அழியாத கோலங்கள்



சாருஹாசன்/ஓவியங்கள்: மனோகர்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில்... ஒரு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வேலை வைத்துக்கொண்டு... சிவில் கோர்ட்டுக்குப் போவதை நிறுத்திவிட்டு... குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்படி சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைப்பது என்ற ஒரே யோசனையில் இரவு வெகு நேரம் போகும். மேல் சட்டை அணியாத முதுகுளத்தூர், கடலாடி கட்சிக்காரர்கள் கேட்கும் சந்தேகக் கேள்விகளுக்கு விலாங்கு மீன் போல் சில நழுவல் பதில்கள் கூறி முடிக்கும்போது, இரவு 12 மணியைத் தாண்டிவிடும்.

சினிமா பார்க்கும் வாய்ப்பு மிகக்குறைவு. அப்படிப்பட்ட என்னை, கமலுக்கு உதவியாளனாக இருக்கும்படியும் வக்கீல் தொழிலை உயர் நீதிமன்றத்தில் செய்யும்படியும் என் தந்தை சென்னைக்கு அனுப்பி வைத்தார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லாததால் இருபது வயதில் ஒரு வெற்றி நாயகனாக விளங்கிய நடிகர் கமல்... இந்த சகோதரச்சுமையை தாங்க வேண்டி வந்தது. அன்று என்னை சென்னை நீதிமன்றத்தில் சந்திக்கும் இளம் பெண்கள், ‘‘நீங்கள் கமலஹாசனின் சொந்தமா... தூரத்து உறவா?’’ என்று கேட்பார்கள். ‘‘இல்லை நான்தான் மூத்தபிள்ளை... கமல் கடைசிப் பிள்ளை!’’  என்றதும், ‘‘அவர் ரொம்ப அழகாக இருக்கிறாரே!’’ என்று ஒரு பதில் வரும்!
 
இது நடந்தது 40 ஆண்டுகளுக்கு முன். நேற்று என் மகளின் தோழிகள் இருவர் வந்தனர். சுஹாசினி ஊரில் இல்லாததால் என்னை உடல்நலம் விசாரித்தவர்களிடம் இந்தக் கதையை ஒரு ஜோக்காக அடித்தேன். ஒருவர் கூறினார், ‘‘இந்த 85 வயதிலும் நீங்கள் எங்களுக்கு அழகாகத்தான் தெரிகிறீர்கள்?’’ ‘‘நான் உங்கள் தோழியின் தந்தை... உங்களுக்குப் பிடித்த ஒரு கிழவன்... அதனால் நீங்களாக அதற்கு ஒரு அழகை சேர்க்கிறீர்கள்?’’ என்றேன் நான்.  மற்றொரு பெண்மணி, ‘‘நாங்கள் உங்களுக்கு ஒரு COMPLIMENT கொடுத்தால், முதலில் அதை ஏற்க கற்றுக்கொள்ளுங்கள்!’’ என்றார். ஆனால் இந்த வெள்ளைத் தாடிதான் கமலை தாக்க முயற்சிக்கும் கயல்விழிகளை எதிர்க்கும் கேடயம்!
 
