் கல்வி சுமையாக இருந்ததில்லை. எமது கவலை எல்லாம் பசி, பாடப்புத்தகங்கள் வாங்குவது. ‘ஸ்கூல் டே’ கொண்டாட்டத்துக்கு எட்டணா கொடுக்க இயலாமல், அந்த தினத்தில் பள்ளிக்குப் போகாமல் இருந்ததுண்டு. இன்று சில மாணாக்கருக்கு அதிக மதிப்பெண் வாங்குவதற்கு தமிழ் படிப்பது சிரமமாக இருக்கிறதாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு இலக்கணம், செய்யுள், மனப்பாடப்பகுதி, துணைப்பாடம் என்பன தாங்கொணாச் சுமைகள். பத்தாம் வகுப்பு வரை மொழிப் பாடத்தில் தமிழ் கற்றவர், பதினொன்றாம் வகுப்பில் பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, சமஸ்கிருதம் எடுத்துக்கொள்கிறார்கள். ‘அம்ெமாழிகள் பயில எளிதானவை’ என்று எவரேனும் சொன்னால், அது அம்மொழிகளுக்கு நாம் செய்யும் அவமரி யாதை. வான்மீகியும் வியாசனும் காளிதாசனும் பர்த்ரு ஹரியும் துளசிதாசும் கபீரும் பிரேம் சந்தும் புழங்கிய மொழிகள் எளிமையானவையா? தமிழுக்கு மாற்றாக மாற்றுமொழிகள் எடுத்துப் பயிலும் மாணவர் தம் மொழியறிவை எவரும் சோதித்துப் பார்ப்பீரா? நன்றாக பிரெஞ்சு எழுதவும் வாசிக்கவும் போதிக்கவும் தெரிந்த, பிரெஞ்சு இலக்கியங்கள் பயின்ற பாண்டிச்சேரி பேராசிரியர் ஒருவரிடம் கேட்டேன், ‘‘ஐயா! தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்க் குழந்தைகள் பிரெஞ்சை மொழிப் பாடமாக எடுத்துப் பயிலும்போது, அவர்கள் மொழியாற்றல் எங்ஙனம் உளது?’ என்று. அவர் உடனே பேச்சை மாற்றிவிட்டார். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர் பற்றி இங்கு நான் விவாதிக்கப் போவதில்லை. தமிழனுக்கேயான இந்தத் தனிக்குணம் பற்றித்தான் என் கவலை. கற்றுக் கொள்ள எளிதாக இருக்கிறது என்றும் மதிப்பெண் வாங்கச் சுளுவாக இருக்கிறதென்றும் எந்த குஜராத்தி, ராஜஸ்தானி, மராத்தி, வங்காளி, பஞ்சாபி மாணவனும் பிரெஞ்சு கற்பதில்லை. தமிழனுக்கு ஏன் தாய்மொழி கற்க இத்தனை கடுப்பாக இருக்கிறது? பள்ளி விழாக்களில் பங்கேற்றபோது இதை நேரடியாகவே கேட்டிருக்கிறேன். பிள்ளைகள் அனைவரும் சொன்ன ஒரே பதில், ‘அப்பாவைத்தான் கேட்கணும்!’

