கொள்ளை அழகு



கொசுத் திருவிழா!

கொசுவை வலையில பாத்திருப்பீங்க... எலெக்ட்ரிக் பேட்ல பாத்திருப்பீங்க... ஏன், ஜொள்ளு விடுறவன் வாயில கூட பாத்திருப்பீங்க. ஒரு ஊரே கொசுவுக்கு திருவிழா கொண்டாடி பாத்திருக்கீங்களா? கொசு யாரை அதிகம் கடிக்குதுன்னு போட்டி நடத்திப் பாத்திருக்கீங்களா? பாக்கறீங்களா..? பாக்கறீங்களா..? அதுக்கு நீங்க ரஷ்யா போகணும்! பல தளங்களில் அலசியாச்சு... மேட்டர் உண்மைதான். ரஷ்யாவின் பெரஸ்னிகி நகரில் நடந்தே நடந்துவிட்டது கொசுத் திருவிழா. மாம்பழம், பலாப்பழம் போல கொசுவுக்கும் இங்கு ஒரு சீஸன் உண்டு. மழை முடிந்ததும் படை எடுக்கும். நாமெல்லாம் இந்த சீஸனில் நல்ல பூச்சிக்கொல்லியாக வாங்குவோம். எக்ஸ்ட்ரா ரெண்டு கொசுவலை வாங்குவோம். ஆனால் இவர்கள் விழா எடுக்கிறார்கள். மூன்று நாள் கொண்டாட்டமாக நடைபெறும் இந்த விழாவில் பலரும் கொசு போல உடையணிந்து ஆடிப் பாடி மகிழ்வார்கள். ஆனால், ஹைலைட் அதுவல்ல. ‘சுவையான பெண்’ என்ற போட்டிதான் அனைத்திலும் டாப்!

அதென்ன சுவையான பெண்?

போட்டியாளர்களான இளம்பெண்களை டிரவுசர் டி-ஷர்ட் மட்டும் அணிவித்து கொசு நிறைந்த இடத்தில் 20 நிமிடங்கள் விடுவார்கள். அதன் பின்பு அவர்கள் உடலில் கொசுக்கள் கடித்த - தடித்த இடங்களைக் கணக்கிடுவார்கள். கொசுக்கள் எந்த பெண்ணை அதிக கடித்ததோ, அவர்தான் ‘உலகின் சுவையான பெண்’.  ‘‘தண்ணி அடிக்காத, தம் அடிக்காத... சரி விகிதத்தில் சாப்பிடுகிற மனிதர்களைத்தான் கொசு கடிக்கும்! ஆக, இதுவும் ஒரு வகை உள்ளார்ந்த அழகிப் போட்டிதான்!’’ என்கிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடால்யா பரமனோவா.இது தவிர, இங்கே ‘கொசு கால்கள்’ (Mosquito Legs) என்றொரு போட்டியும் உண்டு. மெல்லிய கால்கள் கொண்ட அழகிகளே இதில் வின்னர்ஸ். இத்தனை கிளுகிளுப்பாக நடத்துவதானால் நாம இலை சுருட்டுப் புழுவுக்குக் கூட திருவிழா எடுக்கலாமே!
- ரெமோ