ஐந்தும் மூன்றும் ஒன்பது



இந்திரா சௌந்தர்ராஜன்/ஓவியம்: ஸ்யாம்

‘‘அந்த மலைத் தலத்தில் ஜோசப் சந்திரனுடன் கழிந்த என் நேரம், என் வாழ்வின் மகத்தான நேரம் என்பேன். அவரின் விசாலமான அறிவும் வித்தியாசமான அணுகுமுறைகளும் எனக்கு மிகவே ஆச்சரியமளித்தன. எனக்கு எப்படி சிறுபிள்ளையாக நான் இருக்கும்போதே சரித்திரத்தின் மேல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்ததோ, அதேபோல அவருக்கும் சரித்திரத்தின் மீதுதான் மிகுந்த ஈடுபாடு இருந்ததாம்! இது எங்களுக்குள்ளான ஒற்றுமை...

‘உலகத்திலேயே நம் சரித்திரம் மிக நீளமானது; மிக ஆழமானது; மிகப் பரந்தது; மிக உயர்ந்தது’ என்று அவர் கணிதப்படுத்திய விதமே எனக்குக் கவிதைபோல் இருந்தது. ‘ஆனால் இன்று இந்த சரித்திரத்தை பெரிதாகப் பொருட்படுத்தி இந்தத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களைப் பார்ப்பது மிக அபூர்வமாகி வருகிறது’ என்றார். உண்மைதான்!

‘ஒவ்வொரு வருடமும் இளங்கலைப் பட்டம் படித்து முடிப்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக பத்து லட்சம் பேருக்குக் குறைவதேயில்லை. இதில் சரித்திரம் படித்து பட்டம் பெறுபவர்கள் எண்ணிக்கை வெறும் மூன்று இலக்கங்களில்தான் உள்ளது’ என்றார். ‘ஒரே காரணம்தான்... இந்தப் பாடம் சம்பாதிப்பதற்கு துணை செய்வதாக இல்லை. இது முழுக்க முழுக்க பிறப்பிலேயே ஆர்வம் கொண்டு வளர்பவர்களுக்கான துறை என்றாகி வருகிறது’ என்றார். அப்படியே, ‘முன்பெல்லாம் எவ்வளவு சரித்திரக் கதைகள் பத்திரிகைகளில் வரும். கல்கி, விக்கிரமன், ஜெகசிற்பியன், கோவி.மணிசேகரன், கௌதம நீலாம்பரன், நா.பார்த்தசாரதி என்று எவ்வளவு எழுத்தாளர்கள்..? இன்று குறிப்பாக, இந்த 20ம் நூற்றாண்டில் பதினைந்து வருடங்கள் கழியப் போகிறது... சரித்திரம் எழுத புதியதாக எத்தனை பேர் வந்திருப்பார்கள்? ஒருவேளை யாராவது எழுதினாலும் பத்திரிகைகள் வெளியிட உற்சாகம் காட்டுவதில்லை என்பதை கவனித்தீர்களா?’ என்று கேட்டார்.

அப்படியே ‘இந்தக் கால மாற்றத்தை நாம் சற்று முயன்றால் திசை திருப்ப முடியும்!’ என்றார். ‘எப்படி?’ என்று நானும் கேட்டேன். ‘நம் சரித்திரம் என்பது கற்பனையான ஒன்றல்ல... அது மனித வாழ்வின் ஒரு பதிவு என்கிற கருத்தை முதலில் உருவாக்க வேண்டும். எப்படி எல்லாம் மனிதன் இருந்திருக்கிறான் என்கிற தெளிவு மிக முக்கியம். அப்போதுதான் வருங்காலத்தில் எப்படி இருப்போம் என்பதிலும் ஒரு சரியான அனுமானம் உருவாகும். இன்று உள்ள நம் மனித சமூகத்துக்கு மிக அதிகபட்சமாக ஒரு 150 வருட சரித்திரம் மட்டும்தான் தெரியும். அதுவும் கல்வியாளர்கள் சிலருக்கே தெரியும். குறைந்தது 1500 வருட சரித்திரம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அந்த நாளில் மனிதன் தனக்கான ஆடை முதல் அணிகள் வரை சகலத்தையும் எப்படி உருவாக்கினான் என்பதிலிருந்து அவன் தன் ஒருநாள் பொழுதை எப்படிக் கழித்தான் என்பது வரை தெளிவு வேண்டும்’ என்று ஜோசப் சந்திரன் சொல்லவும், நான் மீடியா பக்கமாகச் சென்றேன்.