தாய்மொழியை வெறுக்கும் அல்லது புறக்கணிக்கும் உலகத்து இனம் தமிழினமாகவே இருக்கும் போலும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வாஷிங்டனில் தமிழ் பயிற்றுவிக்கும் பள்ளிகளின் விழா ஒன்றில் பங்கேற்றேன். நண்பர் நிர்மல் பிச்சையா, பால்டிமோர் நண்பர் வேல்முரு கன் ஏற்பாடு. தமிழ்த் தம்பதியர் ஒருவரிடமிருந்து எனக்கு வந்த கேள்வி, ‘நாங்கள் எதற்காக எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர வேண்டும்?’ ஆத்திரத்துடன் சொன்னேன், ‘தமிழ் கற்றுக்கொள்ள எங்கள் நாட்டில் எட்டுக்கோடித் தமிழர்களின் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் மொழியைக் காப்பாற்றுவார்கள். ஆனால் ஒன்று எனக்குப் புரியவில்லை. டாலர் சம்பாதிக்க வந்த நீங்கள், தமிழ் கற்றுக் கொள்வதை சுமை என்று கருதும் நீங்கள், வீணான வேலை என்று எண்ணும் நீங்கள், பதினெட்டாயிரம் மைல்கள் தாண்டி வந்தும் எதற்கு தீபாவளியும் வரலட்சுமி நோன்பும் கொண்டாடுகிறீர்கள்? உங்கள் தெய்வங்களை அங்கேயே நிம்மதியாகப் பொங்கலோ, அக்கார வடிசிலோ, சுண்டலோ, வடையோ தின்றுகொண்டு இருக்க விடாமல் இங்கே தூக்கி வந்து அலைக்கழிக்கிறீர்கள்? அவர்களுக்கும் பர்கர் மற்றும் கோக் கொடுக்கலாம்தானே!’ இங்கே நின்று ேயாசித்தால் நிலைமை இவ்வாறு உள்ளது. எனக்குத் தோன்றும்... பிரெஞ்சு அல்லது சமஸ்கிருதம் பயிலும் தமிழ் மாணவர் அம்மொழிகளை எவரிடம் பேசிப் பழகுவார்கள்? மொழி கைவரப் பெறுவது என்பது பேசியும் எழுதியும் பயில்வது மூலம்தானே! சரளமாகப் பேச முடியாமல், எழுத முடியாமல், ஒரு மொழி பயின்று என்ன பயன்? இவர்கள் பயிலும் வேற்று மொழி எந்த வகையில் இவர்களுக்கு எதிர்காலத்தில் உதவும்? படிக்கிறவர்களில் காலே அரைக்கால் சதமானமேனும் பிரான்ஸ் போவார்களா? அங்கு போனாலும், இவர்கள் பேசும் பிரெஞ்சு, பிரஞ்சுக்காரனுக்குப் புரியுமா? சமஸ்கிருதத்தை எவரிடம் போய்ப் பேசுவார்கள் இந்தியாவில்? மொழி கற்பது என்பது அணில், ஆடு, படம், பம்பரம் என்று சில நூறு சொற்களைத் தெரிந்து கொள்வதா?

தமிழில் இலக்கணம், செய்யுள், கட்டுரை என்று கற்க ஆயாசப்படுகிறார்கள். பிறமொழிப் பாடங்களில் இவை ஏதும் இருக்காதா? ஒருவேளை பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் இரண்டாம் வகுப்புத் தரத்தில் பிறமொழி கற்பானோ? பிறமொழிகள் கற்றால் மதிப்பெண்கள் வாங்குவது எளிது என்கிறார்கள்! எனில் தமிழில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் ‘அணில், ஆடு’ என்றும், ‘அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா!’ என்றும் எழுதி நூற்றுக்கு நூறு வாங்கி விடலாமே! இந்த மதிப்பெண் வாங்குவது என்பது என்ன? இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருப்பவன் பள்ளியில் முதலிடம் பதினொன்றாம் வகுப்பில். மதிப்பெண்கள் அறுநூறுக்கு நானூற்று ஆறு. தமிழில் நூற்றுக்கு அறுபத்தி நான்கு. ஆரோக்கியம் என்பது கண்டதையும் தின்று, குடித்து உடம்பை ஊதிப் பெருக்கிக்கொள்வதா? மாநிலத்தில், மாவட்டத்தில், பள்ளியில் முதல் மதிப்பெண் எடுப்பது எந்தப் பெற்றோருக்கும் கர்வம் தரும் செயல்தான். முதலமைச்சர் கையில், மாவட்ட ஆட்சியர் கையில் சான்றிதழ் பெறலாம். நாளிதழ்களில் படத்துடன் செய்தி வரும். பள்ளிச் சுவரில் புகைப்படம் மாட்டி வைப்பார்கள். அக்கம் பக்கத்தில், உறவில் பெருமையும் பீற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில் மூன்றாண்டு, ஐந்தாண்டு பயின்று முனைவர் பட்டம் பெறுவதுண்டு. சில லெட்டர்ஹெட் பல்கலைக்கழகங்களில் காசு கொடுத்தால் பிஹெச்.டி. தருவார்கள். எதை விரும்புவோம் நாம்?

