நயன்தாராவை விட்டுக்கொடுத்து விட்டேனா? ஆர்யா அதிரடி!



‘‘‘சும்மா இரண்டு நாள் ஷூட்டிங். வந்துட்டுப் போயேன்’னு நண்பன் ஜீவா கூப்பிட்டதற்காக ‘சிவா மனசுல சக்தி’யில நடிக்கப் போனேன். அப்ப கிடைச்சது டைரக்டர் ராஜேஷ் நட்பு. அப்புறம் நாங்க ரொம்ப குளோஸ் ஆயிட்டோம். என்னோட கேரியரில் ‘பாஸ் என்கிற பாஸ்கர’னுக்கு பெரிய இடம் உண்டு. இப்போ ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’ன்னு அழகா வந்து நிக்குது. அவரோட படங்களுக்கு ஒரு காமெடி கலர் இருக்கும் பாருங்க, அதில் முதல் ரேங்க்கில் இது நிற்குது!’’ - சந்தோஷமாகப் பேசுகிறார் ஆர்யா. அடுத்தடுத்து வெற்றிகள் வந்தாலும் நம் கண்களின் ரியாக்‌ஷன் பார்க்கிற ஆர்வம் அப்படியே இருக்கிறது ஆர்யாவிற்கு!

‘‘சட்டுனு பார்த்தால் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ‘கில்லி’ நடிகர்களில் உங்களுக்கு பிரதான இடம்... இது 25வது படம். எப்படி இருக்கு இந்தப் பயணம்?’’

‘‘வேடிக்கையா... பெரிசா எந்தத் திட்டமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவன் நானாகத்தான் இருக்கும். வந்து ரொம்ப நாள் கழிச்சுதான் ‘அடடா, யாருக்கும் அவ்வளவு ஈஸியா கிடைக்காதது நம் கைவசமாயிருக்கு’ன்னு தோணுச்சு. அப்புறம்தான் ‘முழிச்சுக்கோ, பிழைச்சுக்கோ’ன்னு உஷார் ஆனேன். பாலா சார்னா அவர்கிட்ட போய் எனக்கு ரோல் வேணும்னு கேட்க முடியாது. அவருக்கே தோணினால்தான் கிடைக்கும். ‘நான் கடவுளி’ல் என்னை வேறு மாதிரி செய்தார். அதெல்லாம் லைஃப் டைம் கேரக்டர்னுதான் சொல்லிக்கணும். ஒரு மனிதன்தான், ஒரே உணர்ச்சிதான்... அதை ஒவ்வொரு டைரக்டரும் எப்படி உள்வாங்கிக்கிறாங்க! நான் ஒரே மாதிரிதானே சிரிக்கிறேன்... ஆனா, பாலா படத்தில் ஒரு மாதிரியும் மற்றவங்க படங்களில் வெவ்வேறு மாதிரியும் எப்படி அது தெரியுது? ஜனநாதன் படங்களில் நடிக்கிறதெல்லாம் வேற மாதிரி இமேஜ் கொடுக்குது.

எஞ்சினியரிங் படிச்சவன். அமெரிக்கா கௌம்புறதுக்கு ஜஸ்ட் மிஸ். அப்புறம்தான் இந்த சினிமாவை ஃபீல் பண்ண ஆரம்பிச்சேன். புரொட்யூசர் கஷ்டம் உணர்ந்திருக்கிறேன். சரியான நேரத்திற்கு வந்திருக்கேன். ரொம்ப நல்ல கதையா இருந்தா கால்ஷீட் தாராளமா கொடுத்திருக்கேன். விடியற்காலையோ, ராத்திரியோ... எந்த நேரமும் ஷூட்டிங்குக்கு ரெடி. புரொட்யூசரோ, டைரக்டரோ ஒரு சொல் சொன்னது கிடையாது. இதையே ஒரு சாதனையா வச்சுக்கலாம் பிரதர். இன்னமும் ஜாலியா யோசிக்கிற, பரபரன்னு ஆக்‌ஷன் கூட்டுற படம்னா இந்த ஆர்யா ஞாபகத்திற்கு வர்றது நல்ல விஷயம்தானே!’’

‘‘படம் எப்படி வந்திருக்கு?’’

‘‘எனக்கு எப்பவும் ராஜேஷ் சரியா வருவார். பாருங்களேன், சந்தானம் இப்ப செலக்ட் பண்ணி நடிக்க ஆரம்பிச்சிட்டார். அவரே ஆசை ஆசையா நடிக்க வந்தது இந்த சினிமா. கலகலன்னு படத்தை எடுத்துட்டுப் போறதுல அவர் இதுவரை நடிச்ச படங்களிலிருந்து இதில் ஒரே தாண்டாகத் தாண்டிப் போயிருக்கார். ‘கல்லூரியின் கதை’ படத்திலிருந்து எனக்கும் சந்தானத்துக்கும் நட்பு ஆரம்பிச்சது... அதையே ஒரு படமா எடுக்கலாம்ங்கிற மாதிரி அவ்வளவு அழகா இருக்கும். என்னோட எல்லா சந்தோஷங்களிலும், சங்கடங்களிலும் அவர் இன்வால்வ் ஆகிப்பார். என்னோட உடற்பயிற்சிக்கு வருவார், அவரை ஸ்லிம்மாக்கி அழகா வச்சதில என் பங்கு ரொம்ப இருக்கு. ஆனா, இதுக்காக என்கிட்ட பிரியமா இருக்கலாமே தவிர, நான் கூப்பிட்டேன்ங்கிறதுக்காக அவருக்குப் பிடிக்காத கேரக்டரில் நடிக்க மாட்டார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வரும்போதே ரெண்டாவது ஹீரோனு சந்தனத்தைச் சொன்னாங்க. ஒண்ணும் தப்பே இல்லை, அவரை ஹீரோன்னு கூட சொல்லலாம்!’’

