சூரிய நமஸ்காரம்-எனர்ஜி தொடர்



ஏயெம்

சென்ற வாரம் கடைசியாகப் பார்த்தது உத்தானாசனமாகும். இது சூரிய நமஸ்காரத்தின் ஒரு நிலையாக உள்ளது. உத்தானாசனத்தையும் சேர்த்து இதுவரை மூன்று நிலைகளைப் பார்த்துள்ளோம். இதில் ஒவ்வொரு நிலையுமே முக்கியம்தான். ஒரு நிலை இன்னொரு நிலையைச் செய்ய உதவுகிறது. அதே நேரம், ஒரு நிலையில் இருக்கும் மூச்சு அடுத்த நிலையில் மாறும். முன்பு பார்த்த ‘அஷ்டாங்க யோகா’வில் இந்த உத்தானாசனத்திலிருந்துதான், குதித்து வேறு நிலைகளுக்குப் போவது நடக்கும். இதையே ஒரு காலைப் பின்புறம் மேல் தூக்கிச் செய்தால், ஏக பாத உத்தானாசனம்; ஒரு காலில் பத்மாசனம் போட்டுச் செய்யும் இரு ஆசனங்களும் உள்ளன. இந்த நிலையிலிருந்து அர்த்த உத்தானாசனம் செய்யும் வழக்கமும் உள்ளது.

உத்தானாசன நிலை, வயிற்றிலும் அது சார்ந்த பகுதிகளிலும் முக்கியமாக வேலை செய்தது எனில், அடுத்த நிலை எங்கு வேலை செய்கிறது என்று நீங்களே கவனித்துப் பாருங்கள். ஒவ்வொரு நிலையிலும் பல வேலைகள் நடக்கின்றன என்றாலும், அவற்றில் ஒன்றிரண்டு வேலைகள் பிரதானமாக அமையும். அதுதான் அந்த நிலையின் / ஆசனத்தின் ஆதாரமாக இருக்கும்.

தொடக்கத்தில் யோகா ஆசிரியரின் வழிகாட்டலில் பயிற்சி செய்தாலும், பிறகு மெல்ல மெல்ல நீங்களே பயிற்சி பற்றியும், அதை சுயமாய் செய்வது பற்றியும் யோசித்து செயலில் இறங்கி விடவேண்டும். இதனால் நிறைய தெரிந்து கொள்ளலாம். புதிய அனுபவங்கள் கிடைக்கும். ஓர் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆர்த்தி என்பவர், எனது குழு யோகா வகுப்பிற்கு வந்தார். ஆரம்பத்தில் எளிய ஆசனங்களைக்கூட செய்யத் தடுமாறிய அவர், வெகு விரைவில் கடினமான ஆசனங்களையும் செய்யும் நிலையை எட்டிவிட்டார். அதன்பின், ‘‘இன்னும் கடினமான ஆசனங்களைச் செய்யவேண்டும்’’ என்று கேட்பார். அவருக்கு யோகா வகுப்பு இப்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் அவர் செய்யும் விதம் பற்றி ஓரிருவராவது பாராட்டாமல் விடுவதில்லை. ‘‘நீங்களும் ரெண்டு மூணு மாசத்துல இது மாதிரி செய்வீங்க’’ எனப் புதியவர்களுக்கு அவர் நம்பிக்கை தருவார்.
நான் இப்போது வியப்பது அவரது யோகா வகுப்புகளின் முன்னேற்றத்தைக் கண்டு அல்ல. அவரது வேலைகளின் எண்ணிக்கையையும், விழித்திருக்கும் நேரத்தையும் கண்டுதான்! ஒரு நாள் கூட உடல்வலி என்றோ, நிறைய பேர் சொல்வது போல குடும்பச் சண்டையால் பிரச்னைகள் என்றோ, பிள்ளைகள் வளர்ப்பில் இன்று உள்ள சவால்கள் பற்றியோ அவர் புலம்பிக் கேட்டதில்லை. இதற்கு முக்கியக் காரணம்... அவர் எதைச் செய்தாலும், ஒன்றில் தொடங்கி மெல்ல மெல்ல தன்னை வளர்த்துக்கொள்கிறார். தொடர்ந்து தன்னை அதற்காகத் தயார் செய்துகொள்கிறார். அதனால் எடுக்கும் ஒவ்வொன்றிலும் வளர்ச்சி இயல்பாக நடக்கிறது. உத்தானாசனத்திற்கு அடுத்துள்ள இரு முக்கிய நிலைகளுக்கு இனி போகலாம்.

