ஆபாச ஒழிப்பா? அராஜகமா?



போர்னோ தடை போர்க்கொடி

போர்னோகிராபி என்பதை நீங்கள் எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? ஆபாசப்படம் என்றா? ஆபாசம் என்றால் vulgarity. அதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். போர்னோகிராபியை ‘வயது வந்தோருக்கான பாலியல் பொழுது போக்கு' என மொழிபெயர்க்க வேண்டும். முடியுமா? அதற்கு இந்தியா இன்னும் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது!’’ - இந்த விஷயத்தில் யாரிடம் பேசினாலும் இப்படியொரு செக் வைக்கிறார்கள். கடந்த வாரம் இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 857 பாலியல் இணையதளங்களை இந்தியாவில் பார்க்கத் தடை செய்ததும்... பின்பு ‘அச்சச்சோ சாரி’ என தடை தளர்த்தியதும் பலத்த எதிர்ப்புகளைச் சம்பாதித்திருக்கிறது!

‘‘தடை செய்தது எந்த தளமாக இருந்தாலும் சரி... எந்த அறிவிப்பும் விவாதமும் இல்லாமல் இப்படியொரு தடையை அரசு செய்திருப்பது நிச்சயம் சட்டத்துக்குப் புறம்பான சர்வாதிகாரப் போக்கு!’’ எனத் துவங்குகிறார் ப்ரனேஷ் பிரகாஷ். இணைய சுதந்திரத்துக்காக இயங்கும் சென்டர் ஃபார் இன்டர்நெட் & சொசைட்டி அமைப்பின் பாலிஸி டைரக்டர் இவர்.
‘‘ஆரம்பத்தில் தடை செய்யப்பட்ட 857 தளங்களில் College Humor, 9GAG போன்ற பாலியல் தொடர்பில்லாத அப்பாவி தளங்களும் உண்டு. ஒரு தனி மனிதர், ‘இந்தத் தளங்களை எல்லாம் தடை செய்ய வேண்டும்’ என ஒரு லிஸ்ட் வைத்திருந்திருக்கிறார். அதை அப்படியே வாங்கி, ‘இதெல்லாம் உண்மையிலேயே போர்னோ தளங்களா’ என சரி பார்க்கக் கூட நினைக்காமல் அப்படியே தடை செய்யக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு புத்தகத்தைத் தடை செய்தால் கூட அதற்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிறது இந்திய சட்டம் (s.95 of the Cr.P.C.). ஆனால், இத்தனை தளங்களை தடை செய்திருக்கும் மத்திய அரசு, இதை ரகசியமாக வைத்திருக்கும்படி இணைய இணைப்பு நிறுவனங்களிடம் சொல்லியிருக்கிறது. இந்தக் கபடம் நிச்சயம் ஆபத்தானது!’’ என்கிறார் ப்ரனேஷ்.

ஒரு தனி மனிதர் என இவர் குறிப்பிடுவது, இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வாஸ்வானி என்பவரைத்தான். போர்னோகிராபிக்கு எதிராக அவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்திருக்கும் வழக்குதான் இந்தத் தடைக்கு அடிநாதம். அவர் கோரிக்கைப்படி போர்னோகிராபியைத் தடை செய்ய கோர்ட்டே முன் வரவில்லை. கடந்த மாதம்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, ‘‘போர்னோகிராபிக்கெல்லாம் தடை விதிக்க முடியாது’’ என திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியிருந்தார். ‘‘நாளைக்கே ஒருவர் வந்து, ‘நான் 18 வயது நிரம்பியவன். நான்கு சுவர்களுக்குள் நான் என்ன செய்தால் உங்களுக்கென்ன’ எனக் கேட்டால் என்ன செய்வது?’’ என அவர் குறிப்பிட்டிருந்தார். கோர்ட்டே செய்யத் தயங்கிய ஒரு சென்சிட்டிவ் விஷயத்தில் அரசு அவசரப்பட்டிருப்பது ஏன் என்பதே மனித உரிமையாளர்களின் கேள்வி. ஒருவேளை பண்பாடு, கலாசாரம் என முலாம் பூசி தன்னிச்சையாய் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கினால், மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பார்களா என நோட்டம் பார்த்திருக்கலாம். ஆனால், மக்கள் விடவில்லை. 857 தளங்களைத் தடை செய்த ஓரிரு நாட்களிலேயே பலத்த எதிர்ப்பு கிளம்ப, அவற்றில் சில தளங்கள் மீதான தடையை நீக்கியிருக்கிறது அரசு. ‘‘குழந்தைகளை ஆபாசப்படுத்தும் வக்கிர தளங்களுக்கு மட்டுமே தடை!’’ என சமாளிபிகேஷன் செய்திருக்கிறார் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். ஆனால், இதையும் ஒப்புக்கொள்ளவில்லை மனித உரிமையாளர்கள்.

