புதுச்சேரியை சிவக்க வைத்த ஊரடங்கு உததரவு



புதுச்சேரி என்றதும் பலருக்கு மெல்லிய தள்ளாட்டம் வரும். கொண்டாட்டத்திற்கு என்றே பார்த்துப் பார்த்துப் படைக்கப்பட்ட ஊர். சிலருக்கு அதன் ஆன்மிகம் பிடிக்கும். வீதிக்கு வீதி சித்தர்களின் சுவடு பொதிந்த மண். இவற்றைக் கடந்து, தமிழகத்தின் ஒரு தாலுக்காவின் பரப்பளவே உள்ள  அந்தப் பிரதேசத்தைப் பற்றிப் பேச ஏதுமில்லை. இதுதான் புதுச்சேரி பற்றிய பொதுவான பார்வை. ஆனால், அந்த மண்ணுக்கும் ஒரு தொன்மையான வரலாறு உண்டு. எதனோடும் ஒட்டாத தனித்துவமான வாழ்வியல் அடையாளங்கள் உண்டு. இந்தியாவையே திகைக்க வைத்த போராட்டச் சரித்திரங்கள் உண்டு. தங்களையே அர்ப்பணித்து அதன் ஆளுமையைக் காத்த மக்கள் தலைவர்கள் உண்டு. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்கொண்டிருந்த தருணத்தில் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் பிடியில் இருந்தது.



பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிராகவும், சுதந்திர இந்தியாவின் ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவும் புதுச்சேரி கொழுந்து விட்டு எரிந்த வரலாறுகள் எல்லாம் இன்றுள்ள தலைமுறை அறியாத கதைகள். காரணம், புதுச்சேரியின் தனித்தன்மைமிக்க வரலாறு பதிவு செய்யப்படவே இல்லை. அந்தக் குறையை தம் ஆறாண்டு கால உழைப்பின் மூலம் போக்கியிருக்கிறார் பி.என்.எஸ்.பாண்டியன். எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக ஆய்வாளர் என பலமுகங்களைக் கொண்ட பாண்டியன் ‘ஊரடங்கு உத்தரவு’ (விலை ரூ.200/-, வெர்சோ பேஜஸ் வெளியீடு, தொடர்புக்கு: 98946 60669) என்ற பெயரில் எழுதியுள்ள நூல், தமிழகத்தோடு இணைக்கும் முயற்சியைக் கண்டித்து பற்றியெரிந்த புதுச்ேசரியை நம் கண் முன்னால் நிறுத்துகிறது.

பதைபதைப்பும், பரபரப்புமான நாவலைப் போல நகர்கிற இந்த நூல், புதுச்சேரியின் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றையும், அரசியல் நகர்வுகளையும், சூழ்ச்சி களையும், துரோகங்களையும், தமிழக அரசியல் சூழலையும் ஆவணப்படுத்துகிறது. தலைவர்களின் நேர்காணல்கள், பத்திரிகைச் செய்திகள், சட்டமன்ற, நாடாளுமன்ற விவாதங்கள் என பாண்டியனின் தேடலும் உழைப்பும் இந்நூலை முக்கியமாக்கி இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் புதுவையில் கிளர்ந்தெழுந்தது. 1954, அக்டோபர் 21ம் தேதி, பிரெஞ்சு இந்தியப் பகுதிகளை இந்தியாவுடன் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘இந்தியாவோடு இணையும் பிரெஞ்சிந்தியப் பகுதிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பகுதியாக அமையும். நிர்வாகரீதியில் எந்த மாற்றங்கள் செய்தாலும் மக்களின் கருத்தை அறிந்தே செய்யப்படும்’ என்றும் பிரதமர் நேரு உறுதி அளித்தார்.