நானும் கமலும், இன்று அவர் அலுவலகமாக இருக்கும் - அன்றைய, ‘39, எல்டாம்ஸ் ரோடு’ முன்புறம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே நடந்தபடி ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்வோம். இந்தப் பரிமாற்றம் பற்றிச் சொல்லும்போது ஒரு அரபு நாட்டு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. ஒரு உணவக முதலாளி தவறு செய்வதாகக் கேள்விப்பட்டு சுல்தான் அவரை அழைத்துக் கேட்டாராம், ‘‘கோழி பிரியாணியில் குதிரைக் கறியை கலக்கிறாயாமே?’’ என்று. அதற்கு உணவகத்தார் விடை அளித்தாராம்... ‘‘குதிரை+கோழிக்கறி என்று பலகை-அறிவிப்பு போட்டுத்தான் விற்கிறேன். எல்லாமே ‘பிஃப்டி பிஃப்டி’தான். ஒரு குதிரைக்கு ஒரு கோழி!’’ இதுபோல்தான் எங்கள் உரையாடல் கலப்படமும். கமலின் ஒரு குதிரை அளவு சிந்தனையில் என் கோழி அளவு சைடு டிஷ் கலப்போம். போன மாதம் கமலை சந்திக்க அங்கே கைத்தடி ஊன்றியபடி சென்றவன், ‘‘பழக்கப்பட்ட இடங்களில் நடக்க முடிகிறது... புதிய இடங்களில் தடுமாறுகிறேன்!’’ என்றேன். கமல் தன் 200 அடி நீளமான பாதையைக் காண்பித்து, ‘‘இது நானும் நீயும் பேசிக்கொண்டே பத்தாயிரம் மைல்கள் நடந்த இடம்தானே?’’ என்றார். உண்மைதான்... ஒரு நாளில் இரண்டு மணி நேரம் நடந்தால் ஐந்து மைல்கள்... அப்படி வருடத்தில் 200 நாட்களாவது நடந்திருப்போம். அப்படி இருபது ஆண்டுகள் பார்த்தால்... கணக்கு சுத்தம்!

இந்தியாவின் முதல் குடிமகன் அமரர் அப்துல் கலாம் அவர்கள் துக்க வாரத்தில், அவர் பிறந்த மண் என் நினைவில் தோன்றுகிறது. அவர் பிறந்த மண்ணிலிருந்து மேல்புறம் 40 மைல் தூரத்தில் பிறந்தவன் நான் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். 1952ல் ராமேஸ்வரம் தேவஸ்தான வக்கீலாக கோயில் நிலங்களுக்கு குத்தகை வசூல், பிராதுகளுக்கு ஆஜராகி இருக்கிறேன். அன்று ‘தனுஷ்கோடி பியர்’ என்று ஒரு ரயில் நிலையம்... அங்கு இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் என்ற புகைவண்டியில் சென்று இறங்கி, அதே பிளாட்பாரத்தில் நிற்கும் கப்பலில் ஏறி இலங்கைக்குச் செல்ல முடியும். 1960ம் ஆண்டில் கமலின் முதல் படமான, ‘களத்தூர் கண்ணம்மா’ படம் ஓடும் இடமெல்லாம் கமலை அழைப்பார்கள். அப்படி ஒருமுறை ராமேஸ்வரத்துக்கு கமலும், எங்கள் சிறிய பரமக்குடி குடும்பமான நானும் மனைவியும் மகளும் ராமேஸ்வரம் சென்றோம்.

ராமேஸ்வரம் கீற்றுக் கொட்டகையில் - அதாவது, இன்று தொலைக்காட்சியில் ‘டெண்டு கொட்டாய்’ என்று சொல்லிச் சிரிக்கிறோமே... அதுதான் எங்கள் காலத்தில் ‘கீத்துக் கொட்டகை’ - இரண்டாம் காட்சி நடுவில் இரவு இரண்டு மணிக்கு மேல், ஆறு வயது நிரம்பாத கமல் மேடையில் நின்று நடித்து, பாட்டுப் பாட வேண்டும். காலை ஆறு மணி மதுரை பாஸஞ்சரைப் பிடிக்க ஒரு குதிரை வண்டி தயாராக வைத்திருந்தேன். அதைப் பார்த்த கமல், ‘‘அந்தக் குதிரையில் என்னை உட்கார வைத்தால்தான் இரவு ரெண்டு மணி வரை விழித்திருக்க முடியும்’’ என அடம்பிடிக்க, நான் வண்டிக்காரர் அனுமதியுடன் வண்டியிலிருந்து குதிரையை அவிழ்த்து இன்றைய உலகநாயகனை குதிரை மீது வைத்து ராமேஸ்வரம் தெருக்களில் இரண்டு மணி நேரம் ஓடி வந்தேன். கடைசியில் நாங்கள் வண்டியை வந்து அடையும்போது வண்டிக்காரர் குதிரையில்லா வண்டியின் சாய்மானத்தில் கால்களை மடக்கி தூங்கிக் கொண்டிருந்தார்.
(நீளும்...)