பொறுப்பா வேலை பார்த்தா கனவை அடைய முடியாது! காளி அட்வைஸ்!
இன்னிக்கு ஷூட்டிங் எல்லாம் கேன்சல். நீங்க எப்ப வேணாலும் வாங்க சார்... நான் வீட்லதான் இருக்கேன்!’’ - பால்ய நண்பர்கள் கூட இந்தளவு பந்தா இல்லாமல் வரவேற்க மாட்டார்கள். காளி வரவேற்கிறார். ‘முண்டாசுப்பட்டி’யிலும் ‘தெகிடி’யிலும் ஹீரோவின் நண்பராக கவனிக்க வைத்த காளிக்கு இப்போது ‘மாரி’யிலும் செம கேரக்டர். 20 படங்கள்தான் செய்திருக்கிறார். ஆனால், குறும்படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்த டைரக்டர்கள் அத்தனை பேருக்கும் பிடித்தமான சாய்ஸ் காளி. காரணம், இவர் வந்த ரூட்டும் ஷார்ட் ஃபிலிம் டு சினிமாதான்.

‘‘முழுப்பேர் காளி வெங்கட் சார். இப்ப சுருக்கியாச்சு. கோவில்பட்டி பக்கம் சின்ன கிராமம். அப்பா கொத்தனார், விவசாயி. கூடப் பிறந்தவங்க ஒரு அண்ணன், ரெண்டு அக்கா, ஒரு தங்கச்சி. ஊர்ல உள்ள ஸ்கூல்ல பத்தாவது வரை படிச்சேன். அப்பவே நாடகங்கள் மேல பைத்தியம். நானே வசனம் எழுதி நாடகம் போடுற அளவுக்கு வந்துட்டேன். ‘நாடகங்கள்ல நடிச்சா, இந்த ஊர்ல மட்டும்தான் நம்மளத் தெரியும். சினிமால நடிச்சா உலகம் முழுக்க தெரியுமே’ங்கற ஆசையில சென்னைக்கு வந்தேன். 1997... தமிழ்த் திரையுலகமே ஸ்டிரைக்ல ஸ்தம்பிச்சு கிடந்த டைம். விஷயம் தெரியாம சென்னை வந்து ரெண்டு மாசம் கஷ்டப்பட்டேன். சூடு பட்ட பூனை மாதிரி ஊருக்கே திரும்பிட்டேன்.

சென்னை, திருவொற்றியூர்ல எங்க அண்ணன் காய்கறி வியாபாரம் பண்ணிட்டு இருந்தார். அவரை நம்பி ரெண்டாவதா வந்தேன். ‘எதாவது ஒரு பொழப்ப பாரு. அப்புறமா நடிப்ப பாரு’னு அண்ணன் சொல்ல, வாட்டர் கேன் ஏஜென்ஸி எடுத்து சப்ளை பண்ண ஆரம்பிச்சேன். அது நல்லா போச்சு. ஆனா, எனக்கு ஃப்ரீ டைம் கிடைக்கல. அப்பதான் ஞானோதயம் தோணுச்சு. பொறுப்பான ஆளா ஒரு வேலையை ஒழுங்கா பார்த்துக்கிட்டிருந்தீங்கன்னு வைங்க... கடைசி வரைக்கும் அதைத்தான் செய்வீங்க. உங்க கனவை அடைய முடியாது. நாம செய்யிற வேலை நம்ம கனவு இல்லைன்னா, அதைக் கண்ணும் கருத்துமாவெல்லாம் செய்யக் கூடாது. இடது கையில முடிச்சுட்டு கனவை நோக்கி ஓடணும். அப்படி நான் சினிமாவை நோக்கி ஓடினேன்.
