கழிவு பொருள்களை கொடுங்கள்......நாங்கள் ஒரு குழந்தைக்கு கல்வி கொடுக்கிறோம்!



வழிகாட்டும் ‘பேப்பர்மேன்’

“ஒரு கண்ணாடி பாட்டில் மண்ணுல மக்கிப் போக 10 லட்சம் ஆண்டுகள் ஆகும். பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 100 வருடங்களும், பேப்பருக்கு 4 மாதங்களும் தேவை. இந்தியாவில குவியும் மொத்தக் கழிவுகள்ல வெறும் 20%தான் மறுசுழற்சிக்குப் போகுது. 80% கழிவுகள் பூமியை மெல்ல மெல்ல மூடிக்கிட்டிருக்கு. 60 கிலோ காகிதத்தை மறுசுழற்சி செஞ்சா 1 மரத்தைக் காப்பாத்தலாம். 15 கிலோ காற்றை சுத்தமாக்கலாம். 2 சதுர அடி நிலத்தைப் பாதுகாக்கலாம்...”

- பொறுப்புணர்வோடு பேசுகிறார் மேத்யூ ஜோஸ். மாணவர்கள் இவரை ‘பேப்பர் மேன்’ என்று அழைக்கிறார்கள். காகிதங்கள் உள்ளிட்ட கழிவுகளை மக்களிடம் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவதோடு, கிடைக்கும் தொகையில் 80 சதவீதத்தை 25க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது மேத்யூ நடத்துகிற ‘பேப்பர் மேன்’ நிறுவனம்.
கேரளாவைச் சேர்ந்த மேத்யூ பட்டப்படிப்புக்காக சென்னை வந்தவர். இங்கு அவரைப் புரட்டிப் போட்டது எக்ஸ்னோரா அமைப்பு. ‘‘அதுக்கு முன்பு வரை நான் சராசரி இளைஞன். அந்த அமைப்புதான் எனக்குள் சமூக அக்கறையை விதைச்சுது.  எக்ஸ்னோராவில இருந்த பலதுறை நிபுணர்கள், குப்பை மறுசுழற்சியில இருந்து குளோபல் வார்மிங் வரை நிறைய விஷயங்கள் கத்துக் கொடுத்தாங்க. ஒரு வருட அனுபவத்துடன் ‘ஏதாவது செய்யணும்’ என்கிற கனவோட வெளியில வந்தேன். பழைய பேப்பர் வாங்கற ஒருத்தர், ஒருநாள் எங்க ரூமுக்கு வந்தார். அறையில குவிஞ்சிருந்த பழைய பொருட்களை வாங்கிக்கிட்டு பணம் கொடுத்தார். அவர்கிட்ட பேசிக்கிட்டிருந்த தருணம்தான் இத்தனைக்குமான விதை.

சென்னையில ஒரு நாளைக்கு 6 ஆயிரம் டன் குப்பை சேருது. அதுல 40% மறுசுழற்சி செய்ய முடிந்த கழிவுகள். அதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய். இதுல மக்களுக்கு பெரிய பங்களிப்பெல்லாம் தேவையில்லை. கழிவுகளை வீதியில வீசாம காயலான்கடைக்காரர்கிட்ட கொடுத்துட்டா போதும். மற்ற வேலைகளை அவர் பார்த்துப்பார். ஆனா இந்த மாற்றம் ஒருங்கிணைஞ்ச அளவுல நடக்கலே. இதை ஏன் நாம கையில எடுக்கக்கூடாதுன்னு தோணுச்சு. இந்தியாவோட அத்தனை நகரங்களும் குப்பைக்காடா கிடக்கு. மழைநீர், கழிவுநீர் கால்வாயெல்லாம் குப்பை. அமெரிக்காவுல மக்கும் குப்பை போடுற பேக்ல மக்காத குப்பையைப் போட்டுட்டா உடனே 100 டாலர் அபராதம். இங்கே யாருமே பொறுப்பு ஏத்துக்கல.
குப்பையா வீசுற பொருளுக்கு மதிப்பு இருக்குங்கிற உணர்வை ஏற்படுத்தணும். இதை வெறும் பணத்தால மட்டும் ஏற்படுத்த முடியாது. அதைக் கடந்த ஒரு திருப்தியையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கணும். நிறைய யோசிச்சேன். சூழலியல் சார்ந்த பிரச்னைகள் ஒரு பக்கம்... வறுமை, கல்வியின்மை, ஆதரவின்மைன்னு பாதிக்கப்படுற குழந்தைகள் ஒரு பக்கம்... இந்த ரெண்டையும் ஒரே கோட்டுல இணைச்சேன். மறுசுழற்சி சார்ந்த சிந்தனையை மக்கள்கிட்ட விதைக்கிற அதேநேரம், அதில் கிடைக்கும் பணம் மூலமா இன்னொரு நல்ல காரியம் நடக்கும். ஒரு கிலோ பழைய பேப்பரை கொடுக்கிறது மூலமா ஒரு பெண் குழந்தை ஸ்கூலுக்குப் போறாள்னா நிச்சயம் எல்லாருமே அதைச் செய்வாங்க.  

