இங்கே சூதாட்டமும் ஒரு பண்டிகை!
பரபரப்பான பாரிஸ் கார்னரின் நெரிசலான ஒரு தெரு. வழிகேட்கும் வாகனங்களும் வழிவிட மறுக்கும் பாதசாரிகளுமாக விழிபிதுங்கும் தெருவில்கூட ஒரு ஷூட்டிங் நடக்க முடியுமா? ஆனால், நடந்தது. இறுக்கமான முகமும், பிளாஸ்திரி போட்ட மூக்குமாக அங்கே உறுமிக்கொண்டிருந்தவர் கிருஷ்ணா. டூவீலரும் ஹெல்மெட்டுமாக ஹீரோயின் ‘கயல்’ ஆனந்தி. கையில் ஆயுதங்களோடு நான்கைந்து அடியாட்கள். அட்மாஸ்பியரைப் பார்த்த உடனேயே புரிந்தது, இது வட சென்னை சப்ஜெக்ட் என்று! ‘‘அப்போ டைட்டில் டெர்ரரா இருக்கணுமே... அது என்ன சார் ‘பண்டிகை’?’’ - அறிமுக இயக்குநரான பெரோஸிடம் ஆரம்பித்தோம். விளம்பரப் படங்களிலிருந்து சினிமாவிற்கு வந்தவர் இவர்.
 ‘‘இந்த மண்ணுல நடக்கற ரொம்பவே ஸ்பெஷலான பண்டிகை இது. ஆனா, தீபாவளி, பொங்கல் மாதிரி இல்லை. சிம்பிளா சொன்னா இது ஒரு ஆக்ஷன் கொண்டாட்டம். அண்டர்கிரவுண்ட் வேர்ல்டுல நடக்கிற சூதாட்டம் பத்திச் சொல்றேன். சின்ன வயசுல இருந்து வறுமையைப் பார்த்து வளர்ந்த ஒரு ஹீரோ... ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிட்டு, வெளிநாட்டுல கை நிறைய சம்பாதிக்கணும்னு அவனுக்கு கனவு. ஆனா, அவர் அப்படி ஆக முடியலை. பணத்துக்கு ஆசைப்பட்டு சட்டத்துக்கு புறம்பான ஒரு கூட்டத்துல போய் மாட்டிக்கிறார். அதுல இருந்து அவர் எப்படி வெளியே வர்றார் என்பதே கதை. இதுல காலேஜ் பொண்னு ஆனந்தியோட ஒரு லவ் டிராக். எப்படிச் சொன்னா ஈஸியா க்ளிக் ஆகும்னு விளம்பரப்பட உலகம் எனக்கு க்ளாஸ் எடுத்திருக்கு. அதை சினிமாவுல அப்ளை பண்றேன்!’’
 ‘‘கிருஷ்ணா - ஆனந்தின்னு காம்பினேஷன் நல்லா இருக்கே?’’
‘‘கிருஷ்ணா என்னோட ஃப்ரெண்ட். அடிக்கடி மீட் பண்ணுவோம். நிறைய பேசிக்குவோம். ஒருநாள் அவர்கிட்ட ‘நீதான் ஹீரோ மச்சான்’னு சொன்னேன். கதை கூட கேட்காமல், ஸ்பாட்டுக்கு வந்து நின்னார். என் மேல அவர் வச்ச நம்பிக்கையை காப்பாத்துற பொறுப்பு இன்னும் அதிகரிச்சிருக்கு. ஹீரோயின் ஆனந்தி, எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கிற டைப். சீரியஸான சீன், ஷாட் பத்தி விளக்கிச் சொல்லும்போது கூட சிரிப்பாங்க. கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் புரியாம கேக்குறாங்களேனு பார்த்தா, ஷாட்ல வந்து நின்னதும் பர்ஃபார்மென்ஸ் பின்னி எடுத்துடுவாங்க!’’
‘‘இது ஆக்ஷன் த்ரில்லரா?’’
