இந்திய மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நேரம் இது...



மருத்துவப் படிப்பென்றால் எம்.பி.பி.எஸ் மட்டும்தான் என்றிருந்த மனநிலை அண்மைக்காலமாக பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் மாறி வருவதை உணர முடிகிறது. ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகள் மீது மாணவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இப்படிப்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ஸ்டூடன்ட்ஸ் விஷன் அகாடமியின்  இயக்குனரும், கல்வியாளருமான ஆர்.ராஜராஜன்.

மாற்று மருத்துவம், இந்திய மருத்துவம் என்றெல்லாம் அழைக்கப்படும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட ‘நாட்டு மருத்துவ’ முறைகள்தான் இன்று உலகை ஆட்கொண்டு நிற்கிற அலோபதி மருத்துவத்துக்கு முன்னோடிகள். பக்க விளைவுகள் உள்ளிட்ட பிரச்னைகளால் அலோபதி மருத்துவத்தின் மீதிருந்த மக்களின் ஆர்வம் இப்போது சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளின் பக்கம் திரும்பியிருக்கிறது.

அலோபதி மருத்துவர்களை நியமிப்பதைப் போலவே மத்திய, மாநில அரசுகள் அரசு மருத்துவமனைகளில் இந்திய மருத்துவ நிபுணர்களையும் நியமித்து வருகின்றன. அதனால் அண்மைக்காலமாக இப்படிப்புகள் மீது மாணவர்கள் ஈடுபாடு காட்டுகிறார்கள்.
இந்திய மருத்துவப் படிப்புகள் என்னென்ன?

* BSMS    (Bachelor of Siddha Medicine and Surgery)
* BAMS    (Bachelor of Ayurvedic Medicine and Surgery)
* BHMS    (Bachelor of Homeopathy Medicine and Surgery)
* BUMS    (Bachelor of Unani Medicine and Surgery) 
* BNYS    (Bachelor of Naturopathy and Yogic Science)
இவை அனைத்தும் அலோபதி மருத்துவப் படிப்பான MBBS படிப்புக்கு இணையானவை என்பது முக்கியமானது.

BSMS (Bachelor of Siddha Medicine and Surgery )


BSMS என்பது சித்த மருத்துவப் படிப்பாகும். ஒரு வருட இன்டர்ன்ஷிப்புடன் கூடிய ஐந்தரை ஆண்டு படிப்பு. +2 வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். நிலம், நீர், நெருப்பு, காற்று, வெற்றிடம் என்னும் ஐம்பூதங்களின் அடிப்படையில்   வாதம்,   பித்தம், கபம்  ஆகிய மூன்று கூறுகளையும் உள்ளடக்கி மனிதனின் உடம்பை பகுத்து நோய் தீர்ப்பது சித்த மருத்துவத்தின் உள்ளடக்கம்.

BAMS (Bachelor of Ayurvedic Medicine and Surgery)

ஙிகிவிஷி என்பது ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த படிப்பு. இதுவும் எம்பிபிஎஸ்ஸைப் போலவே ஒரு வருட இன்டர்ன்ஷிப்புடன் கூடிய ஐந்தரை ஆண்டு படிப்பாகும். +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் எடுத்துப் படித்தவர்கள் இதில் சேரலாம். வேத காலம் என்று கருதப்படும் பன்னெடுங்காலத்தில் இருந்து இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் இம்மருத்துவத்தின் தந்தையாக சரகர் கருதப்படுகிறார். உலோகங்கள், தாதுக்கள், மூலிகைகள், விலங்குப் பொருட்கள் ஆகியன இம்முறையில் மருந்தாகத் தரப்படுகின்றன.

BHMS (Bachelor of Homeopathy Medicine and Surgery)

BHMS எனப்படுவது ஹோமியோபதி மருத்துவம் சார்ந்த படிப்பாகும். இதுவும் ஒரு வருட இன்டர்ன்ஷிப்புடன் கூடிய ஐந்தரை ஆண்டு படிப்புதான். +2 வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் எடுத்துப் படித்தவர்கள் இதில் சேரலாம். ஜெர்மனி நாட்டைச் சார்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் என்பவர் கண்டுபிடித்தது இந்த மருத்துவமுறை. சிறிய அளவு மருந்தைக் கொண்டு நோய்களை குணப்படுத்தும் இம்முறையில் தாவரங்களின் வேர்கள், கிளைகள், தண்டுகள், இலைகள், மொட்டுகள், கீரைகள் மற்றும் காட்டுத் தாவரங்கள், தாதுக்கள், விலங்குகளில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுகின்றன.

