மாற்றம்



எஸ்.ராமன்

மாமியாரோடு எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனைவி, பிறந்த குழந்தைக்கு ‘ஹேமலதா’ என மாமியார் பெயரையே சூட்டியது எனக்கு திகிலூட்டியது. குழந்தையை அடிக்கடி திட்டித் தீர்ப்பதன் மூலம், மாமியார் மீது குவிந்திருக்கும் கோபத்தை தீர்த்துக்கொள்ளப் போகிறாள் என்றே எனக்குத் தோன்றியது. ‘ஏண்டி ஹேமா... மூளை கெட்டவளே... அறிவு இருக்காடி உனக்கு..?’ என்று அவள் வாயிலிருந்து பிறக்கப்போகும் வார்த்தைகள் என் காதுகளில் ரிங்டோன் போல் ஒலிக்க ஆரம்பித்தது. குழந்தைக்கு ஒரு மாதம் ஆனபோதுதான் மனைவியின் சுயரூபம் தெரிந்தது. ‘‘ஹேமா கண்ணு... நீ ரொம்ப சமத்து. பால் கொண்டு வரும் வரை அழாம பொறுமையா இரு. அம்மா கஷ்டம் உனக்குப் புரியும் இல்ல... நீ ரொம்ப கெட்டிக்காரி யாச்சே!’’ - குழந்தையை அவள் இப்படித்தான் கொஞ்ச ஆரம்பித்தாள்.

‘‘என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால, பிரசவத்துக்கு எங்க வீட்டுக்குப் போக முடியல. அப்போ அம்மாவுக்கு அம்மாவா இருந்து கவனிச்சுக்கிட்ட மாமியாருக்கு நன்றிக்கடனாகத்தான் குழந்தைக்கு அவங்க பெயரை சூட்டினேன். எல்லோர்கிட்டயும் எப்பவும் ஒரே மாதிரி நடந்துக்கணும்னு அவசியம் இல்லைங்க. அவங்ககிட்ட நல்ல விஷயம் தெரிஞ்சா, நாமளும் நம்மை மாத்திக்கணும். குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்தாங்க!’’ மனைவியின் விளக்கம், அவள் மீது எனக்கிருந்த மதிப்பை உயர்த்தியது.