இது என்ன மாயம் விமர்சனம்



கசிந்துருகி காதலில் திளைக்கும் விக்ரம் பிரபுவும் கீர்த்தி சுரேஷும் எதிர்பாராத தருணத்தில் விலகி, மறுபடியும் காதலில் இணைந்தார்களா என்பதை ‘இது என்ன மாயம்’ எனத் தந்திருக்கிறார் இயக்குனர் விஜய். விக்ரம் பிரபு ஆங்கில நாடகங்களை நண்பர்களின் துணையோடு நடத்துகிறார். அது மந்தமாகப் போகவே ஒன் சைடு லவ்வை சேர்த்து வைக்கும் ‘லவ் கம்பெனி’யாக அதை மாற்றுகிறார்கள். வேலையில் சுவாரஸ்யமும் வருமானமும் கூடுகிறது. ஒருநாள் கிளையன்ட்களில் ஒருவராக வரும் நவதீப், ‘இவளை என்னோடு சேர்த்து வையுங்கள்’ என விக்ரம் பிரபுவிடம் காட்டுவது கீர்த்தியின் போட்டோவை.



கீர்த்தி, விக்ரமின் கல்லூரி நாள் காதலி. ‘கிளையன்ட் கோரிக்கையை விக்ரம் பிரபு நிறைவேற்றினாரா? விட்டுக்கொடுத்தாரா? அல்லது கீர்த்தியைக் கைப்பிடித்தாரா?’ என்பதுதான் மீதி காதல் கதை. காதலின் எல்லா வகைகளையும் சொல்லிவிட்ட தமிழ்ச் சமூகத்தில் காதலைச் சேர்த்து வைக்க ஒரு கம்பெனியே ஆரம்பிப்பது புதுசு. ஒவ்வொரு காதலையும் சேர்த்து வைக்கிற முதல் அரை மணி நேரம், சுவாரஸ்யத்தில் படம் பறக்கிறது. காரண காரியங்களோடு காதல் இரண்டு பேரிடமும் புரிந்துகொள்ளப்படுவதும் சுறுசுறு ரகம். காதல் கை கூடும் பல இடங்களை ஆங்காங்கே படமெடுத்து டைரக்ட் செய்யும் விக்ரம் பிரபுவின் மாஸ்டர் பிளான்தான் ஸ்க்ரீன்ப்ளேயின் பவர் ப்ளே!

வேறுவேறு விதமான பாத்திரங்களில் வித்தியாசம் காட்டுவதில் ஆரம்பத்திலிருந்தே வேறுபடுகிறார் விக்ரம் பிரபு. அப்பாவியாக இருந்துகொண்டு காதலில் வெற்றியை எட்ட செம ஸ்கெட்ச் போட்டுக்கொடுப்பதில் இளைஞர்களை இழுக்கிறார். ஆறு படமே இதுவரையிலான வரிசை என்றாலும் கவர்கிறார் விக்ரம் பிரபு. எங்கே பார்த்தாலும் கீர்த்தி சுரேஷ் என எகிறி அலையடிக்க, ‘இதோ’ வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். உதடுகளில் அம்மா மேனகாவைக் கொண்டிருக்க, பாவனைகளில் பின்னி எடுக்கிறார். ஆரம்பத்தில் விக்ரம் பிரபு பின்தொடர, பின்பு கீர்த்தி அவரை விரட்டிப் பிடிக்க அள்ளும் மேனரிசங்களும் குழி விழும் ஒரு கன்ன அழகும் ‘ஆசம்’ கீர்த்தி! முன்பகுதியில் காதல் சிலுசிலுப்போடு பின்னியெடுத்த  திரைக்கதை, பின்பகுதி க்ளைமேக்ஸ் வரை தந்தி அடிக்கிறது. பயணித்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் பயணிக்கும் உணர்வு. காட்சிகளைக் கொஞ்சம் முன்பின்னாக மாற்றிப் போட்டாலும் பாதகம் இல்லை என்கிற அளவுக்கு திரைக்கதை. அதற்கு கொஞ்சம் குளுக்கோஸ் ஏற்றியிருக்கலாம். இவை எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்கிறது கீர்த்தியின் இளமை.

ஆர்.ஜே பாலாஜி காமெடியின் பாதையில் வந்துவிடுகிறார் போல. எப்பொழுதும் இயக்குனர் விஜய்க்கு அழகுப் பாடல்களால் சிறப்பு தருவது ஜி.வி.பிரகாஷ். இந்தத் தடவையும் ஏமாற்றவில்லை. ஜி.வி - சைந்தவி ஜோடியாகப் பாடியிருக்கும் ‘இரவாக நீ...’ இதம். கண்ணுக்கு நிறைவான ஒளிப்பதிவால் அழகியல் காட்டுகிறார் நீரவ் ஷா. விஜய்யின் ஆரம்பப் படங்களிலிருந்து சிறப்பாக இணை சேர்ந்திருப்பதில் இன்னும் தொடர்கிறார் நீரவ். பெரும் திருப்பங்களே இல்லாத திரைக்கதையில், சிறிய அளவான வசனங்களில் டைரக்டர் விஜய் ஈர்த்துக்கொள்கிறார். குறிப்பாக, விக்ரம் பிரபுவும் கீர்த்தியும் பேசிக்கொள்ளும் செல்போன் காதல் உரையாடல்களில் காதல் சுவை மிளிர்கிறது. ‘இது என்ன மாயம்’ காதல் மயம்!

- குங்குமம் விமர்சனக் குழு