‘நிறைய திரைப்படங்கள் இம்மட்டில் நமக்கு முன்னோடியாக உள்ளனவே’ என்றேன். ‘மண்ணாங்கட்டி’ என்று கோபித்த ஜோசப் சந்திரன், ‘இந்த பாழாய்ப் போன மீடியாக்கள் நம் நிஜமான சரித்திரத்தையே குழி தோண்டிப் புதைத்து விட்டன’ என்றார். அதை விளக்கவும் செய்தார்... ‘சினிமா என்பது ஒளி - ஒலி என்பதன் கலவை! இதில் இரண்டுமே சம பலத்தோடு இருக்க வேண்டும். இதில் ஒலி அம்சம்கூட பரவாயில்லை. அவை காட்சி உணர்வை நமக்குள் ஏற்படுத்துபவை... காட்சியாகவே தோன்றும் ஒளி அம்சம்தான் பெரிய தவறிழைத்து விட்டது. ஒரு சரித்திரப்படம் எடுக்கும் இயக்குநர் முதலில் நம்புவது, வண்ண வண்ண பெயின்ட் டப்பாக்களையும், மிகுந்த எடையுள்ள ஆபரணங்களையும்தான். இன்றுள்ளது போல நூற்றுக்கணக்கான  வண்ணங்கள் அன்று கிடையாது. அதேபோல எந்த நாளும்  மனிதன் உடல் புழுங்கும் அளவு ஆடைகளையோ அணிகளையோ அணியவே மாட்டான். அதேபோல வழவழவென்று முடிக் கால்களே தெரியாத அளவு சவரம் செய்துகொள்ளவும் அந்த நாளில் வாய்ப்பேயில்லை. நம் சினிமாக்களில் கூர்ந்து பாருங்கள்... இதெல்லாம்தான் முதலில் இருக்கும். கேட்டால், ‘இப்படி இருந்தாலே கவனிக்கப்படுவோம். இது ஒருவகை சினிமா  இலக்கணம்’ என்று நியாயம் கற்பிப்பார்கள்..!’ ஜோசப் சந்திரனோடு என் பேச்சு இப்படி பல தளங்களில் சென்றது. நாங்கள் காத்திருந்த அந்த இரவுப் பொழுதும் வந்தது. வானில் சித்திரைப் பௌர்ணமிக்கு பதிலாக ஆடி மாதப் பௌர்ணமி!’’
 - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

வர்ஷனும் ப்ரியாவும் உதறலுக்குள்ளானபோதிலும், ப்ரியா மிக வேகமாய் சுதாரிக்கத் தொடங்கினாள். காருக்குள் வைத்த அந்தப் பெட்டியை அப்படியே வேகமாய் வெளியே எடுத்து அந்த ஆபீசர் கையில் வைத்தாள். ‘‘சார்... இது எங்க தாத்தா வச்சிருந்த பெட்டி. அதாவது இது ஆன்டிக்ஸ் மாதிரி ஒரு அயிட்டம். உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா, பழங்காலப் பொருட்கள். என் தாத்தா எங்க போனாலும் இந்த மாதிரி எது கண்ணுல பட்டாலும் வாங்கிடுவார். அப்படி வாங்கிட்டு வரும்போதுதான் அவரை கிட்நாப் பண்ணிட்டாங்க. அவரைக் கடத்தும்போது ஆக்சிடென்ட்டும் ஆகி, கடத்தினவங்க செத்தும் போயிட்டாங்க. தாத்தா அதை இதோ அவரைக் காப்பாத்தின இந்த சுகுமார் கையில கொடுத்து என்கிட்ட ஒப்படைக்கச் சொல்லியிருந்தார். இவரும் என்கிட்ட கொடுத்தார். இதான் விஷயம்.’’

