சசிபெருமாளின் தியாகம் மதிக்கப்படுமா?‘‘மது குடிப்பதால் ஒருவர் குடும்பம் மட்டுமல்ல; சமுதாயமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. அதனால்தான் முதலில் மதுவை ஒழிக்கப் போராடுகிறேன். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை ஒரு நாளும் எனது போராட்டம் ஓயாது!’’ - 2013ல் `குங்குமம்’ நேர்காணலில் சசிபெருமாள் சொன்ன வார்த்தைகள் இவை. குடிகாரர்களின் காலில் விழுந்து, `குடிக்காதீர்கள்’ எனக் கெஞ்சியவர். எத்தனையோ அவமானங்கள், கிண்டல்கள்... அனைத்தையும் சகித்து, பொறுத்து மதுவை ஒழிக்க தீவிரம் காட்டியவர். தன் கடைசி மூச்சு வரை அதற்காகவே தீர்க்கமாகப் போராடிய சசிபெருமாளின் மரணம், தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. மதுவிலக்கு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்திருக்கிறது.


சசிபெருமாளுக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் இ.மேட்டுக்காடு என்கிற கிராமம். முதல் மனைவி கோவிந்தம்மாள் இறந்துவிட்டார். அவருக்கு நவநீதம், விவேக் என இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவி மகிழம். இவருக்கு கவியரசி என்ற பெண் குழந்தை இருக்கிறது. வாரம் ஒரு நாள்தான் அவர் வீட்டிற்கே செல்வார். மற்ற நேரங்களில் மது ஒழிப்புதான் வாழ்க்கை என்றிருந்தவர். மதுவுக்கெதிராக நாற்பதாண்டு காலப் போராட்டம். அவரது இயற்பெயர் பெருமாள்தான். மறைந்த முன்னாள் நடிகர் சசிகுமாருடன் அவருக்கு நீண்டகால நட்பு. சசிகுமார் தீ விபத்து ஒன்றில் இறந்துபோக, அவர் நினைவாகத்தான் ‘சசிபெருமாள்’ ஆனார்.

‘‘குடிக்கெதிரா தனி ஒரு ஆளா அய்யா நடத்தின போராட்டம் சாதாரணமில்ல. அவரால பத்து மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கு. ரொம்ப பேர் `குடி’யை விட்டுருக்காங்க. நிறைய குடும்பங்கள் சந்தோஷ வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கு. எப்படியாவது தமிழகத்தை மது இல்லா மாநிலமா மாத்திடணும்னு ஒவ்வொரு நாளும் நினைச்சார். அதப் பத்தியே பேசிட்டு இருப்பார்!’’ - சொல்லும்போதே விசும்பி, வார்த்தை வராமல் தடுமாறுகிறார் அருள்தாஸ். கடந்த பத்து வருடங்களாக சசிபெருமாளோடு பயணிப்பவர். சசிபெருமாள் நடத்திய, ‘தேசிய மக்கள் கூட்டமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர்.

‘‘அய்யா எட்டாம் வகுப்புக்கு மேல படிக்கலை. விவசாயம்தான் தொழில். கூடவே, அவர் தாத்தாகிட்ட படிச்ச சித்த வைத்தியத்தையும் செஞ்சிக்கிட்டிருந்தார். ஒரு நாள்கூட யோகா பண்ணாம இருந்ததில்ல. சின்ன வயசுல காந்திஜியின் `சத்திய சோதனை’ புத்தகத்தைப் படிச்சு அந்தக் கொள்கைக்கு தன்னை மாத்திக்கிட்டார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டப்போ காமராசர் இவருக்கு 'அறத்தொண்டர்’னு பட்டம் கொடுத்திருக்கார். எப்பவுமே ‘வெள்ளை உடை, மொட்டைத் தலை, குல்லா’ன்னு ரொம்ப எளிமையா இருப்பார். கையில ஒரு பைசா கூட வச்சிருக்க மாட்டார். பல நாட்கள் கூட பட்டினியோடு போராட்டக் களத்தில் துணிச்சலா நிப்பார். உண்ணாவிரதப் போராட்டம்னு முடிவெடுத்துட்டா அதுக்கு ஏத்த மாதிரியான யோகாசனங்களைச் செய்வார். அப்போதான் உடல் தாக்குப்பிடிக்கும்னு சொல்வார். அப்படிப்பட்டவரின் மரணத்தை தற்கொலைன்னு கேஸ் பதிஞ்சிருக்கு போலீஸ்!’’ என்கிறபோது அவர் குரலில் ஆத்திரமும் ஆதங்கமும்! ‘‘அவர், மதுவுக்கு எதிரா மட்டும் போராடல. கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிறைய போராட்டம் நடத்தியிருக்கார். ஏழைகளுக்கு இலவசக் கல்வி தர `சுதந்திர தேசம்’னு ஒரு பள்ளிக்கூடம் கூட நடத்தியிருக்கார். ரேஷன் கடை அநியாயங்கள், நில ஆக்கிரமிப்பு, ஊழல்... இதுக்கெல்லாம் எதிரா அவர் நடத்தினதெல்லாம் வலுவான போராட்டங்கள். அதனால் சம்பாதிச்ச விரோதங்களும் மிரட்டல்களும் கொஞ்ச நஞ்சமில்ல. மது ஒழிப்புக்காக 300 அடி டவர்லயே ஏறி போராடினவர். இப்போ, அதைவிட சின்ன டவர்ல ரத்த வாந்தி எடுத்து இறந்தார்னு சொல்றதை நம்ப முடியல. அவரோட மரணத்துல சந்தேகம் இருக்கு!’’ என்கிறார் அருள்தாஸ் வேதனையாக!

