உலகை அழிக்கும் வீடியோ கேம் ஆயுதங்கள்!



வாய்ச்சொல்லில் வீரர் போல, இன்று பலரும் வீடியோ கேம் வீரர்களாகி விட்டார்கள். நிஜ உலகில் பல்லிக்கு பயந்தாலும் கேமுக்குள் பல கட்டிடங்களைத் தாண்டிக் குதிக்க முடியும் அவர்களால். வரிசையாய் நட்சத்திரங்களை லவட்டி வலிமை ஏற்றிக்கொண்டு கடைசியாக மான்ஸ்டரை அழிக்கும் மாவீரம் இவர்களுக்கு ‘கேம்ஸ்டிக் வந்த கலை’. உலகையே காப்பாற்றும் பொறுப்பு இப்படிப்பட்ட Gamers கைக்கு வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் ‘பிக்சல்ஸ் 3D’!

அநேகமாக இந்த வருடத்தில் ஹாலிவுட் விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட சினிமா ஒன்லைன், இந்தப் படத்தினுடையதாகத்தான் இருக்கும். ஆரம்ப கால வீடியோ கன்சோல்களை நினைவிருக்கிறதா? காயின் போட்டு விளையாடும் வெயிட் மெஷின் போன்ற செட்டப். அதில் விளையாடப்பட்ட அந்தக் கால வீடியோ கேம்கள் எல்லாம் நிஜ உலகுக்கு வந்து பூமியை அழிக்கும் விஷுவல் ட்ரீட்தான் படம் மொத்தமும்.

1982ல் வீடியோ கேம் விளையாட்டில் ‘உலக சாம்பியன்ஷிப்’ போட்டி நடக்கிறது. வீடியோ கேம் வித்தகனான நம் ஹீரோவும் அவனுடைய குண்டு நண்பனும் அங்கு போகிறார்கள். அந்த சாம்பியன்ஷிப் போட்டி முழுவதையும் ஒளிப்பதிவு செய்து, நாசா நிறுவனம் அந்த டேப்பை விண்வெளிக்கு அனுப்பி வைக்கப் போவதாகப் பெருமையுடன் அறிவிக்கிறார்கள். போட்டியின் இறுதிச் சுற்று வரை வரும் நம் ஹீரோ, கடைசியில் உலக சாம்பியனான எடி ப்ளான்ட் என்பவனிடம் தோற்றுப் போகிறான். அப்படியே 2015க்குத் திரும்பினால், நம் ஹீரோ வீடியோ கேம் தவிர வேறு எதிலுமே ஜெயிக்காத ஒரு மொக்கை மனிதனாக வாழ்கிறான். வீடு வீடாகப் போய் ஹோம் தியேட்டர் அமைத்துக் கொடுப்பது அவன் வேலை. ஹீரோவின் குண்டு நண்பன் அமெரிக்காவுக்கே அதிபர் ஆகிவிடுகிறான். உலக சாம்பியனாக வந்த எடியோ, கம்ப்யூட்டர் ஹேக்கராகி, பிடிபட்டு சிறையில் இருக்கிறான். விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர்களின் சாம்பியன்ஷிப் வீடியோவை வேற்றுகிரகவாசிகள் பார்த்து, அது என்னவோ போருக்கான அழைப்பு என்பது போல நினைத்துவிடுகிறார்கள். எனவே, அந்த வீடியோ கேம் போலவே ஆயுதங்களை உருவாக்கி பூமிக்கு அனுப்புகிறார்கள். இந்தத் தாக்குதலிலிருந்து பூமி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மூன்று ரவுண்டுகளும் மூன்று லைஃப்களும்கூட கொடுக்கிறார்கள். அந்த மூன்றிலும் ஜெயிக்க மூன்று கேம் நிபுணர்கள் உதவுவதுதான் முழுக்கதையும்.