‘‘பொழுதுபோக்குக்கு நிச்சயம் கேரன்டி சொல்லலாம். நிழல் உலகில் நடக்கிற பந்தய சண்டை, சூதாட்டத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டப்போறேன். படத்துல நிறைய வில்லன்கள். ‘கோலி சோடா’ மதுசூதனன், ‘பீட்சா’ ஜெயக்குமார் தவிர சர்ப்ரைஸ் வில்லன்கள் நிறைய வருவாங்க. மொத்தமே 3 பாட்டுதான். ஆனா, ஃபைட் நிறைய இருக்கு. ‘மெட்ராஸ்’ படத்துக்கு ஸ்டண்ட் அமைச்ச அன்பறிவு, இப்போ ரஞ்சித் இயக்குகிற ரஜினி சார் படத்துக்கும் ஃபைட். அவர்தான் நமக்கும். ‘காக்கா முட்டை’க்கு பின்னணி இசையைத்த ஆர்.எச்.விக்ரம் மியூசிக், மனோஜ் பரமஹம்சாவின் உதவியாளர் அரவிந்த் கேமரா. இப்படி பிரமாதமான டீம் அமைச்சுக் கொடுத்திருக்காங்க தயாரிப்பாளர் விஜயலட்சுமி அகத்தியன். காஸ்ட்யூம்ஸை நிரஞ்சனி அகத்தியன் பண்றாங்க. ‘பருத்தி வீரன்’ சரவணன், நிதின் சத்யா, கருணாஸ், பிளாக் பாண்டின்னு தெரிந்த முகங்களும், 40 சதவீதம் புதுமுகங்களும் படத்துல இருக்காங்க. சேஸிங் மாதிரி விறுவிறுப்பான ஸ்கிரிப்ட்ல ப்ளாக் வகை காமெடி, ‘பண்டிகை’யை சுவாரஸ்யமாக்கும்!’’
‘‘அதென்ன புரொட்யூஸர் விஜயலட்சுமி..? உங்க வருங்கால மனைவி தயாரிக்கிறாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே?’’
‘‘லவ் பண்றப்போ ரொம்ப ஸ்வீட்டா பேசினாங்க சார். ஆனா, புரொடியூஸரா இருக்கறப்ப ரொம்ப ஸ்ட்ரிக்டா டீல் பண்றாங்க. ‘அதுக்கு ஏன் அவ்வளவு செலவு... இதுக்கு ஏன் இவ்ளோ செலவு’ன்னு என்னை இறுக்கிப் பிடிக்கிறாங்க. ஆனா, அதுவும் நல்லதுதான். அப்படி அவங்க பிடிக்கறதாலதான் இவ்வளவு சீக்கிரம் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் போயிட்டு வந்திருக்கோம். அகத்தியன் சார் சினிமாவில ஜீனியஸ். விஜயலட்சுமிக்கு சினிமா பத்தி அவ்வளவு நாலேஜ் இருக்கு. மிகச்சரியான பட்ஜெட் போட்டு, நான் கேட்டதை பண்ணிக் குடுத்துடுறாங்க. ஒரு விதத்துல பார்த்தா, பிரமிப்பா இருக்கு. சமீபத்தில் ஒரு பத்திரிகையில, ‘காதலருக்காக படம் தயாரிக்கிறாங்க விஜயலட்சுமி’ன்னு எழுதிட்டாங்க. அப்படி இல்லை. இதுக்கு முன்ன எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ல ஒரு கதை சொல்லி, விக்ரம் பிரபுவை வச்சு ஒரு புராஜெக்ட் தொடங்குற மாதிரி இருந்துச்சு. சில காரணங்களால அதைப் பண்ண முடியலை. அப்புறம்தான் விஜயலட்சுமி தயாரிப்பாளர் ஆனாங்க!’’
‘‘உங்க லவ் பத்தி சொல்லுங்களேன்..?’’
‘‘நினைச்சேன்! மைல்டா படத்துல ஆரம்பிச்சி லவ் மேட்டர்ல வந்து நிக்கிறீங்க. சின்ன வயசுல இருந்து நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். நட்பு அப்புறம் காதலாச்சு. 14 வருஷமா காதலிச்சு, செப்டம்பர்ல கல்யாணம் பண்ணிக்கப் போறோம். நான் ஸ்கூல் படிப்பை சென்னையிலதான் படிச்சேன். அமெரிக்காவில் டிகிரி முடிச்சேன். அப்புறம் விளம்பரப் படங்கள், ‘தூங்கா நகரம்’, ‘வல்லினம்’ படங்கள்ல வேலை செய்த அனுபவத்தை வச்சி, ‘பண்டிகை’ கொண்டாட வந்துட்டேன்!’’ - மை.பாரதிராஜா
|