‘‘தமன்னா முதல் தடவையா ஜோடி... உங்க வட்டத்திற்குள்ள வந்தாச்சா?’’

‘‘அவங்க நடிப்பு, ஸ்டைல் எல்லாம் கொஞ்சம் தூக்கலா இருக்கும். அது காமெடிக்கு ரொம்ப பொருத்தம். அவுட்டோர் ஷூட்டிங் போகும்போது லவ் சீனில் நடிக்க எனக்குக் கூட வெட்கமா இருக்கும். கூச்சமும் வரும். ஆனா, தமன்னா வெட்கமே படமாட்டாங்க. அவங்க கேமரா, வேணும்ங்கிற ஆக்‌ஷன் மட்டுமே பார்ப்பாங்க. அவுட்டோரில் கூடியிருக்கிற ஜனங்கள் கமென்ட் பண்ணினா கூட எதையும் காதில் போட்டுக்க மாட்டாங்க. அவங்ககிட்டே கத்துக்க வேண்டிய விஷயம் அது. மத்தபடி ஜாலி. தான் உண்டு, தன் வேலையுண்டுன்னு இருப்பாங்க. அவருக்கு நம்மகிட்டேயிருந்து பாடிகார்டு, ஹெல்ப், அரட்டைன்னு எதுவும் தேவைப்படாது. எங்க லவ் ஆன்ஸ்கிரீன்ல ரொம்ப நல்லாயிருக்கு!’’

‘‘கிசுகிசு வர்றதில் வருத்தம் இல்லையா?’’

‘‘இப்ப மீடியாவே வேறு தினுசில் மாறிப்போச்சு! வீடியோவில் வெட்டி, ஒட்டி, மார்ஃபிங் பண்ணி எப்படியெல்லாமோ லீக் ஆகுது! குளிக்கப் போகக் கூட பயமா இருக்கு. இப்ப நடிகைகள் மட்டும்தான் வந்துக்கிட்டு இருக்கு. நமக்கும் வந்துடுமோன்னு பயமா இருக்கு. என்னோட உலகம் அப்பா, அம்மா, தம்பி, நண்பர்களால் ஆனது. கூட நடிக்கிறவங்க பிரச்னைன்னு எதையாவது காதில் போட்டால் கேட்டுக்குவேன். ‘ஹோட்டலுக்கு சாப்பிடப் போகணும், தனி ஆளாகப் போக போர் அடிக்குது, வாங்க’ன்னு யார் கூப்பிட்டாலும் சும்மா ஒரு டிரிப் அடிப்பேன். எல்லோர் கூடவும் கம்பெனி கொடுப்பேன். மத்த சமயங்கள்ல யாரும் பாக்கறதில்ல. நடிகைகளோட இருக்கும்போது மட்டும் எல்லார் பார்வைக்கும் பட்டுடுது!’’

‘‘அனுஷ்கா கூட மறுபடியும் நடிக்கிறீங்க..?’’

‘‘என்னங்க... குற்றம் செய்த மாதிரி கேட்கிறீங்க. செல்வராகவன் படத்தில் நடிச்சதிலிருந்து அவங்க ஃப்ரெண்ட். சந்தோஷமான நட்பு. இருக்கிற இடத்தை, ஷூட்டிங் ஸ்பாட்டை கல
கலப்பா வச்சுக்கிறதில் அவங்களை மிஞ்ச முடியாது. ஒண்ணு தெரிஞ்சுக்கங்க பிரதர், நட்பா பழகத்தான் நான் நல்லா இருப்பேன்!’’

‘‘அப்போ நயன்தாராவை விட்டுக்கொடுத்துட்டீங்களா..?’’

‘‘இப்பவும், எப்பவும் நயன் எனக்கு பெஸ்ட் ஃபிரண்ட். அவங்களுக்கு கல்யாணம் ஆனா கூட என்கிட்ட அதே மீட்டரில்தான் பழகுவாங்க. நான்தான் மூடுக்கு ஏத்த மாதிரி இருப்பேனே தவிர, அவங்க காட்டுற அன்பில் கூட்டிக் குறைச்சு பார்த்ததேயில்லை. அதனால் எனக்கு அவங்களைப் பத்தி கவலையேயில்லை. ஒரே நேர்த்தியா பழகுறதில் அவங்கதான் பெஸ்ட். நான் பல சமயம் இந்த உணர்வை ஃபீல் பண்ணியிருக்கேன்!’’

‘‘நயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் நடக்குமா ஆர்யா?’’

‘‘அது நயனோட பெர்சனல். அதில் நான் நண்பனா எதையும் சொல்றது தப்பு. அதுக்காக எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு பொய் சொல்லவும் நான் தயாரில்லை. ஏதாவது சொல்லப்போய் அதை தவறா புரிஞ்சிக்கிட்டாங்கன்னா என்ன செய்றது? அவங்க ஸ்பேஸ் அது... அதில் நண்பனா இருந்தாலும் தள்ளி நிற்கணும். அப்படித்தான் நான் நிற்கிறேன்!’’
- நா.கதிர்வேலன்