கவனிப்பு



கு.அருணாசலம்


‘‘அத்தே! பாத்ரூமிலே வெந்நீர் எடுத்து வச்சிட் டேன். குளிச்சுட்டு வாங்க! நான் டிபன் ரெடி பண்றேன்!’’ - மருமகள் உமாவின் கவனிப்பு இன்று பலமாக இருந்தது.
‘‘சரிம்மா! இந்தா போறேன்... குளிச்சுட்டு வர்றேன்!’’ என மாற்று டிரஸ் சகிதம் குளியல் அறைக்குள் சென்றாள் பூரணி.
மணி காலை எட்டைத் தாண்டி விட்டது. ‘அத்தை புறப்படணுமே’ என்ற பதற்றம் உமாவிடம். சட் சட்டென்று தோசையை வார்த்தாள். மூன்று தோசையை சுடச்சுட சட்னி சகிதம் டைனிங் டேபிளில் வைத்தாள்.
பூரணி வந்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிட்டாள். அக்கறையாக கைப்பையைக் கொண்டு வந்து மாமியாரிடம் கொடுத்தாள் உமா.
‘‘அத்தே! இதுல பணம் எல்லாம் இருக்கு. ஜாக்கிரதையா போயிட்டு வாங்க! தாகம் எடுத்தா குடிக்க தண்ணி பாட்டிலும் வச்சிருக்கேன்!’’ என்றவளிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் பூரணி.
ரோட்டில் இறங்கியதும், ‘‘அக்கா! நில்லுங்க, நானும் வர்றேன்!’’ என பக்கத்து விட்டு சிவகாமியின் குரல்.
‘‘வாம்மா சிவகாமி! உன்னையும், உன் மருமக அனுப்பிட்டாளா? வயசான கட்டைங்க நம்மளை இப்படி ரேஷன் கடைக்கு அனுப்பிட்டு அவளுக வீட்ல சீரியல் பார்க்குறாளுங்க!’’
‘‘ம்... ம்... இப்படியாச்சும் மாசத்துல ஒருநாள் நல்ல கவனிப்பு கிடைக்குதே... நடையை எட்டிப் போடுங்கக்கா!’’ என்றாள் சிவகாமி!