- ப்ரியா வெகு அழகாக சமாளித்தாள். அது காலப்பலகணிக்கு வழிகாட்டும் சமாச்சாரம் என்கிற விஷயத்தை மட்டும் மறைத்து, மற்ற அவ்வளவையும் உள்ளது உள்ளபடி கூறவும் அந்த ஆபீசரிடமும் ஒரு மாற்றம். அந்தப் பெட்டியை இப்படியும் அப்படியும் பார்த்தவர் நம்பர் லாக் பூட்டைப் பார்த்தவராக ‘‘இதைத் திறக்க முடியுமா?’’ - என்று கேட்டார்.
‘‘எனக்கு சீக்ரெட் நம்பர் தெரியாது. தாத்தாவுக்குத்தான் தெரியும்...’’
 ‘‘ரைட்.. அதுவரை இது எங்ககிட்ட இருக்கட்டும். ஆக்சிடென்ட் ஸ்பாட்ல கிடைக்கற ஒவ்வொரு பொருளுமே எங்களுக்கு முக்கியம்...’’
‘‘நோ பிராப்ளம்... ஆனா இது ஜாக்கிரதையா, பத்திரமா இருக்கணும். கேஸ் பிராப்பர்ட்டின்னு அலட்சியமா ஹேண்டில் பண்ணிடாதீங்க. தாத்தா வரைல ஒரு குண்டூசிகூட பெரிய விஷயம்...’’
‘‘குண்டூசி கூடவா?’’
‘‘ஆமாம்... மகாத்மா காந்திக்கு ஒருத்தர் கடிதம் போட்டார். காந்தி அதுக்கு பதில் போட்டார். பதில் பல பக்கங்கள் இருந்தது. காந்தி அந்த பக்கங்களை குண்டூசியால இணைச்சு அனுப்பியிருந்தார். அந்தக் கடிதமும் குண்டூசியும் இன்னிக்கு எவ்வளவு மதிப்பான பொருட்கள் தெரியுமா?’’
ப்ரியா போட்ட போடில் அந்த ஆபீசர் அதன்பின் எதுவும் பேசவில்லை. ஆனால் வர்ஷன் அதை அவர் எடுத்துச் சென்றது பார்த்து பரிதவித்தான். வள்ளுவர் மந்தகாசமாகப் பார்த்தார்.
‘‘லூசு... அது அவ்வளவும் டூப்ளிகேட். ஒரிஜினல் தாத்தா கிட்டதான் இருக்குன்னும்போது எதுக்கு ஃபீல் பண்றே?’’ என்றாள்  மெல்லிய குரலில்... அவனும் லேசானான்.
அதன்பின் அந்த சுகுமாரும் விடைபெற்றுக் கொண்டான். அவனை ஒரு போலீஸ் ஆபீசர் போட்டோ எடுத்துக்கொண்டார். தோரணையாக, ‘‘உன் பேர் என்ன? என்ன படிச்சிருக்கே? இந்தப் பக்கம் எதுக்குப் போனே? லைசென்ஸ் இருக்கா?’ ’ என்று அவனிடம்  கித்தாப்பைக் காட்டத் தவறவில்லை.
அதன்பின் அவ்வளவு பேரும் மகாபலிபுரம் மருத்துவமனை நோக்கித்தான் புறப்பட்டனர். சுகுமாரும் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவனாக புறப்பட்டுப் போனான்.

மருத்துவமனை!

