ஆரஞ்சு மிட்டாய் - விமர்சனம்
தனிமையின் துயர் தோய்ந்த நடுத்தர வயது மனிதரின் உப்பு சப்பற்ற, கொஞ்சமே சுவாரஸ்யம் கொண்ட, ஒருநாள் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றமே ‘ஆரஞ்சு மிட்டாய்’. ‘முதுமை இரண்டாவது குழந்தைப் பருவம்’ என்பதைக் காட்டியிருக்கும் விதத்தில் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் இயக்குனர் பிஜூ விஸ்வநாத்திற்கு பூங்கொத்து! கிராமத்தில் ஒதுக்குப்புறத்திலும் ஒதுங்கியும் இருக்கும் விஜய்சேதுபதிக்கு நெஞ்சுவலி(!) வருகிறது. அவசரகால மருத்துவருக்காகவும் ஆம்புலன்ஸ் வண்டிக்காகவும் காத்திருக்கிறார் சேதுபதி. வந்து சேர்வது ரமேஷ் திலக்கும், ஆறுமுக பாலாவும். அவரைக் கூட்டிச்செல்லும் பணியில் அவர்களுக்கான அனுபவங்களாய் மட்டுமே நீள்கிற கதை.

அதகளம் செய்யும் சேதுபதியை மருத்துவமனையில் சேர்த்தார்களா, என்ன ஆனது என்பதெல்லாம் நம் முடிவுக்கே விடப்படும் மீதிக் கதை. ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. சற்றே கனத்த தொப்பை, களைப்போடு கூடிய சோர்ந்த நடை... நுரைத்த தலை, காவி வேட்டி என 55 வயசு பெரியவரின் வயதையும் மீறிப் பொருந்துகிறார். எப்போதும் யோசித்துக்கொண்டு, ஏதோ ஒரு குற்ற உணர்வில் தவித்துக்கொண்டு, எல்லாவற்றையும் விமர்சித்துக் கொண்டு செல்லும் சேதுபதியின் நடிப்பு ரொம்பவும் பாந்தம். அதிகமானால் மெலோ டிராமாவாக ஆகியிருக்கக் கூடிய எந்தப் பகுதிக்கும் இடம் வைக்காமல் நின்று நிதானிக்கிறார். புரிந்து கொள்ள முடியாத பாத்திரத்தில் கடைசி வரை அச்சு அசலாக நின்று காட்டியிருப்பதில் விஜய்சேதுபதியின் கொடி பறக்கிறது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து சென்ற ரமேஷ் திலக் இதில் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். கூட்டிச் செல்லும் நோயாளியிடம் தனிமையில் இறந்த தகப்பனை அடையாளம் காண்பதும், எகிறி பின் தணிவதுமாக ஒரு சாதாரண மனிதனின் மன இயல்பை துளி பிசகாமல் சித்தரிக்கிறார். எதிலும் பணம் பார்க்கிற, ஆனாலும் மனிதத்துவம் இழக்காத டிரைவர் ஆறுமுகம் பாலா எளிமையில் மனம் அள்ளுகிறார். தனிமையும் முதுமையும் ஒரு மனிதரை எப்படியெல்லாம் ஆக்கிவிடும் என்பதை படிப்படியாகத் தெரிந்துகொள்ளும் முயற்சிகளில் ரமேஷ், பாலா இரண்டு பேருமே மனம் கவர்கிறார்கள். குறுக்கிடும் ரமேஷ் திலக்கின் காதல் எபிசோட் கொஞ்ச நேரமே வந்தாலும் சுறுசுறு. ரமேஷ் திலக் ஜோடி அஸ்ரிதா கலப்படம் இல்லாத முகம்! சேதுபதியின் கேரக்டர் இன்னும் சரியாக வரையறுக்கப்பட்டிருக்கலாம். என்னதான் ஒருநாள் வாழ்க்கை என்றாலும் அந்த தினத்தின் சுவாரஸ்யம் படத்தில் உணரப்படவில்லை. மெலோ டிராமாவை தவிர்த்துவிட்டீர்கள், சரி... ஆனால், ஓட்டத்தையும் சம்பவங்களையும், சுவாரஸ்யத்தையும் கூட தவிர்த்திருக்க வேண்டுமா? ஏதோ நடக்கப்போகிறது என எப்போது எதிர்பார்த்தாலும் சரியாக ஏமாற்றுகிறார்கள். வாழ்வின் தினப்படி சலிப்பைக் காட்டுகிறார்கள் என்றாலும், அதில் குளறுபடிகளை சுவைபடக் காட்டுவதுதானே திரை ரசனை. டைட்டில் பாடல் வரிகளிலேயே ‘இதுவும் கடந்து போகும்’ என அனைத்தையும் புரிய வைத்தாலும், தொடர்ந்து சோதித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சாமான்ய மனிதரிடம் படத்தைக் கொண்டு போகும் முயற்சிக்கு அவார்டு டைரக்டர் செய்தது என்ன?
பாடல்களிலும், பின்னணியிலும் ஜஸ்டின் பிரபாகரன் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கிறார். அந்த ஆம்புலன்ஸ் வண்டியில் பயணிப்பது மாதிரியே உணர்வைக் கடத்தியிருக்கிறது பிஜூ விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு. விறுவிறு திருப்பங்களை எதிர்பார்த்த கண்களுக்கு வாழ்க்கையின் வெறுமையையும் சுவைபடச் சொல்லியிருக்கலாம். புளிப்பு இனிப்பு பேலன்ஸ் இருந்திருந்தால், ‘ஆரஞ்சு மிட்டாய்’ இன்னும் சுவைத்திருக்கும்!
- குங்குமம் விமர்சனக் குழு
|