BUMS (Bachelor of Unani Medicine and Surgery)

 
BUMS யுனானி மருத்துவம் பற்றிய படிப்பு. இதுவும் ஒரு வருட இன்டர்ன்ஷிப்புடன் கூடிய ஐந்தரை ஆண்டு கால படிப்பு. +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் படித்தவர்கள் சேரமுடியும். கிரேக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இம்முறை அரேபியர்களால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

 மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் ஹிப்போக்ரேட்டஸ் என்ற கிரேக்க அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்ட இம்முறை அரிஸ்டாட்டிலால் வளர்க்கப்பட்டது. மொகலாயப் பேரரசர்கள் இந்தியாவில் இந்த மருத்துவத்தை வளர்த்தெடுத்தார்கள்.

BNYS (Bachelor of Naturopathy and Yogic Science)

ஙிழிசீஷி இயற்கை மற்றும் யோகா சார்ந்த மருத்துவப் படிப்பாகும். இதுவும் எம்.பி.பி.எஸ்சுக்கு இணையான படிப்புதான். ஒரு வருட இன்டர்ன்ஷிப்புடன் ஐந்தரை ஆண்டு காலம் படிக்க வேண்டும். +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் எடுத்துப் படித்தவர்கள் சேரலாம்.  இயற்கை விதிகள், உணவுப் பழக்கங்கள், யோகப் பயிற்சியின் அடிப்படையில் நோய்களை அணுகும் முறை இது.

இந்திய மருத்துவப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் எங்கெங்கு உள்ளன?

அரசுக் கல்லூரிகள்

* இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி என மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன.

சுயநிதி கல்லூரிகள்
நாமக்கல் ஹானிமன் ஹோமியோபதி கல்லூரி
ஆத்தூர் ஒயிட் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
கோயம்புத்தூர் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீசாய்ராம் ஹோமியோபதி, சித்த மருத்துவக் கல்லூரிகள்
கோயம்புத்தூர் சூலூர் R.V.S மெமோரியல் ஹோமியோபதி, சித்த மருத்துவக் கல்லூரிகள்
சேலம் சிவராஜ் ஹோமியோபதி, சித்த, யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி
சென்னை போரூர் வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
கன்னியாகுமரி அகிலா திருவிதாங்கூர்
சித்த வைத்திய சங்கம்
ஸ்ரீபெரும்புதூர் வேலுமயில் சித்தா மருத்துவக் கல்லூரி
ஸ்ரீபெரும்புதூர் தர்மா ஆயுர்வேதக் கல்லூரி
கன்னியாகுமரி ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரி
விழுப்புரம், பென்னாகரம் S.V.S யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி

இப்படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த கவுன்சிலிங்கை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் நடத்துகிறது. கவுன்சிலிங்குக்கான பணிகள் அதிவேகத்தில் நடந்து வருகின்றன. கவுன்சிலிங் பற்றிய விபரங்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் அஞ்சலில் அனுப்பப்படும். http://www.tnhealth.org என்ற இணையத்திலும் வெளியிடப்படும். உயிரியல், இயற்பியல் வேதியியல் அல்லது தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்களின் கட்-ஆப் ரேங்க் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரே கட் ஆப் வந்தால்
உயிரியல், தாவரவியல், விலங்கியல் மதிப்பெண் விழுக்காடு
வேதியியல் பாடத்தின் மதிப்பெண் விழுக்காடு
நான்காவது பாட மதிப்பெண் விழுக்காடு
பிறந்த தேதி
ரேண்டம் எண்
என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும்.

முதல் தலைமுறை மாணவர்களுக்கு சலுகை மற்றும் குறைந்த வருமானத்திற்கான சலுகைகள் வழங்கப்படும். 2 மணி நேரத்துக்கு முன் கவுன்சிலிங் நடக்கும் மையத்துக்குச் செல்ல வேண்டும்.

பிஎஸ்எம்எஸ் படிப்பில் சேர பத்தாம் வகுப்பை தமிழ் வழியில் படித்திருப்பது கட்டாயம். அப்படி படிக்காதவர்கள் +2வில் கட்டாயம் தமிழை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும். பியூஎம்எஸ் எடுக்க விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பை உருது மொழி வழியில் படித்திருக்க வேண்டும். அப்படி படிக்காதவர்கள் +2வில் உருது அல்லது அரபி அல்லது பாரசீக மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

கவுன்சிலிங்கில் பங்கேற்க வரும்போது Director of Indian Medicine and Homeopathy, Chennai106 என்ற பெயருக்கு டிடி எடுத்து வரவேண்டும். இந்தப்பணம் கல்விக்கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும். எஸ்.சி/எஸ்.சி.ஏ/ எஸ்.டி மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் இந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. ஆனால் அதற்கான வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தரவரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் இட நிலவரங்களை http://www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு
044-26222688, 26214718 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

- வெ.நீலகண்டன்