பந்தா



பிரகாஷ் ஷர்மா

ஆடம்பர சொகுசு காரில் வந்திறங்கினார் முதலாளி. ஒன்றரை கோடி ரூபாய் விலையாம்! பெரிய ஆப்ரிக்க யானை போல இருந்தது அந்த கார். தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ‘‘நமக்கெல்லாம் மூணு மாசமா சம்பள பாக்கி. நாலு  வருஷமா இன்க்ரிமென்ட் போடவே இல்லை! ஒரு அவசரத்துக்கு கடன் கேட்டால் கூட  ‘கஜானா காலி’னு கேஷியர் கை விரிக்கிறாரு. ஆனா, முதலாளி மட்டும்  வருஷம் ஒரு தடவை காரை மாத்திடறாரு!’’ இதைக் கேட்டே ஆகணும் என தொழிற்சங்கத் தலைவர் கோபத்தோடு முதலாளியைப் பார்க்கப் போனார். நேரடியாக காரைப் பற்றி எப்படிக் கேட்க? சம்பளம், தொழிலாளர் என மென்று விழுங்கினார். முதலாளியிடமிருந்து நேரடியாக - நேர்மையாக பதில் வந்தது.

‘‘வியாபாரம் ரொம்ப மந்தமாகிடுச்சுப்பா!  கடன்  பாக்கி இருபது கோடியை எட்டிடுச்சு! நமக்கு வரவேண்டிய தொகை எல்லாம் மொத்தமா ஒரு இடத்துல சிக்கிருச்சு. அது வர்ற வரைக்கும் பொறுத்துத்தான் ஆகணும். கடன்காரனுங்க  பார்வைக்கு என் நிலைமையை பந்தாவா காட்டிக்கத்தான் கஷ்டத்தோட கஷ்டமா இப்படி வெளிநாட்டு காரெல்லாம் வாங்கி வலம் வர்றேன். கடன்காரங்களுக்கு  சந்தேகம் வந்தா, கழுத்தைப் பிடிச்சு கம்பெனியை மூடிடுவானுக!’’ தொழிற்சங்கத் தலைவர் தலைகுனிந்தபடி வெளியேறினார்.