தியாகத்தை அவமானபடுத்தும் தேசம் இது! சுதந்திர தின ஸ்பெஷல்



வ.உ.சிதம்பரனாரைத் தெரியும். திருப்பூர் குமரனைத் தெரியும். காசிராஜனை, ராஜகோபாலை, மந்திரக்கோனாரை, பெஞ்சமின் பெர்ணாந்துவை, வளேரியனை, மாடசாமியை, தங்கவேலை, அருணாசலத்தை எத்தனை பேருக்குத் தெரியும்..? திமிர் பிடித்த உப்பள அதிகாரி லோன்துரையை கோடரியால் வெட்டிக் கொன்று, அதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலை அக்னியை கொழுந்தெழச் செய்தவர்கள் காசிராஜனும் ராஜகோபாலும். அந்த சம்பவத்தின்போது, லோன்துரையால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்து சிறைத் தண்டனைக்கும் உள்ளானவர் மந்திரக்கோனார். பெஞ்சமின் பெர்ணாந்து மூன்று ஆயுள் தண்டனைகளுக்கு உள்ளானவர். தன் வாழ்நாள் சேமிப்பை எல்லாம் நேதாஜியிடம் தந்து ஐ.என்.ஏவில் இணைந்து, சிப்பாயாக களம் கண்டு, அசாமில் இருட்டுச் சிறைக்குள் அடைந்து கிடந்தவர் மாடசாமி. அஞ்சல் நிலையத்தைக் கொளுத்தி ஆயுதம் பறிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டு நெடுங்காலம் சிறையில் கிடந்தவர் தங்கவேல்.

இன்று நாம் விடுகிற சுதந்திர மூச்சுக்காக தங்கள் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த இந்தத் தியாகிகளைப் பற்றி சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எந்தப் பதிவும் இல்லை. சுதந்திரத்திற்குப் பிறகேனும் இவர்களுக்கு உரிய மரியாதை தந்தோமா? இவர்களின் வாரிசுகளை பாதுகாக்கிறோமா? ‘‘சுதந்திர தினத்தன்னிக்கு அழைச்சு ஒரு துண்டைப் போர்த்தி அனுப்புறதோட சரி. சாப்பாட்டுக்கு வழியில்லாம, பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வழியில்லாம வாரிசுகள் எல்லாம் நிலைகுலைஞ்சு நிக்கிறாங்க. மிஞ்சியிருக்கிற சில தியாகிகள் பென்ஷனுக்காக அலைஞ்சு அலைஞ்சே ஆயுளைத் தொலைச்சுட்டாங்க...’’ - ஆதங்கமாகச் சொல்கிறார் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், வாரிசுகள் நல சங்கத்தின் தலைவர் தவசிமுத்து.

சுதந்திரப் போரில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த தியாகிகளுக்கு வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வழங்கும் திட்டம் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதை முன்னுதாரணமாகக் கொண்டு மத்திய அரசும் ஒரு பென்ஷன் திட்டத்தை உருவாக்கியது. தற்போது, 6 மாதங்களுக்கு மேல் சிறையடைக்கப்பட்ட தியாகிகளுக்கு மத்திய அரசு 20,000 ரூபாய் வழங்குகிறது. 6 மாதங்களுக்கு கீழ் சிறைப்பட்டவர்களுக்கு மாநில அரசு 10,000 ரூபாய் தருகிறது. தவிர, ரயில்வே பாஸ், பஸ் பாஸ் வசதிகளும் தரப்பட்டன. வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தியாகிகள் இறந்து விட்டால், மனைவிக்கு பென்ஷன் கிடைக்கும். மனைவி இறந்தபிறகு, திருமணமாகாத பெண் பிள்ளை அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் பிள்ளை இருந்தால் அவர்களுக்கு நீட்டிப்பு செய்யப்படும்.