நாளிதழ்களில் தேர்வு விகிதமும் முதல் இடமும் என்றெல்லாம் விளம்பரம் கொடுப்பதற்காக, பள்ளி நிர்வாகமே பிரெஞ்சு எடுப்பதை ஊக்குவிக்கிறார்களாம். மொழிப்பாடத்தின் மதிப்பெண் பொறியியல் கல்வி, மருத்துவக் கல்வி, விவசாயக் கல்வி என எதற்கும் கருதப்படாமற் போகும்போது பிரெஞ்சும் ஜெர்மனும் பயின்று ஆகப் போவதென்ன?
ஒருவேளை தமிழ் மொழிப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர் அனைவருக்கும் பிற பாடங்களில் 25 போனஸ் மதிப்பெண்கள் என்று அரசாங்கம் அறிவிக்குமேயானால், மாற்று மொழி ஆசிரியர்கள் பிழைப்பற்றுப் போய்விடுவார்கள். கோவையில் இருபது சதமானம் மாணவர் தாய்மொழியாக மலையாளம் கொண்டவர்கள். ‘‘மொழிப்பாடமாக மலையாளம் பயில வாய்ப்பு இருந்தும் அவர்கள் தமிழே எடுக்கிறார்கள், திறமையுடன் கற்கிறார்கள்’’ என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பாவலர் இரணியன். அவர்களில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என்று பேதம் இல்லை. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்து மாணவர்களும் மொழிப்பாடத்தில் தமிழே எடுக்கிறார்கள். தெலுங்கு பேசும் ஒரு வைணவர் சொன்னார், ‘‘தமிழ் கற்றால்தானே எம்பிள்ளைகள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் வாசிக்க இயலும்’’ என்று. ஆனால், ‘தமிழ் எங்கள் மூச்சு’, ‘ஏப்பக் காற்று’ என முழங்கும் தமிழன், தன் பிள்ளைகள் தமிழ் கற்கச் சிரமப்படுகிறார்கள் என்கிறான். எனக்கு அந்த மாணாக்கரை நினைத்தால் கவலையாக இருக்கிறது. கோழிச் சண்டைக்கு என்றே வளர்க்கப்படும் சேவல்கள் போல, மதிப்பெண்கள் போட்டிக்கு என்றே இவர்கள் வளர்க்கப்படுகிறார்களா?

தமிழ்நாட்டின் பல கிராமங்களில் பள்ளி செல்லும் மாணவர் போகவும் வரவும் தினமும் ஐந்து கிலோமீட்டர் நடக்கிறார்கள். அல்லது முக்கால் மணி நேரம் அரசுப் பேருந்துக்கு காத்து நிற்கிறார்கள். வீட்டுக்குப் போனால் பெற்றோருக்கு வீட்டு வேலையில், காட்டு வேலையில் உதவி செய்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் பயிலக் கடினமாக இல்லை; நேரமும் இருக்கிறது. ஆனால், பள்ளி வாகனத்தில் பயணிக்கும், அல்லது பெற்றோரால் வாகனங்களில் பள்ளி வாசல்களில் கொண்டு இறக்கப்படும் மாணவருக்கு நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது.
ஒரு நாள் நடைப் பயிற்சியின்போது கவனித்தேன். காரை டிரைவர் ஓட்டுகிறார். பின் சீட்டில் தாய் அமர்ந்து பத்தோ பதினொன்றோ படிக்கும் தன் மகளுக்கு காலை உணவு ஊட்டிக் கொண்டும் வாயைத் துடைத்துக் கொண்டும் போகிறார். மாணவி மடியில் பாடப்புத்தகம் இருக்கிறது! காலையில் எதுவும் உண்ணாமல், பள்ளியில் சத்துணவு வாங்கித் தின்னும் பெரும்படை ஒன்றிருக்கிறது இங்கே!

சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி போன்ற முதன்மை நகரங்களில் வாசிக்கும் மாணவருக்கு மாற்று மொழி ஒன்று உளது மதிப்பெண் வாங்க. நாட்டுப்புறத்து நலிந்த மாணவருக்கு எத்தனை கடினமாக இருந்தாலும் தமிழை மட்டுமே கற்க இயலும். இதில் ஒரு அநீதி உள்ளது என்பது புலப்படவில்லையா? தமிழுக்கு என்று முறைவாசல் தெளிப்பது போன்ற மாநாடுகள் நடத்துகின்ற, மூன்றாம் தரத்து அறிஞர்களையும் படைப்பாளிகளையும் வெளிநாட்டுக்கு அனுப்புகின்ற, அரசாங்கக் கட்டிடங்களில் பெரிய எழுத்துக்களில் ‘தமிள் வாள்க’ என்று எழுதி வைக்கும் அரசுகளுக்கு உண்மையில் மொழி மீது ஏதும் கரிசனம் உண்டா? மராத்திய மாநிலத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். மராத்தி ெமாழிப்பாடம் பயில்வது அங்கு தவிர்க்க இயலாதது. சின்னஞ்சிறு நகரங்களிலும் விடுமுறை நாட்களில் அவர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கிறார்கள். புவனேஷ்வர் நகரில் ஒடியா மொழியில் பயிலும் தமிழ்ப் பிள்ளைகள், தமிழ்ச்சங்கத்தில் ஞாயிறுதோறும் தமிழ் பயிலுவதை நானே பார்த்தேன். தமிழனுக்கு மட்டுமே தாய் மொழித் தரித்திரியம். மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘தாரித்ரியம் கொண்டு கிடக்கானும் பாடில்லா, தானமானம் கொண்டு நடக்கானும் பாடில்லா’ என்று.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். நான் பம்பாயில் வாழ்ந்த நேரம். ஆப்ரிக்கக் கண்டத்து நெட்டா நகரிலிருந்து நாயுடு என்றொரு பெரியவர் வருவார் இந்தியாவுக்கு, என்றோ கரும்புத் தோட்டங்களுக்குக் கூலி வேலைக்குப் போன தமிழரின் சந்ததியினரான 300 குடும்பத்துக் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர பாடப்புத்தகங்கள் அச்சடித்துக் கொண்டு போக! நாயுடுவின் குழந்தைகள் வளமான வாழ்க்கை வாழ்வதனால், தனது சொந்த சேமிப்பை அதற்குச் செலவிடுகிறார். அப்படியும் ஒரு மனிதர்! நம் நாட்டில் வசதியாக வாழ்கிறவர் பிள்ளைகளுக்கு ஒரு நீதி, அன்றாடங்காய்ச்சிகளின் பிள்ளைகளுக்கு இன்னொரு நீதி! ஒன்று வழிபடப்படும் தெய்வச் சிலையாகப் போகும் கல்பாளம், மற்றொன்று வாசல் படியாகக் கிடக்கப் போகும் கல்பாளமா? இடியாப்பம் அல்லது சேவை அல்லது சந்தகை அல்லது நூல்புட்டு செய்து தின்பது சிரமமான காரியம்; எனவே நமக்கு நூடுல்ஸ் போதும் என்பது போலவா மொழிக் கல்வியும்?