அவரைத் தொடர்கிறார், சசிபெருமாள் தேசிய மக்கள் கூட்டமைப்பின் பொருளாளர் கலைச்செல்வி: ‘‘அய்யாவோட தீவிரமான மது ஒழிப்புப் போராட்டத்த டி.வியில பார்த்து ஆர்வமா அவரோட பங்கெடுத்தவ நான். கடைசியா அவரை அப்துல் கலாம் அய்யா துக்க தினத்தில் பார்த்தது. அன்னைக்கு அரசு பொது விடுமுறை அறிவிச்சது. ஆனா, டாஸ்மாக் கடைகளுக்கு லீவு விடலை. நானும், சசிபெருமாள் அய்யாவும் தலைமைச் செயலகத்துக்குப் போய் பெட்டிஷன் கொடுத்தோம். அதிகாரிங்க ‘பார்க்கலாம்’னு சொன்னாங்க. நாங்க, சத்தியாகிரகம் நடத்துவோம்னு சொன்னோம். இதனால, எங்கள கைது பண்ணி பக்கத்துல இருந்த காவல் நிலையத்துல வச்சாங்க. அப்புறம்தான், அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிச்சாங்க. அன்னைக்கு சாயங்காலம், அங்கிருந்த அதிகாரி, `அடுத்து என்ன பண்ணப் போறீங்க?’னு கேட்டார். அதுக்கு சசிபெருமாள் அய்யா, `மார்த்தாண்டம் போறேன். அங்க பள்ளிக்கூடம் பக்கத்துல இருக்கிற டாஸ்மாக் கடையை நீதிமன்றம் அகற்றச் சொல்லி ஆயிரம் நாட்களாகிடுச்சு. இன்னும் மூடலை. அதை வலியுறுத்தி போராடப் போறேன்’னு சொன்னார். அவர் உடல்நிலை பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். எந்த நோயும் அவருக்குக் கிடையாது. அவர் சித்த வைத்தியர் மட்டுமல்ல... ஆயுர்வேதம், அக்குபஞ்சர்னு இயற்கை வைத்தியம் எல்லாம் தெரிஞ்சவர். எப்பவுமே ‘எனக்கு இன்னும் நிறைய வேலையிருக்கு’ன்னு ஓடிட்டே இருந்த அவர், இப்ப தற்கொலை செஞ்சிக்கிட்டார்னு சொல்றாங்க. அதுதான் வேதனையா இருக்கு!’’ என்கிறார் அவர் உருக்கமாக!

‘‘நாங்க இப்போ அரசுக்கு மூணே கோரிக்கைதான் வைக்கிறோம். ஒண்ணு, அய்யாவோட மரணத்துக்கு ஐகோர்ட் நீதிபதி தலைமையில நீதி விசாரணை வேணும். ரெண்டாவது, தமிழகத்துல பூரண மதுவிலக்கைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கணும். அதுவரை அய்யாவோட உடலை நாங்க வாங்குறதா இல்லை. ஊருக்காக உழைச்ச மனுஷன்... அவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தா யாருக்கும் கண்ணீர் வரும். அவர் பிள்ளைகள் விவசாயமும் நெசவுத் தொழிலும் செஞ்சு பிழைக்கிறாங்க. கருணையுள்ள ஒரு ஜனநாயக நாட்டுலதான் நாம் இருக்கோம்னா, அவரது தியாகம் மதிக்கப்படணும்னா, அய்யா குடும்பத்துக்கு அரசு வேலையும் நிதியுதவியும் வழங்கப்படணும்!’’ - அழுத்தமாக முடிக்கிறார் அருள்தாஸ்.
- ேபராச்சி கண்ணன்