முதல் களமா பள்ளிகளை எடுத்துக்கிட்டேன். நானே காயலான்கடைக்காரரா மாறினேன். மாணவர்கள்கிட்ட பேசினேன். ‘ரீசைக்கிள் வீக்’னு நிகழ்ச்சிகள் நடத்தினேன். மாணவர்கள் பழைய பேப்பர்களைக் கொண்டு வருவாங்க. அதைப் பணம் கொடுத்து வாங்குவேன். மாணவர்கள் அந்தப் பணத்தை பெண் குழந்தைகளோட கல்விக்காக செயல்படுற ஒரு தொண்டு நிறுவனத்துக்கு அனுப்புவாங்க. நான் வாங்கிய பேப்பர்களை காயலான் கடையில போடுவேன். அதில் இருந்து கிடைக்கிற பணத்தை என் செலவு போக குழந்தைகளுக்கு சான்றிதழ் கொடுக்கிறது, பரிசு கொடுக்கிறதுன்னு செலவு செய்வேன். ஒரு வருஷம் இந்த வேலை ஓடுச்சு. பிள்ளைகள் என்னைக் கண்டாலே ‘பேப்பர் மேன்’னு கத்த ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு கட்டத்துல அந்தப் பெயரே எனக்கான அடையாளமா மாறிடுச்சு. 

அடுத்த கட்டமா இன்னொரு வேலையைத் தொடங்குனேன். இந்தியாவில பழைய பேப்பர், இரும்புன்னு வாங்கறவங்க 15 லட்சம் கடைக்காரங்க இருக்காங்க. இவங்களோட துணை இல்லாம மறுசுழற்சி சாத்தியமே இல்லை. அவங்களையும் உள்ளடக்கி ஒரு திட்டம் தயாரிச்சேன். வழக்கம் போல மாணவர்கள் காகிதங்களை சேகரிச்சுக் கொண்டு வருவாங்க. வாரம் ஒருமுறை அந்தப் பகுதியில இருக்கிற ஒரு காயலான் கடைக்காரர் அதை வாங்கிக்குவார். அதில் கிடைக்கும் பணத்தை குழந்தைகள் தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பிடுவாங்க. இதுக்கு பெரிய வரவேற்பு இருந்துச்சு. பல மாநிலங்கள்ல இதை செயல்படுத்த முடிஞ்சுது. இந்தத் திட்டத்துல கிடைச்ச பணத்தின் மூலம் 100 பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் போனாங்க. 
அடுத்து, பொருட்களோட அளவை அதிகப்படுத்துறதுக்காக மாணவர்களை வச்சு பள்ளிகள்லயே அமைப்புகளைத் தொடங்கினேன். ‘கிரீன் வாரியர்’, ‘ரீசைக்கிள் ராக்கர்ஸ்’னு பல பெயர்கள்ல அந்த அமைப்புகள் நடந்துச்சு. மாணவர்கள் காகிதம், பிளாஸ்டிக் கழிவுகளை அந்த அமைப்புக்குத் தருவாங்க. அதை விற்பனை செஞ்சு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அரிசி, குழந்தைகள் இல்லங்களுக்கு புத்தகங்கள்னு வாங்கித் தரும் அந்த அமைப்பு.