ஹீரோ உட்பட இதில் வரும் மூன்று வீடியோ கேம் வீர்களும் நோஞ்சான்கள்தான். ஆனால், செம உடம்புடன் மிரட்டி எடுக்கும் அமெரிக்க ஆர்மிக்கு அவர்கள் டிரெயினிங் தரவேண்டிய கொடுமை நேர்கிறது. ‘ஒழுங்கா வீடியோ கேம் ஆடத் தெரியல... வந்துட்டான்’ என மிஸ்டர் கட்டுமஸ்துகளை அவர்கள் ஃபுல் பரேடு எடுக்கும் காட்சிக்கு மெஜாரிட்டி மக்களிடம் அப்ளாஸ்!
அந்தக் கால ஆர்கேட் கேம்ஸ் எனப்படும் பாக்மேன், ஸ்பேஸ் இன்வேடர், டக் ஹன்ட், ஸ்நேக், மங்க்கி காங் என எல்லாமே இந்த சினிமாவில் உயிர்பெற்று வருகின்றன. ஆனால், இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு இதையெல்லாம் அடையாளம் தெரியுமா என்பது பெரிய கேள்வி. ‘அமெரிக்க அதிபர் இந்த உலகை எப்படிக் காப்பாற்றப் போகிறார்’ எனக் கேட்டபடி வெளியே மீடியா அலை மோத, அவர் இங்கே மனைவியுடன் கேக் வெட்டி விளையாடிக் கொண்டிருப்பது நம்பர் 1 நக்கல். நம் தாஜ்மகாலை முதன்முதலாக கிராஃபிக்ஸ் மூலம் தகர்த்த பெருமை இந்தப் படத்துக்குத்தான். தாஜ்மகால் முன்னே ராஜ் - சிம்ரன் என ஒரு ஜோடி(அப்படியே ‘தில்வாலே துல்கனியா லேஜாயேங்கே’ ஸ்டைல்!)... காதலை சொல்லும்போது ரீ-ரிக்கார்டிங் வேண்டாமா? தன் ஸ்மார்ட் போனில் இசையை ஒலிக்கவிட்டபடியே ‘லவ் யூ’ சொல்கிறான் ராஜ். சிம்ரன் அதற்கு பதில் சொல்லும் முன் பேக்கிரவுண்டில் சின்னாபின்னமாகிறது தாஜ்மகால். உடனடியாக அந்த அதிசயக் காட்சியை வீடியோ எடுக்கிறான். திரும்பி நின்று செல்ஃபியும் எடுக்க முயல்கிறான்.

இம்மாதிரி மனித இயல்புகளை அங்கதம் செய்வதுதான் இந்தப் படத்தில் நிறைய. சொந்தத் தீவு வாங்கி கும்மாளமடிக்கும் அமெரிக்க அதிபர்களின் வழக்கம், கண்டதை எல்லாம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் நாசாவின் கோமாளித்தனம், அமெரிக்காவைக் காப்பதுதான் உலகத்தைக் காப்பது எனும் எழுதப்படாத தியரி என எல்லாமே மிச்சமில்லாமல் நக்கலடிக்கப்பட்டிருக்கிறது ‘பிக்சல்ஸ்’ படத்தில்! ‘‘எனக்கு கென்னடியின் பெட்ரூமும் அதில் ஒரு பெண்ணும் வேண்டும்’’ என ஒரு கிரிமினல் கேட்பதும், வீரியத்தினும் காரியம் பெரிதென அதிபர் அதற்கு ஒப்புக்கொள்வதும் நிச்சயம் அமெரிக்கர்களின் தேசப்பற்றுக்கு கொம்பு சீவாது. எனவேதான் ஹாலிவுட்டில் இதை மொக்கை என்கிறார்கள். ஆனால், ‘‘அமெரிக்கா தவிர்த்த மற்ற இடங்களில் படம் ஹிட்’’ என அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான சோனி. அந்த ஹிட்டில் நமக்கும் பங்குண்டு!
- நவநீதன்