கணபதி சுப்ரமணியன் கால் நீட்டி அமர்ந்திருந்தார். ட்ரிப்ஸ் ஏறி முடிந்திருந்தது. திபுதிபுவென்று எல்லோரும் வரவும் அவரிடம் சற்று படபடப்பு. அனந்தகிருஷ்ணன் அவரை அன்போடு பார்த்தவராக, ‘‘என்னப்பா நடந்தது... நேத்து ராத்திரியில இருந்து நாங்க எப்படி ஆயிட்டோம் தெரியுமா?’’ என்று பதற்றமாய் பேசியவிதமே மிக காட்டமாய் இருந்தது.
‘‘டென்ஷன் ஆகாதே அனந்தா... ஜி.எச்ல நீ, உன் பெண்டாட்டி அப்புறம் ப்ரியாவோட முன்னால நடந்து போயிட்டிருந்தீங்க. கொஞ்சம் தள்ளி வந்துக்கிட்டிருந்த என்னை, இரண்டு பேர் பின்னாலயே வந்து துப்பாக்கி முனைல அமுக்கிப் பிடிச்சிட்டாங்க!

அங்க ஒரு இடத்தை கிராஸ் பண்ணும்போது கொஞ்சம் இருட்டா இருந்தது. அங்கதான் அவங்க என்னைக் கடத்தினாங்க... முதல் காரியமா செல்போனை வாங்கி ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க. அப்புறமா அவங்க இடத்துக்குக் கூட்டிக்கிட்டு போய் கட்டிப் போட்டுட்டாங்க. இன்னிக்கு பாண்டிச்சேரிக்கு என்னைக் கடத்தும்போது எதிர்பாராத விதமா ஒரு எருமை குறுக்க வரவும், காரை ஒடிச்சு திருப்பினதுல ரோடோட மீடியன்ல மோதி அப்படியே கவுந்து என்னென்னவோ ஆகிடிச்சு. நான் இப்ப உன் முன்னால உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கறத நினைச்சா என்னாலயே நம்ப முடியல...’’