இந்த மூன்றாண்டு அனுபவத்தையும் வச்சு, இந்தப் பணியை இன்னும் மேலே எப்படிக் கொண்டுபோறதுன்னு உதிச்ச சிந்தனையின் விளைவுதான் ‘பேப்பர் மேன்’ கம்பெனி. இதுக்குத் துணையா நின்னது என் நண்பர் அவினாஷ். ‘பேங்க் ஆப் அமெரிக்கா’வுல பெரிய பதவியில இருந்தார். எனக்காக வேலையை விட்டுட்டு வந்து நின்னார். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நிறைய வாடிக்கையாளர்களை உள்ளே கொண்டு வரத் திட்டமிட்டோம். முதற்கட்டமா 10 குடும்பங்களைச் சந்திச்சோம். ‘உங்க வீட்டுல சேர்ற மறுசுழற்சி செய்ய முடிந்த கழிவுகளை எங்களுக்குக் கொடுங்க. அதில் கிடைக்கும் பணத்தை நாங்க தொண்டு நிறுவனங்களுக்குத் தருவோம். அதன்மூலமா ஒரு குழந்தைக்கு கல்வி கிடைக்கும்’னு சொன்னோம். உற்சாகமா ஒத்துக்கிட்டாங்க. வீடுகள்ல பெட்டி நிரம்பியதும் போன் செய்வாங்க. அந்தப் பகுதியில இருக்கிற காயலான் கடைக்காரர் அந்த வீட்டுக்குப் போய் பொருட்களை எடை போட்டு எடுத்துக்குவார். காயலான் கடைக்காரர் அதற்கான விலையை எங்களுக்குத் தருவார். நாங்க அந்தப் பணத்தை வசூலிச்சு தொண்டு நிறுவனத்துக்கு அனுப்புவோம். வாடிக்கையாளர்களும் தொண்டு நிறுவனத்தைத் தேர்வு செய்யலாம். எவ்வளவு தொகை, அந்தத் தொகை எந்தக்  குழந்தைக்குப் பயன்பட்டிருக்கு,  பொருட்களை தந்ததன் மூலமா அவங்க எவ்வளவு  காற்று, தண்ணீர், நிலம், மரங்களை காப்பாத்தியிருக்காங்கன்னு எல்லா  விபரங்களும் இ-மெயில்ல போயிடும். (நீங்களும் இந்தப் பணியில் கைகோர்க்க விரும்பினால் ‘பேப்பர்மேனை’ தொடர்பு கொள்ளலாம்: 80152 69831).

கிடைக்கிற தொகையில 20 சதவீதத்தை கம்பெனிக்கு எடுத்துக்கிட்டோம். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த நிறுவனம். இப்போ 2150 வீடுகள் இந்தத் தொண்டுல இணைஞ்சிருக்காங்க. 60 பள்ளிகள், 60க்கும் மேற்பட்ட கம்பெனிகள் பொருட்கள் தர்றாங்க. 250 காயலான் கடைகள் எங்க ஒருங்கிணைப்புல இருக்காங்க. 25 தொண்டு நிறுவனங்களுக்கு நிதி சேகரிச்சுக் கொடுக்கிறோம். நேத்து வரைக்கும் 77,517 கிலோ கழிவுகளை மறுசுழற்சி செஞ்சிருக்கோம். இதன் மூலம் 1292 மரங்களை காப்பாத்தியிருக்கோம். 20.30 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிச்சிருக்கோம். 20,154 கிலோ காற்றை சுத்தமாக்கியிருக்கோம். 2328 சதுர அடி நிலத்தை பாதுகாத்திருக்கோம். பலநூறு குழந்தைகள் பள்ளிக்குப் போறாங்க. நிறைய பேருக்கு மருத்துவ உதவிகள் கிடைச்சிருக்கு...’’  உற்சாகமாகப் பேசுகிறார் மேத்யூ ஜோஸ்.

 இப்ப நல்லது பண்ண பழைய பேப்பர் போதும்

''ஒரு கிலோ பழைய பேப்பரை கொடுக்கிறது மூலமா ஒரு பெண் குழந்தை ஸ்கூலுக்குப் போறாள்னா நிச்சயம் எல்லாருமே அதைச் செய்வாங்க..."

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்