இணைப்புக்குப் பிறகு பொறுப்பேற்ற ஆட்சிகள் எதுவும் நிலையாக இல்லை. எம்.எல்.ஏ.க்கள் பலன் கிடைத்த திசைக்குத் தாவினார்கள். இந்தியாவுக்கு கட்சிதாவலைக் கற்றுக்கொடுத்ததே புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள்தான். கட்சி மாறிகளால் காட்சிகளும் மாறிக்கொண்டே இருந்தன.  1978ல் புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. முதல்வரையும் ஒரே ஒரு அமைச்சரையும் கொண்ட விசித்திரமான மந்திரிசபை செயல்பட்டது. நிர்வாகம் சீர்குலைந்த நிலையில், தி.மு.க., மத்தியில் ஆட்சி செய்த ஜனதா உள்பட அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அரசுக்கு எதிராக போராடத் தொடங்கின. போராட்டக்குழு தந்த கடும் அழுத்தத்தால் ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு. புதுச்சேரி அரசியல் சூழலில் நிலவும் நிலையற்ற தன்மையால் வெறுத்துப் போன பிரதமர் மொரார்ஜி தேசாய், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தமிழகத்தோடு இணைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்’ என்று அறிவித்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும், “முதலமைச்சர் கூட்டங்களில் புதுச்சேரி முதல்வரும், 8 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேச முதல்வரும் சமமாக உக்கார முடியுமா..?” என்று கேள்வி எழுப்பி தேசாயின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பற்றிக்கொண்டது புதுச்சேரி. அதிமுக அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அனைத்துக்கட்சி போராட்டக்குழு ‘புதுவை மாநில இணைப்பை எதிர்க்கும் போராட்டக் குழு’வாக மாற்றப்பட்டது. தங்கள் தனித்தன்மைக்கும், உரிமைக்கும் வரும் ஆபத்தை உணர்ந்த மக்கள் தாங்களாகவே களத்துக்கு வந்தார்கள். தேசாயின் ஜனதாகட்சி உள்பட மொத்தக் கொடிகளும் ஒற்றைக் கோஷத்தில் இணைந்து நின்றன. ஆனாலும் தேசாய் தன் நிலையில் உறுதியாக இருந்தார். மக்கள் வெகுண்டெழுந்தனர். கடைகள் அடைத்துக் கொண்டன. ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளுமாக நகர்ந்தன. மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தார்கள். அரசு ஊழியர்கள் ஒத்துழைக்க மறுத்தார்கள். குடியரசு தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. மத்திய போலீஸோடு சேர்ந்து புதுவை போலீசும் ஆயுதம் தரித்தது. தடியடி, துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகைக்குண்டு என புதுச்சேரியை ரத்தக்களரி ஆக்கியது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆத்திரத்தில் மக்கள் போலீஸ் வாகனங்களைக் கொளுத்தினர். கல்வீசித் தாக்கினர். போராட்டம் கலவரமாக மாறியது. கண்டதும் சுட உத்தரவு தரப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சுகுமாறன், பாண்டுரங்கன் என இருவர் குண்டுக்கு இரையாயினர். (போராட்டக்குழு 120 பேர் இறந்ததாகச் சொல்கிறது) பல நூறு பேர் காயம்பட்டார்கள். இந்த எழுச்சியை எதிர்பாராத தேசாய், ‘புதுச்சேரியை தமிழ்நாட்டோடு இணைக்கும் எண்ணம் இல்லை’ என்று அறிவித்தார்.

1979 ஜனவரி 21 முதல் 31 வரையிலான புதுச்சேரியின் பதைபதைப்பான இந்த 10 நாட்களை அப்படியே காட்சிகளாக்கி கண்முன் நிறுத்துகிறது ‘ஊரடங்கு உத்தரவு’ நூல். நேரடியாக போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாக்கு மூலங்கள் உயிர்ப்பைக் கூட்டுகின்றன. ‘‘சினிமாவும், தொலைக்காட்சிகளும் புதுச்சேரி பற்றி மோசமான பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளன. உண்மையில் இது மிகவும் ரசனையான மண். அரசியல் ரீதியில் இங்கு பல ரகசியங்கள் உண்டு. ஆனால் புதுச்சேரி அரசியல் வரலாறு இதுவரை பதிவுசெய்யப்படவே இல்லை. அந்த மனக்குறைதான் என்னைத் தூண்டியது. அடுத்த தலைமுறைக்கு புதுச்சேரியின் போராட்ட வரலாற்றைக் கொண்டு செல்லவேண்டும் என்பதே என் நோக்கம். புதுச்சேரியை இலக்கிய உலகில் பிரதிநிதித்துவப்படுத்தும் என் ஆதர்சம் பிரபஞ்சன். எழுத்தாளர்கள் கி.ரா, ஜெயப்பிரகாசம், பொன்னீலன் உள்ளிட்ட பலரும் இந்த நூலை அங்கீகரித்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாகவும் இயங்க வேண்டும் என்ற உந்துதலை எனக்கு இந்த நூல் தந்திருக்கிறது’’ என்கிறார் பாண்டியன். ஏற்ற இறக்கமற்ற, கொள்கை முடிவுகளுக்குள் தோயாத இயல்பான வரலாறுகளே இப்போதைய தேவை. ‘ஊரடங்கு உத்தரவு’ அந்த வகையில் ஒரு முன்னுதாரண வரலாற்று நூல்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: முபாரக்