‘‘அவங்க யாரு... உங்களை எதுக்குக் கடத்தணும்?’’ அனந்தாவின் இந்தக் கேள்விக்கு மட்டும் ப்ரியாவை அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்தவர், ‘‘அவங்க ஏதோ புதையலை தேடிக்கிட்டிருக்கறவங்களாம்... நான் அவங்களுக்கு உதவி செய்தா அதை எடுத்துட முடியும்னு நம்பியிருக்காங்க!’’ என்றார்.
‘‘புதையலா... இல்ல, இந்த காலப்பலகணியா?’’
‘‘புதையல்னுதான்ப்பா சொன்னாங்க...’’
‘‘இதுக்கு எதுக்கு கடத்தணும்? ஒரு அசைன்மென்ட்டாவே உங்களை செய்து தரச் சொல்லலாமே..?’’
‘‘பைத்தியக்காரா... புதையல் எடுத்தா அது கவர்மென்ட்டுக்கு சொந்தம். வெளிய தெரியாமதான் எல்லாம் செய்யணும். நான் இல்லீகலா நடக்க மாட்டேன்னுதான் உனக்குத் தெரியுமே...’’
அவர்கள் பேசுவதை ஒரு போலீஸ் ஆபீசரும் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நாளாக இருந்தால் ஒரு பேடிலோ... இல்லை, டைரியிலோ குறிப்பாக எழுதிக் கொள்வார்கள். இப்போது அவர்கள் சட்டையில் இருக்கும் செல்போன் அந்த மொத்த பேச்சையும் தனக்குள் பதிவு செய்து கொண்டிருந்தது.
தாத்தா திட்டமிட்டுக் கொண்டு பேசுகிறார் என்பது ப்ரியாவுக்கும் வர்ஷனுக்கும் மட்டும் புரிந்தது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த போலீஸ்காரரே அனந்தகிருஷ்ணனிடம் வந்து ‘‘சார், உங்கள சீஃப் டாக்டர் கூப்பிடறாரு...’’ என்றார்.
‘‘எங்க இருக்காரு?’’
‘‘வாங்க... கூட்டிக்கிட்டு போறேன்!’’
அவர்கள் இருவரும் விலகிய நொடியில் கணபதி சுப்ரமணியனிடம் பெரும் மாற்றம். நாலாபுறமும் பார்த்தவர் அவர்கள் மூவரையும் அருகில் அழைத்தவராக கிசுகிசு குரலில் ‘‘எங்க பெட்டி?’’ என்று கேட்டார். ப்ரியாவும் அதை போலீஸ் ஆபீசர் எடுத்து வைத்துக் கொண்டதை சொன்னாள். கணபதி சுப்ரமணியன் முகம் உடனே சுணங்கவும், ‘‘தாத்தா! கவலப்படாதே... காலப்பலகணிக்கான குறிப்பு அதுல இருக்குன்னு நான் சொல்லலை. கலைப் பொருட்கள்னு பொதுவாதான் சொல்லியிருக்கேன். அதோட, அது பூட்டியிருக்கறதால உள்ள என்ன இருக்குன்னு அவங்களுக்கும் தெரியாது...’’ என்றாள் ப்ரியா.
கணபதி சுப்ரமணியன் இம்முறை தீர்க்கமாய் வள்ளுவரைப் பார்த்தார்.
‘‘என்ன பாக்கறீங்க?’’ என்றார் வள்ளுவர்.
‘‘நீங்க எப்படி இவங்களோட வந்தீங்க?’’
‘‘நீங்க தொலையவும் உங்க பேத்திக்கு என் ஞாபகம் வந்
துடிச்சி. அது இப்ப இங்கவரை கூட்டிக்கிட்டு வந்துடிச்சி...’’
‘‘ஒரு வகைல உங்கள பார்த்ததுல சந்தோஷம். அடுத்தடுத்து நடக்கறதை எல்லாம் நீங்களும் பாத்துக்கிட்டுதானே வர்றீங்க...’’
‘‘பின்ன?’’
‘‘அமானுஷ்யம்ங்கற விஷயத்த நான் தொடக்கத்துல நம்பாதவன். கஞ்சமலைல தங்கம் இருக்குங்கற விஷயத்தை ஆராயறப்ப அதுமேல எனக்கு நம்பிக்கை வந்தது. இந்த காலப்பலகணி விஷயமும் அமானுஷ்யமானதுதான். ‘செத்துப் போயிடு
வேன்’னு சொன்ன நீங்க உயிரோட இருக்கீங்க. செத்தே போயிருக்க வேண்டிய நானும் உயிரோட இருக்கேன். ஆனா உயிரோட இருப்போம்னு நம்பிக்கிட்டிருந்த பலர் செத்துப் போயிட்டாங்க. இதையெல்லாம் பாக்கும்போது உங்களுக்கு என்ன தோணுது?’’
‘‘காலப்பலகணி ஒரு சத்தியமான உண்மைன்னு தோணுறது மட்டுமில்ல, அது நிச்சயம் நமக்குக் கிடைக்கும்னும் தோணுது. அதன் மூலமா நம்ம வாழ்க்கைல நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகுதுன்னு நான் நினைக்கறேன்...’’
‘‘சரியா சொன்னீங்க... இந்த வினாடி வரை இந்த காலப்பலகணி பத்தி நமக்கு மட்டும்தான் தெரியும். இதைப்பத்தி தெரிஞ்ச மத்தவங்க யாரும் உயிரோட இல்லை. ஆகையால, ஒரு ரகசியமா நீடிச்சுகிட்டு இருக்கற இதை நாம எல்லாரும் ஏன் ஒண்ணா சேர்ந்தே தேடக் கூடாது?’’
கணபதி சுப்ரமணியன் அப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று வள்ளுவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ‘‘நீங்க முதல்ல சரியாகி வெளிய வாங்க. அப்புறம் இதைப் பத்தி பேசலாம்’’ என்றார்.
‘‘தாத்தா! அப்ப உனக்கு செத்துடுவோம்ங்கற பயம் இல்
லையா?’’ என்று கேட்டாள் ப்ரியா.
‘‘செத்துப் பிழைச்சவன்மா... இனி எனக்கேது சாவு?’’
‘‘நீங்க இன்னும் களத்துலயே இறங்கல. நீங்க இந்தப் பலகணிய தேடியும் வரல... அதுக்கே உங்களுக்கு ஆக்சிடென்ட் வரை ஆகிடுச்சு. சுருக்கமா சொன்னா, இது ஒரு எச்சரிக்கை. இது புரியாம நீ களத்துல இறங்கினா உனக்கும் ஆபத்து வரலாம்தானே?’’
‘‘உன் கோணத்த நான் தப்பு சொல்ல மாட்டேன். ஆனா என் கோணம் வேற... எனக்கு ஆபத்து வரணும்னா இந்த ஆக்சிடென்ட்டுலயே நானும் செத்துருக்கணும். ஆனா நானோ உங்க கூட நல்லா பேசிகிட்டு இருக்கேன். எதிரிகளும் செத்துப் போயிட்டாங்க. அந்த சதுர்வேதி நிச்சயமா இனி ரொம்பவே அடக்கி வாசிப்பான். நடந்த அவ்வளவும் அவனுக்குதாம்மா எச்சரிக்கை. நமக்கு இல்லை...’’
‘‘அப்ப நாம அதைக் கண்டுபிடிக்கப் போறோமா?’’
‘‘நிச்சயமா?’’
‘‘அப்புறம்?’’
‘‘என்ன அப்புறம்... புரியல?’’
‘‘அதைக் கண்டுபிடிச்சு என்ன பண்ணப் போறோம்?’’
‘‘என்ன ப்ரியா! பைத்தியம் மாதிரி கேட்கறே?’’
‘‘நீதான் தாத்தா என் கேள்விய சரியா புரிஞ்சுக்கல. அதை அடைஞ்சுட்ட நிலைல பல ரகசியங்களைத் தெரிஞ்சுகிட்டு நாம என்ன செய்யப் போறோம்?’’
‘‘அதப்பத்தி அப்புறம் பேசலாம். இப்ப உங்கப்பா வர்ற சப்தம் கேட்குது... வேற பேச்ச பேசுவோம்’’ - என்றான் வர்ஷன். அனந்தகிருஷ்ணனும் பரபரப்பாக உள்ளே நுழைந்தவராக ‘‘ப்ரியா... உன்கிட்ட பெட்டிய வாங்கினாரே போலீஸ் ஆபீசர்... அவருக்கும் ஆக்சிடென்ட் ஆகிடிச்சாம்’’ என்றார்.
அடுத்த பகீர், அவ்வளவு பேரிடமும்!
- தொடரும்...

