நியூஸ் வே



அலங்கரிக்கப்பட்ட குதிரைப்படை, சிப்பாய்கள் அணிவகுப்பு என களைகட்டியிருக்கிறது விஜய்யின் ‘புலி’ ஃபங்ஷன். விழாவிற்கு வந்திருந்தவர்களை வாசலில் நின்று வரவேற்றார் விஜய். ஆனால், டைரக்டரின் ஸ்ட்ரிக்ட் கண்டிஷனால் யாருமே படத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை.

செல்வராகவனின் ‘கான்’ படத்தில் சிம்பு உளவுத்துறையான ‘ரா’ ஏஜென்ட்டாக நடிக்கிறார். பாதிப்படம் முடிந்த நிலையில் கௌதமின் கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கிறார் சிம்பு. இருபது நாட்களுக்குப் பிறகு மீண்டும் செல்வா!

இந்தியாவில் இருக்கும் வழக்கறிஞர்களில் மூன்றில் ஒருவர் போலி. இது இந்திய பார் கவுன்சில் தந்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.

மோடியின் ஓராண்டு ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இதுவரை நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு கேள்விகூட கேட்கவில்லை.



ராஜமௌலி அடுத்து ஒரு சமூகப் படத்தை எடுக்க ஆர்வமாக இருக்கிறார். தமிழில் அஜித்தையும், தெலுங்கில் அல்லு அர்ஜுனையும் வைத்து எடுக்கப் பிரியமாம்.

தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்குப் போக முடியாத தவிப்பில் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டு முறை அவரது பயணங்கள் மழை காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்தாகின. ஏதாவது வாஸ்து பிரச்னை இருக்கிறதா என இப்போது நிபுணர்கள் அலசி வருகிறார்கள்.

பாதுகாப்பு, தொழில் செய்யும் சூழல், வரி விகிதம் போன்றவற்றைக் காரணம் காட்டி இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறும் பணக்காரர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் சுமார் 61 ஆயிரம் இந்தியக் கோடீஸ்வரர்கள் வெளிநாடு போய்விட்டனர். அதிகம் பேர் செல்வது பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும்!

அனிருத் ஆபீஸுக்கு எப்போது ரசிகர்கள் போய்க் கேட்டாலும், ‘‘அவர் வெளிநாடு போய்விட்டார்’’ எனச் சொல்லிவிடுகிறார்கள். அந்த ஒரு வார்த்தை தவிர வேறு எந்தக் காரணமும் வெளியே வராது.

யாகூப் மேமனை தூக்கில் போட்ட சூட்டோடு தாதா தாவூத் இப்ராகிமின்  மறைந்த தங்கை ஹசீனாவின் வாழ்க்கை இந்தியில் படமாகிறது. ஹசீனாவாக நடிக்கப்போவது சோனாக்‌ஷி சின்ஹா. ஹீரோ இன்னும் முடிவாகவில்லை.  ‘‘பவர்ஃபுல் ரோல். எனக்கொரு சவாலான படம் இது’’ என்கிறார் சோனாக்‌ஷி.

தனுஷ், ஜி.வி.பிரகாஷ் இரண்டு பேரும் எதிரெதிரே பார்த்தால் வெறும் புன்னகையோடு விலகிப் போய் விடுகிறார்கள். என்னங்க நடந்தது?

வழக்கமாக அரசியல் கட்சிகளில் பதவி களுக்கு அடிபிடி போட்டி இருக்கும். ஆனால் ஆந்திராவில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள ஆளில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காத காங்கிரஸைப் புனரமைக்கும் பணியை நடிகர் சிரஞ்சீவியிடம் கொடுக்க நினைத்தது டெல்லி தலைமை. ஆனால், ‘நான் 150வது படத்தில் நடிக்கப்போகிறேன்’ என அவரும் நழுவி விட்டார்.

‘விஜய் 59’ படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் சமந்தா. விக்ரம் படம் டப்பிங் முடிந்துவிட்டது. தனுஷ் படமும் கிட்டத்தட்ட ரெடி. விக்ரம் படம் அக்டோபர் ரிலீஸ் என்பதால், ‘‘அக்டோபரே வா.. வா’ என ஆர்வம் பொங்கக் காத்திருக்கிறது பொண்ணு!

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் ரஜினியும், ராதிகா ஆப்தேயும் கணவன்-மனைவியாக நடிக்கிறார்கள். அவர்களுக்கு மகளாக நடிக்க ஒரு நடிகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். செப்டம்பர் 17ல் சென்னையிலிருந்து மலேசியா கிளம்புகிறார் ரஜினி! அதற்கு முன்பே ‘ரஜினியோடு நடிப்பது பாக்கியம்’ என பேட்டியளித்து ஒரு நடிகையின் முகம் பார்க்கலாம்.

விஷால் பரத்வாஜின் ‘ரங்கூன்’ படத்தில் பாலே நடனமாடும் பெண்ணாக நடிக்கிறார் கங்கனா ரணாவத். இதற்காக அமெரிக்காவிலிருந்து பயிற்சியாளர் வந்துள்ளார். கூடவே கத்திச்சண்டையும் குதிரையேற்றமும்கூட கற்கிறார் அவர்.

நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா காம்பினேஷனில் தமிழ், தெலுங்கில் ரெடியாகிவரும் படத்தின் ஷூட்டிங் பாரீஸில் நடக்கிறது. ‘‘திறமையான கார்த்தி, அழகான தமன்னாவுடன் பிரான்ஸ் வந்து, 14 வருடங்களுக்குப் பிறகு ஈபிள் டவரை மீண்டும் பார்க்குறது சந்தோஷமா இருக்கு!’’ என மகிழ்ந்து ட்விட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.

நேரடி தமிழ்ப்படம் பண்ணும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு. ‘‘என்னுடைய தெலுங்குப் படங்கள் இனி தமிழிலும் வெளிவரும். தமிழ் இண்டஸ்ட்ரியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்கிறார் மகேஷ்பாபு.

ஏ.ஆர்.முருகதாஸ் ஆபீஸ் ஃப்ளாட்டில் இரண்டு அறைகளில் இரண்டு டிஸ்கஷன் நடக்கின்றன. ஒரு டிஸ்கஷன் சல்மான் கானோடு செய்கிற படத்திற்காகவும் இன்னொன்று விஜய் படத்திற்காகவும்!

அஜித் பட ஷூட்டிங்கில் இருந்து விஜய், மகேஷ்பாபு படங்களின் புரொமோஷன்களில் இறங்கிவிட்டார் ஸ்ருதிஹாசன். கிடைத்த நேரத்தில் அப்பா கமலின் ‘தூங்காவனம்’ஸ்பாட்டிற்கும் சென்று, பாசத்தைக் காட்டி வந்திருக்கிறது பொண்ணு!

யாகூப் மேமனுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததற்காக சல்மான் கானை எதிர்த்து இந்துத்வா அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. அதேசமயம், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களில் திரையிடப்பட்ட முதல் பாலிவுட் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது அவரது லேட்டஸ்ட் ரிலீஸான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’.

‘அரண்மனை 2’ படத்தையடுத்து, ஜீவாவுடன் ஜோடி சேர்கிறார் ஹன்சிகா. ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ராம்பிரகாஷ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் ஆரம்பிக்கிறது.