எது கடினமானது இல்லை வாழ்க்கையில்? நாளை பார்க்கப்போகிற வேலை, ‘Cake Walk’ என்று சொல்வார்களே ஆங்கிலத்தில், அதுபோல எளிதானதா? சிறந்த மருத்துவராக, பொறியியலாளராக, ஓவியராக, இசைக்கலைஞராக இருப்பது என்பது எளிதானதா? விளையாட்டு வீரனாவது எளிதானதா? ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெல்வது எளிதானதா? எளிதில்லை என்பதால் முயற்சி செய்ய மாட்டீர்களா? எளிதானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வீர்களா? தமிழ்நாட்டில், சென்ற ஆண்டில் எட்டே கால் லட்சம் பேர் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதினார்கள். அவருள் ஐந்தரை லட்சம் மாணாக்கர் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கற்றவர். இரண்டே முக்கால் லட்சம் பேர் ஆங்கில வழிக்கல்வி. இந்தப் பிள்ளைகளில் சிலருக்கு மட்டும் தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது, தாய்மொழி தமிழே என்றாலும். ஏனெனில் அவர்கள் வசதியானவர் வீட்டுப் பிள்ளைகள்! நகர்மயப்பட்டவர் பிள்ளைகள்! பெற்றோர் பலர் அரசு ஊழியம், வங்கி ஊழியம், உயர்ந்த தனியார் நிறுவன ஊழியம் என மேல்நிலை ஆக்கம் பெற்றவர். அவருக்குத் தமிழ் கடினமாகத்தானே இருக்கும்? கடினமாக இருக்கிறது என்பதற்காக இட்லியை மிக்சியில் அரைத்துத் தின்பார் போலும்! ஈழத்துப் புலவன் பண்டிதர் சச்சிதானந்தம் பாடினார், ‘சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும், ஓடையிலே என் சாம்பல் கரையும்போது - ஒண் தமிழே நீ சலசலத்து ஓட வேண்டும்’ என்று. இப்பாடலில் தமிழ் என்பதற்கு மாற்றாக பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, சமஸ்கிருதம் என்று மாற்றிப் போட்டுப் பாடிப் பாருங்கள் தமிழன்மாரே!
- கற்போம்...

''பிரெஞ்சு அல்லது சமஸ்கிருதம் பயிலும்  தமிழ் மாணவர் அம்மொழிகளை எவரிடம் பேசிப் பழகுவார்கள்? மொழி கைவரப் பெறுவது  என்பது பேசியும் எழுதியும் பயில்வது மூலம்தானே!"

''இடியாப்பம் அல்லது சேவை அல்லது சந்தகை  அல்லது நூல்புட்டு செய்து தின்பது சிரமமான காரியம்; எனவே நமக்கு நூடுல்ஸ்  போதும் என்பது போலவா மொழிக் கல்வியும்?"

''கடினமாக இருக்கிறது என்பதற்காக இட்லியை மிக்சியில் அரைத்துத் தின்பார் போலும்!"