‘செத்துப் போயிடுவேன்’னு சொன்ன நீங்க  உயிரோட இருக்கீங்க. செத்தே போயிருக்க வேண்டிய நானும் உயிரோட இருக்கேன். ஆனா  உயிரோட இருப்போம்னு நம்பிக்கிட்டிருந்த பலர் செத்துப் போயிட்டாங்க.’

‘‘நகர்வலத்துக்குத் தேரில் சென்ற மன்னர், திரும்ப வரும்போது நடந்து வருகிறாரே... ஏன்?’’
‘‘இ.எம்.ஐ. கட்டாததால் தேரை பேங்க்காரர்கள் பிடுங்கிச் சென்று விட்டார்களாம்...’’

‘‘1972ல சூப்பர்ஹிட்டா ஓடின தமிழ்ப் படத்தை ‘ரீமேக்’ பண்ணலாம்னு இருக்கேன்யா...’’
‘‘என்ன கதை சார்..?’’
‘‘1971ல பிரமாதமா ஓடின இங்கிலீஷ் படத்தோட கதைதான்...’’

‘‘எப்போதும் குழிப்பணியாரத்தை விரும்பிச் சாப்பிடும் நம் மன்னர், போருக்குப் பின் சுத்தமாக மாறிவிட்டார்...’’
‘‘எப்படி..?’’
‘‘பதுங்குகுழிப்பணியாரம்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்!’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.