* உத்தானாசன நிலையிலிருந்து, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே, இடது காலை மட்டும் பின்புறமாக நன்கு நீட்டவும்.
* இரு உள்ளங்கைகளும் வலது காலின் இரு பக்கங்களில் இருக்கும்.
* இப்போது வலது முட்டி முன்புறமாக மடங்கி இருக்கும்.
* இடுப்பு முதல் தலை வரையுள்ள பகுதி மேல்புறம் நோக்கிப் பார்க்கட்டும்.
* பின்புறம் கொண்டு சென்ற இடது காலின் விரல்கள் நீட்டியவாறு தரையில் பதிந்து இருக்கும். 
* இடது காலின் முட்டி தரையில் படாமல், கால் நன்கு நீண்டிருக்கும். 

இது கிட்டத்தட்ட எல்லா மரபிலும் இருக்கும் நிலையாகும். சூரிய நமஸ்காரத்திற்கு தனித்த அடையாளத்தை தரக்கூடிய நிலைகளுள் இதுவும் ஒன்று. நாங்கள் பின்பற்றும் யோக மரபில் இதை ‘கோதா பீடம்’ என்று சொல்வார்கள். சில மரபுகளில் இந்த நிலையை ‘ஏகபாத பிரசரணாசனம்’ என்பர். சிலர் இந்த நிலையில் இரு கைகளையும் மேல் புறம் தூக்கி, இரு உள்ளங்கைகளையும் இணைத்து பின்புறம் வளைப்பதும், சிலர் இரு கைகளையும் மடிந்த காலுக்கு அருகில் வைத்துக்கொண்டு முதுகை பின்புறம் நன்கு வளைத்து மேல் நோக்கிப் பார்ப்பதும் உண்டு. இனி அடுத்த நிலை: அதோ முக ஸ்வானாசனா

* அந்த கோதா பீட நிலையிலிருந்து, ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியே விட்டபடி இடுப்பை மேல்புறமாக உயர்த்தி வலது காலை, இடது காலை ஒட்டி நெருக்கமாகக் கொண்டு செல்லவும்.
* இப்போது தலை, இரு கைகளுக்கு இடையில் தரையை நோக்கி இருக்கும். பார்வை வயிற்றை நோக்கியிருக்கும். முகவாய் நெஞ்சைத் தொடட்டும்.
* இரு பாதங்களும் நன்கு தரையில் படிந்திருக்கட்டும். கால்கள் நன்கு நீட்டப்பட வேண்டும்.
* இந்த நிலை தலைகீழான ‘வி’ வடிவில் இருக்கும்.
* படிந்து இருக்கும் உள்ளங்கைகளை அழுத்தி, தோள் பட்டை கழுத்துப் பகுதியில் மேலும் அழுத்தம் தர வேண்டும்.
* முட்டிகள் நன்கு அழுந்தித் தொடைகள் இறுக்கமாகும்.
* அதோ முக ஸ்வானாசனத்தின் இறுதி நிலையில் இருக்கும்போது, வயிற்றில் இருந்த காற்று முழுதும் காலியாகி இருக்கும். இதனால், அப்பகுதி, குறிப்பாக அடிவயிறு முழுவதும் உள்ளிழுக்கப்பட்டிருக்கும்.