ஆனால், ‘‘இதில் பல விஷயங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. மிஞ்சியிருக்கும் தியாகிகளும், வாரிசுகளும் அதிகாரிகளால் மிகவும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அரசாணை கடைப்பிடிக்கப்படுவதே இல்லை...’’ என்று வெதும்புகிறார்கள் தியாகிகளின் வாரிசுகள்.
தியாகி தூத்துக்குடி மாடசாமிக்கு (எஸ்.எம்.சாமி) 4 பிள்ளைகள். மனைவியும் இறந்து விட்டார். இரண்டு மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் மணமாகி விட்டது. கடைசிப்பெண் இந்திராவுக்கு மணமாகவில்லை. ஆதரவில்லாத நிலையில், ஒரு ஹோட்டலில் பாத்திரம் தேய்த்து ஜீவனம் செய்கிறார் அவர். 

‘‘அப்பா சிங்கப்பூர்ல வேலை பார்த்தார். நேதாஜி ஐ.என்.ஏவை தொடங்கின உடனே, தான் சேர்த்து வச்சிருந்த 7000 டாலர் பணத்தைக் கொடுத்து படையில சிப்பாயாவும் சேர்ந்தார். அசாம், மணிப்பூர் பகுதிகள்ல வெள்ளையர்களை எதிர்த்து சண்டை போட்டிருக்கார். கைது செய்த இந்திய சிறைக்காவலரை ‘நீயெல்லாம் இந்தியனாடா’ன்னு கேட்டு அடிச்சிட்டார். அதுக்காக இருட்டுச் சிறையில அடைச்சுட்டாங்க. சுதந்திரத்துக்குப் பிறகு அப்பாவுக்கு பென்ஷன் தந்தாங்க. அம்மாவுக்கும் கிடைச்சுச்சு. அம்மாவுக்குப் பிறகு, திருமணம் செய்துகொள்ளாத பெண் பிள்ளைகள் இருந்தா அவங்களுக்கு பென்ஷனை நீட்டிக்கணும்னு விதி இருக்கு. ஆனா எவ்வளவோ போராடிப் பார்த்தும் எனக்குக் கிடைக்கலே.  நீதிமன்றமே பென்ஷன் தரச் சொல்லி ஆர்டர் கொடுத்திடுச்சு. அதிகாரிகளைப் பாக்கப் போனா ‘இதெல்லாம் அந்தக்கால விதிமுறை, இப்போ பொருந்தாது’ன்னு விரட்டுறாங்க. சகோதரர்கள் கை விட்டுட்டாங்க. பித்தப்பையில கல் இருந்து அறுவை சிகிச்சை செஞ்சிருக்கேன். அதிகாரிகள் ஏறெடுத்துக்கூட பாக்க மாட்டேங்குறாங்க...’’ என்று வருந்துகிறார் இந்திரா.

சேலம், தம்மம்பட்டி காதர் மொய்தீனுக்கு 86 வயது. தந்தை ஷேக் மைதீன் கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறையில் கிடந்தவர். காதர் மொய்தீனும் பிரிட்டிஷார் வாகனங்களை கல் வீசி உடைத்ததற்காக சிறையில் இருந்தவர். பென்ஷன் கேட்டு, பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை கேட்டு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கேட்டு நடந்து நடந்து கால் தேய்ந்து விட்டது. ‘‘பென்ஷன் கிடைக்கலேங்கிற வருத்தம் கூட எனக்கு இல்லை. அதிகாரிகளோட அலட்சியத்தையும், அவமரியாதையையும்தான் தாங்கமுடியல...’’ என்று கண்கலங்குகிறார் காதர் மொய்தீன்.
நாங்குனேரியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தியாகி அருணாசல நாடாரின் மனைவி. அப்பா தங்கவேலு ‘மெஞ்ஞானபுரம் போஸ்ட் ஆபீஸ் சதி வழக்கி’ல் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.  அருணாசலம் ‘வெள்ளையனே வெளியேறு’, உப்பு சத்தியாகிரகப் போராட்டங்களில் பங்கேற்று தம் இளமையை சிறை இருட்டில் கழித்தவர். உடலெங்கும் பிரிட்டிஷ் லத்தியும் பூட்ஸ்களும் கிழித்த தடங்களோடு வாழ்ந்தவர். இவரின் தீரத்தைக் கண்டு தங்கவேல், தன் மகளை மணம் முடித்துத் தந்தார். சுதந்திரத்துக்குப் பிறகும் மதுவிலக்கு, விலைவாசி உயர்வு என்று பெரும்நாளை போராட்டக் களத்திலேயே கழித்த அருணாசலம் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஜெயலட்சுமி இப்போது பென்ஷன் வாங்குகிறார். ஆனால் ரயில் பாஸ் கேட்டு நடையாக நடக்கிறார்.

