எந்த பாடப்புத்தகத்திலும் வராத தியாகிகள்! சுதந்திர தின ஸ்பெஷல்



‘‘இது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான நினைவுத் தூண்தாங்க. ஆனா, கவர்மென்ட் வைக்கல. எங்க ஊர்க்காரங்க தியாகத்தை நாங்கதான் அங்கீகரிக்க வேண்டியிருக்கு. அதனால, மக்கள் நாங்களே ஸ்தூபி எழுப்பியிருக்கோம்!’’ - பெருமித அறிமுகம் தருகிறார்கள் கடலையூர் கிராம மக்கள். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் இருக்கும் சிற்றூர் இது.

 ‘‘1942 ஆகஸ்ட் 22ம் தேதி... மகாத்மா காந்தி 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்துக்கு எல்லாரையும் அழைச்சு ரெண்டு வாரம் இருக்கும். அப்போ, எங்க ஊர்ல சுதந்திரப் போராட்ட வீரர்கள் நிறைய. இங்ேக போராட்டத்தைத் தடுக்க வந்த போலீஸ்காரங்க துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தைக் கலைச்சிருக்காங்க. பெரிய கலவரமே வெடிச்சிருக்கு. இதுல, சங்கரலிங்க முதலியார்னு ஒருத்தர் இறந்தே போயிட்டார். மாடசாமி முதலியார், ராமசாமி முதலியார்னு இரண்டு பேர் குண்டு பாய்ஞ்சு காயத்தோடு உயிர் பிழைச்சாங்க. இந்த உண்மை வெளியுலகத்துக்கு தெரியாது. ஆனா, நாங்க இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்துல கலந்துகிட்ட 34 தியாகிகளையும் நினைவுகூரணும்னு  நினைச்சோம். அதுக்காகத்தான் இந்த ஸ்தூபி!’’ - ஊரின் சுதந்திர வரலாற்றை சுருக்கமாகச் சொல்கிறார் ராமலிங்கம். ஸ்தூபி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் இவர். கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்போது உயர்ந்து நிற்கிறது, ஊர் மக்கள் எழுப்பிய நினைவுத் தூண்.

‘‘அப்போ எங்க கிராமம் முழுக்க நெசவுத் தொழில்தான். எல்லாருமே சுதந்திர தாகம் கொண்டவங்களா வாழ்ந்திருக்காங்க. நிறைய போராட்டங்கள்ல பங்கெடுத்திருக்காங்க. குறிப்பா, வெயிலுகந்த முதலியார் தூத்துக்குடி கள்ளுக்கடை எதிர்ப்பு, சத்தியாகிரகப் ேபாராட்டம்னு எல்லாத்திலும் கலந்துக்கிட்டவர். தனியாளா எதிலும் முன்னாடி நிற்பார். உயிர்ப்பலி வாங்கின அந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்துக்கும் அவர்தான் தலைமை! போராட் டத்துக்கு மறுநாள் காலையில, போலீஸ்காரங்க ஊர்ல உள்ள நெசவுத் தறி, வீடுகள்னு எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டாங்க. கிராமமே கைதாகிற நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க. அப்புறம் வெயிலுகந்த முதலியார்கிட்ட கேட்டு, முன்னணி வகிச்ச 34 பேரை மட்டும் விசாரணைக் கைதியா பிடிச்சிட்டுப் போயிருக்காங்க. இதுல, வெயிலுகந்த முதலியாரை அலிபுரம், கண்ணனூர்னு இரண்டு சிறைச்சாலையில ஒன்றரை வருஷம் அடைச்சு வச்சு கொடுமைப்படுத்தியிருக்காங்க. பாண்டி முதலியார் தஞ்சை, வேலூர் சிறைச்சாலைகள்ல பாதுகாப்புக் கைதியா இருந்திருக்கார். இவங்க தியாகத்துக்கு நினைவா ஒரு நினைவு ஸ்தூபி எழுப்பச் சொல்லி, ‘கடலையூர் தியாகிகள் அறக்கட்டளை’ சார்பா, தமிழக அரசுகிட்ட பல வருஷமா கோரிக்கை வச்சோம். அவங்க  எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஒரு கட்டத்துல சோர்ந்து போய் நாங்களே 2008ம் வருஷம் இந்த நினைவு ஸ்தூபியை உருவாக்கிட்டோம். ஈரோடு செங்குந்தர் கல்லூரி நிறுவனர் சுத்தானந்தன் இதுக்கு உதவி செஞ்சார். இதுல, அசோக சக்கரம் பொறிக்கவும் தனியா பர்மிஷன் வாங்கினோம். இந்த ஸ்தூபியில 34 தியாகிகளின் பெயர்கள் இருக்கு. அவங்களுக்கு ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 22ம் தேதி நினைவஞ்சலி செய்திட்டு வர்றோம். போன வருஷம்கூட கோவில்பட்டி சப் கலெக்டர் வந்து அஞ்சலி செலுத்தினார்’’ என்கிறார் ராமலிங்கம்.

‘‘பெரிய வீர வரலாறு கொண்டது எங்க கடலையூர். ஆனா, சின்ன கிராமம்ங்கிறதால நிறைய விஷயங்கள் மறைஞ்சிடுச்சு. எங்க ஊர்த் தியாகிகள் பத்தி  யாருக்கும் தெரியாது. எந்தப் பாடப் புத்தகத்திலும் வராதவங்க இவங்க. இந்த  ஊர்லயாவது வரக்கூடிய சந்ததிகளுக்கு இவங்களைப் பத்தி தெரியப்படுத்தணும். அதுக்கு இந்த நினைவுச் சின்னம் நிச்சயம் உதவும்!’’ - நெகிழ்ச்சியும் நம்பிக்கையுமாக முடிக்கிறார் ராமலிங்கம்!
- பேராச்சி கண்ணன்