‘‘இதுவரை போர்னோகிராபியை முற்றிலுமாக எந்த நாடும் தடை செய்ததில்லை. செய்யவும் முடியாது. அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் பாலியல் வக்கிரத்தை மட்டும் மிக நுட்பமாகக் கண்டறிந்து தடை செய்திருக்கிறார்கள்... தண்டித்திருக்கிறார்கள். சைல்டு போர்னோகிராபியை ஒழிக்கிறோம் என்ற பெயரில் இப்படி கண்டபடி இணையத்தை முடக்குவது எங்குமே நேர்ந்ததில்லை!’’  என்கிறார் ப்ரனேஷ் காட்டமாக! பொதுவாக போர்னோகிராபியை எதிர்ப்பவர்கள் அதற்குச் சொல்லும் மிக முக்கியமான காரணம், அது பாலியல் வக்கிரத்தைத் தூண்டி, பலாத்காரத்துக்கு வழி வகுக்கும் என்பதுதான். அது உண்மையா? ‘‘நிச்சயமாக இல்லை’’ என மறுத்துப் பேசுகிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.
‘‘அதற்கும் இதற்கும் தொடர்பே இல்லை. சினிமாவில் கூடத்தான் ஆபாசம் காட்டுகிறார்கள். ஏன், அதைப் பார்க்கிற ஒருவன் பலாத்காரத்தில் ஈடுபட மாட்டானா? பலாத்காரம் செய்கிறவனுக்கு காரணம் எல்லாம் தேவையில்லை.

போர்னோகிராபிக்கே அடிமையாகிப் போனால்தான் அது ஒருவனை பாதிக்கும். என்னைக் கேட்டால், இப்படிப்பட்ட தடைகளால் எந்தப் பலனும் இல்லை என்றே சொல்வேன். இணையத்தில் தடை என்றால் இது வாட்ஸ்அப்பில் பரவும். அல்லது, வேறு வகையில் பயணிக்கும்!’’ என நிதர்சனம் பேசுகிறார் அவர். இந்தக் கோணத்திலும் இணையவாசிகள் எதிர்ப்பைக் கொட்டுகிறார்கள். ‘‘2010ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படியே உலகில் மொத்தம் 42,337 பாலியல் இணையதளங்கள் இருந்தன. இன்று இன்னும் அதிகமாகியிருக்கும். அதில் வெறும் சில நூறு தளங்களை தடை செய்தால் போதுமா?’’ எனக் கேட்கிறார்கள் அவர்கள். ஆக, இங்கே குறிவைக்கப்பட்டது போர்னோகிராபி அல்ல. அதை முற்றிலுமாகத் தடை செய்யும் உத்தேசமெல்லாம் இங்கே யாருக்கும் இல்லை. இன்று போர்னோ தளங்கள்... நாளை ஆளும் கட்சியை விமர்சிக்கும் தளங்கள், பத்திரிகை... இப்படி தடைகளை விரிவுபடுத்தக் கூட ஐடியா இருந்திருக்கலாம். நல்லவேளை, மதவாதம் வீசுகிற கலாசாரத் தூண்டிலைக் கடிக்காமல் இந்த விஷயத்தில் நாம் சுதாரித்தது அதிர்ஷ்டவசமே!

அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில்  சைல்டு போர்னோகிராபியை மட்டும் மிக  நுட்பமாகக் கண்டறிந்து தடை செய்திருக்கிறார்கள்... தண்டித்தும் இருக்கிறார்கள்.

விளம்பரம் வருதுங்க... தடை பண்ணுங்க!

‘போர்னோகிராபியை ஒழித்தே தீருவேன்’ என சுப்ரீம் கோர்ட்டில் ஒற்றைக்கால் தவம் செய்யும் கமலேஷ் வாஸ்வானி, தனது பொதுநல மனுவில் போர்னோகிராபி வேண்டாம் என்பதற்கு இப்படிக் காரணங்களை அடுக்குகிறார்.
* போர்னோகிராபி என்பது ஒழுக்கத்தின் மீது முளைத்த புற்றுநோய்!
* அது பிளேக் நோயை விட மோசமானது. சமூகத்தைக் கொல்லக் கூடியது.
* எய்ட்ஸ் நோயை விடவும், ஹிட்லரை விடவும் கொடூரமானது போர்னோகிராபி.
* தங்களால் இப்படி முடியவில்லையே என்ற பாலியல் தாழ்வு மனப்பான்மையை பார்ப்பவர்களுக்கு உருவாக்குகின்றன போர்னோ படங்கள்.
இந்த எல்லாவற்றுக்கும் மேலாக ‘இப்படிப்பட்ட இணையதளங்களைப் பார்க்கும்போது தேவையற்ற விளம்பர பாப்-அப்கள் தோன்றுவதால் இந்த இணையதளங்களைத் தடை செய்ய வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார் வாஸ்வானி.
 
- நவநீதன்