‘‘தியாகிகளையும் அவர்களோட வாரிசுகளையும் அதிகாரிகள் சக உயிராகூட மதிக்கிறதில்லை. நடைமுறைக்குப் பொருந்தாத விதிமுறைகளை எல்லாம் சொல்லி அலைக்கழிக்கிறது, அவமதிக்கிறதுன்னு ரொம்பவே புண்படுத்துறாங்க. கணவர் இறந்தபிறகு மனைவி பேருக்கு பென்ஷனை மாத்தணும்னா, ‘எனக்கு வேறு திருமணம் ஆகவில்லை’ன்னு ஒரு சான்றிதழ் வாங்கிட்டு வரச் சொல்றாங்க. எழுபது வயசுல ஒரு தியாகியின் மனைவி இந்த சான்றிதழை எங்கே போய் வாங்குவாங்க? வங்கியில நடக்கிற கொடுமை கொஞ்சமில்லை. ‘சும்மாதானே வாங்குறே’ங்கிற மனநிலை வங்கி மேலாளர்களுக்கு. சத்துணவுக்கூடத்துல சோறு பொங்குற ஆயா வேலைக்குக் கூட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடமில்லை. வ.உ.சியோட பேத்தியே புறக்கணிக்கப்பட்டிருக்காங்க. புன்னைக்காயல் வளேரியன் பெர்ணாந்து, நேருவால் பாராட்டப்பட்டவர். 5 வருஷம் ஜெயில்ல கிடந்தார். அவரோட மகள் வடை சுட்டு வியாபாரம் பண்றாங்க. ரெண்டு பேத்திகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆளில்லை. ‘லோன்துரை கொலை வழக்கு’ல முதல் குற்றவாளியாகி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, காந்தி, நேருவெல்லாம் தலையிட்ட பிறகு ஆயுள் தண்டனையா குறைக்கப்பட்ட காசிராஜனோட பிள்ளைகள் ரேஷன் கடையில அத்துக்கூலியா வேலை செய்யிறாங்க. அந்த சம்பவத்துல ஆயுள் தண்டனைக்கு உள்ளான மந்திரக்கோனாரோட பிள்ளைகள் சீமைக்கருவேலம் வெட்டிப் பிழைக்கிறாங்க. சொத்து சுகத்தையும், குடும்பத்தையும் இழந்து உண்மையாவே களத்துல நின்ன பல போராளிகளோட பேர் வரலாற்றிலேயே இல்லை. அவங்க குடும்பங்களோட வாழ்க்கை, அங்கீகாரத்துக்கும், சாப்பாட்டுக்கும் ஏங்கி ஏங்கியே முடிஞ்சு போயிடுது. கொடியேத்தி இனிப்புக் கொடுக்கிறதோட முடிஞ்சு போகாம குறைந்தபட்சம் அந்தந்த பகுதிகள்ல சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவு கூர்ந்தாலாவது தியாகிகளோட ஆன்மா சாந்தியடையும்...’’ - மிகுந்த வேதனை தொனிக்கச் சொல்கிறார் தவசிமுத்து.

''கொடியேத்தி இனிப்புக் கொடுக்கிறதோட  முடிஞ்சு போகாம குறைந்தபட்சம் அந்தந்த பகுதிகள்ல சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவுகூர்ந்தாலாவது தியாகிகளோட ஆன்மா சாந்தியடையும்..."

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர், சுப்பிரமணியம், பாண்டியன்