நண்பர் ஒருத்தர் மூலமா மிஷ்கின் சார் அசிஸ்டென்ட் விஜி அறிமுகம் கிடைச்சது. ‘அஞ்சாதே’ படத்துல ஒரு சின்ன ஷாட்ல நடிச்சேன். அதுவும் எடிட்ல போயிடுச்சு. அப்புறம், ‘தசையினை தீச்சுடினும்’ பட இயக்குநர் விஜய்பிரபாகர் அறிமுகம் கிடைச்சது. எனக்கு நல்ல ரோல் கொடுத்தார். அந்தப் படம் இன்னும் வெளி வரலை. ஆனாலும் மனசு தளரல. விஜய்பிரபாகர் சாரோட உதவியாளர் கண்ணபிரான் மூலமா நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. அவங்களோட ஷார்ட் ஃபிலிம்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ‘நாளைய இயக்குநர்களா’ ஜெயிச்ச எல்லா இயக்குநர்களின் குறும்படங்களிலும் நான் நடிச்சிருப்பேன்னு நினைக்கறேன். ‘சைனா டீ’, ‘ரவுடி கோபாலும் நான்கு திருடர்களும்’, ‘தோஸ்த்’, ‘சட்டம் தன் கடமையை செய்யும்’, ‘முண்டாசுப்பட்டி’ன்னு 15 ஷார்ட் ஃபிலிம்கள்ல லீட் ரோல் பண்ணியிருக்கேன். யாருமே சும்மா கூப்பிடலை. எல்லா ஷார்ட் ஃபிலிம்லயும் சம்பளம் கொடுத்தாங்க. கம்ப்யூட்டர் பரிச்சயம் இருக்குறவங்க, ரெகுலரா யூ டியூப் பார்க்குறவங்க எல்லார்கிட்டேயும் குறும்படங்கள் மூலமா நான் அறிமுகமானேன். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு நடுவர்களா வந்த விக்ரமன் சார், பிரபுசாலமன் சார், வெற்றிமாறன் சார், சுந்தர் சி. சார்னு எல்லார்கிட்டேயும் பாராட்டுகளும், பெஸ்ட் ஆக்டர் விருதும் வாங்கியிருக்கேன்.
வெற்றிமாறன் சார் மூலமா ‘உதயம் என்.எச்.4’ படத்துல வாய்ப்பு கிடைச்சது. சுந்தர் சி. சார் ‘கலகலப்பு’வில் நல்ல கேரக்டர் கொடுத்தார். ‘ஸ்கிரிப்ட் ஜெயிக்கணும்னா, எல்லா கேரக்டரிலும் ஸ்டார் வேல்யூ இருக்கறது அவசியம்’னு சொல்வார் அவர். ‘மாரி’யில் தனுஷ் சார் கூட நடிச்சது மறக்க முடியாத அனுபவம். டெக்னிக்கல் விஷயங்களை நுணுக்கமா கவனிச்சு நடிக்கற ஹீரோ அவர். என்னைப் பொறுத்தவரைக்கும் எங்க வீட்டு சப்போர்ட்... குறிப்பா, எங்க அப்பாவோட சப்போர்ட் முக்கியமானது. படிக்காதவர்தான்... விவசாயிதான்... சினிமான்னா எப்படி என்ன ஏதுன்னு தெரியாதுதான். ஆனா, போறேன்னதும் ‘போயிட்டு வா’ன்னு அனுப்பி வச்சாங்க. ‘எதைப் பண்ணாலும் நல்லா பண்ணு. நல்லது கெட்டது தெரிஞ்சு நடந்துக்கோ’ன்னு மட்டும் சொன்னாங்க. இதுக்கு மேல அவங்க என் விஷயத்தில் எந்த அட்வைஸும் பண்ணினதில்ல. இந்த வருஷமாவது எனக்கு கல்யாணம் நடத்தி வச்சடணும்னு வீட்ல மும்முரமா பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. மூணு வருஷமா எதுவும் அமைய மாட்டேங்குது.
தொடர்ந்து காமெடி கேரக்டர்கள் பண்றதை விட, குணச்சித்திர கேரக்டர்களும் பண்ண விரும்புறேன். ‘அடுத்த கட்டம் போறேன்’னு சொல்லிக்கிட்டு தனி காமெடி ட்ராக் எழுதுறது, டைரக்டர்களின் ஸ்கிரிப்ட்ல கரெக்ஷன் சொல்லி மூக்கை நுழைக்கிறது... இதையெல்லாம் எந்தக் காலத்திலும் நான் பண்ண மாட்டேன். ஒரு இயக்குநருக்கு என்ன தேவையோ அதைப் பண்ண ரெடியா இருப்பேன். காமெடியோ, சென்டிமென்ட்டோ... அது கதையோடு இணைஞ்சு இருந்தாத்தான் எடுபடும். அதுதான் பெயர் வாங்கிக் கொடுக்கும். என் வழி தனி வழி இல்லை. எனக்குன்னு எந்த ரிஸ்க்கையும் எடுத்துக்க விரும்பல. டைரக்டர்கள் கொடுக்கிற கேரக்டர்களை அவங்க எதிர்பார்க்குறதுல பத்து பர்சன்ட் பண்ணினாலே நாம பெயர் வாங்கிடலாம். அந்த வழியில போறதுதான் பாதுகாப்பான பயணம்!’’
"என் வழி தனி வழி இல்லை. எனக்குன்னு எந்த ரிஸ்க்கையும் எடுத்துக்க விரும்பல".
- மை.பாரதிராஜா படங்கள்: ஆர்.சி.எஸ்
|