சூரிய நமஸ்காரத்தின் மிக முக்கியமான நிலைகளில் இதுவும் ஒன்று. இதற்கு நிறைய சிறப்புகள் உள்ளன. யோகாவில் பந்தங்கள் (internal locks) என்பவை விசேஷமானவை. இவற்றை சரியாகச் செய்தால், உரிய பலன்களும், அதன் மூலம் வாழ்க்கையில் உயர்வும் கிடைக்கும். பந்தங்கள் செய்ய எல்லா ஆசனங்களும் ஏற்றவை அல்ல. சில ஆசனங்கள்தான் பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட ஆசனங்களில் இந்த அதோ முக ஸ்வானாசனாவும் ஒன்று. அதிலும் நின்ற நிலை ஆசனங்களில் இது மட்டுமே பந்தங்கள் செய்ய உகந்தது. ஜாலந்திர பந்தம், உட்டியான பந்தம் மற்றும் மூல பந்தம் ஆகிய மூன்று பந்தங்களை இந்த நிலையில் செய்ய முடியும். இந்த பந்தங்களைக்கூட படிப்படியாக சிலர் எடுத்துச் செல்வர். முதலில் பந்தத்திற்குத் தயாராவது, பிறகு உடலையும் மூச்சையும் தயார் செய்தல், அதன் பிறகு வயிற்றைச் சுருக்குதல், அதன் பின்பு உள்ளுக்கு இழுத்தல், பின்னர் உள்ளுக்கு இழுத்து அதன் பின் வயிற்றை மேல் நோக்கி இழுத்தல், அதன் பிறகு இழுத்து பின் நிறுத்துதல் என்று படிப்படிப் பயணம் மிகவும் சரியாக இருக்கும். இப்படிச் செய்யும் பந்தங்கள் மூலம் உடலின் தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன, உடலின் சக்தி மையங்களில் ஏற்ற இறக்கம் இருந்தால், அவை சரியாகும்.

பந்தங்கள் செய்யும்போது, அவற்றின் பல நிலைகளைச் செய்வதோடு, துவங்கிய நிலையை திரும்பவும் முறையாக வந்து சேர வேண்டும். திடீரென பாதியில் விட்டால் அல்லது மிகவேகமாக எதையாவது இறுக்கிக் கொண்டால் பிரச்னைதான். சூரிய நமஸ்காரம் செய்வதில் பிரச்னை உள்ளவர்கள், அதோ முக ஸ்வானாசனா நிலையை வேறு வழிகளில் அடையலாம். அதாவது, முட்டியிட்டுச்செய்யும் ஆசன வரிசை மூலமோ, அல்லது நேரடியாகவோ போய்ச் செய்யலாம். இந்த நிலையில் பந்தங்கள் செய்வது தவிர, முட்டிகளுக்குப் பின்னுள்ள பகுதியின் நீட்டலுக்கும் வேலை செய்யலாம். கெண்டைக்கால் தசைகள், மேல் முதுகு, தோள் பட்டை, வயிறு, கைகள் என்று குறிப்பிட்ட தேவைகளுக்காக வேலைகள் செய்யலாம். இப்படி இந்த நிலையை மாற்றாமல் வேலை செய்வது ஒரு முறை. இன்னொன்று, அந்த நிலையை மாற்றி அதன் மூலம் வேறு பலன்கள் அடைவது. ஓர் உதாரணத்திற்கு, இந்த நிலையிலிருந்து ஒரு காலை மேல்பக்கமாகத் தூக்கி உடலை மேலும் நீட்டலாம். அதே காலை மடித்து, முன் பக்கம் கொண்டு வரலாம். இந்த நிலையிலிருந்து வசிஷ்டாசனத்திற்குப் போய் கைகளை வலுப்படுத்தலாம். வேறு பல ஆசனங்களைச் செய்து விட்டு மீண்டும் இந்த நிலைக்கே வரலாம். இப்படி சூரிய நமஸ்காரத்தின் இந்த இரு நிலைகளை வைத்தே பல ஆசனங்களைச் செய்யலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாது, உடல் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த ஆசனத்தை உரிய முறையில் மாற்றி அமைத்துப் பலன் பெறலாம்.
குறிப்பாக அதோ முக ஸ்வானாசனா நிலையிலிருந்து மூச்சில் நிறைய வேலைகள் செய்யலாம். அதோடு இந்த நிலையில் இருந்தும் சில மூச்சுகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் பிராணாயாமம் பற்றி கொஞ்சம் பார்ப்பது உபயோகமாக இருக்கும். ஆசனத்தில்தான் எத்தனையோ விதங்கள், எவ்வளவோ வேலைகள் என்றால், பிராணாயாமத்தில் சூட்சுமங்கள்- தளங்கள்- நுட்பங்கள்- அணுகுமுறைகள் என்று ஒரு பட்டியல் உண்டு!

''யோகாவில் பந்தங்கள் என்பவை விசேஷமானவை. இவற்றை சரியாகச் செய்தால், உரிய பலன்களும், அதன் மூலம் வாழ்க்கையில் உயர்வும் கிடைக்கும். "
(உயர்வோம்...)
படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: கஸ்தூரி கோஸ்வாமி