இலவசப் பயிற்சி... வெளிநாட்டில் வேல்யூ!



சுலபமாக செய்யலாம் சுயதொழில்

கிராமங்களை உயர்த்தும் கலக்கல் அமைப்பு

‘‘ஆர்வம் கொஞ்சம், முயற்சி கொஞ்சம், துணிச்சல் கொஞ்சம் நம் இளைஞர்களிடம் இருந்தால் போதும்... தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை நிச்சயம் பெருகி விடும்’’ என வெற்றிக்கு ரெசிபி சொல்கிறார் காயத்ரி வாசுதேவன். இந்தியாவின் பல மாநிலங்களில் கால் பதித்து இளைஞர்களுக்கு சுயதொழில் வழி காட்டிவரும் ‘லேபர்நெட்’ அமைப்பின் சி.இ.ஓ இவர்.

‘‘ ‘மாயா’ என்ற தொண்டு நிறுவனத்தின் துணை அமைப்பாக 2006ம் வருடம் பெங்களூருவில் துவங்கப்பட்டது, லேபர்நெட். தற்போது இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் சுமார் 50 பயிற்சி மையங்கள் வரை நடத்தி வருகிறோம்.

தையற்கலை, அழகுக்கலை, கட்டுமானம், பிளம்பிங், பெயின்டிங், தச்சு, உணவு பதப்படுத்துதல் உட்பட பல்வேறு துறைகளில் கல்வியறிவு இல்லாத மக்களை திறமையான தொழிலாளர்களாக தயார்படுத்துகிறது லேபர்நெட். இதற்காகவே இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து குறுகிய கால தொழிற்பயிற்சிகளை வழங்குகிறோம்.

இங்கு படித்தவர்கள் வெளிநாடு செல்வதானாலும் சரி, தனியார் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்வதானாலும் சரி, தனியாக தொழில் தொடங்க வங்கிக்கடனுக்கு முயன்றாலும் சரி... அனைத்துக்கும் நாங்கள் வழிவகை செய்கிறோம். தேசிய திறன் மேம்பாட்டுக் கழக சான்றிதழ்களை நாங்கள் வழங்குவதால், இங்கு படிக்கும் இளைஞர்களுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அங்கீகாரம் கிடைக்கிறது’’ என்கிறார் காயத்ரி பெருமிதத்தோடு!

அப்பல்லோ டயர் தொழிற்சாலையும் லேபர்நெட் தொழிற்பயிற்சி மையமும் தற்போது கிராம மக்களின் மேம்பாட்டுக்காக கரம் கோர்த்துள்ளன. இந்தக் கூட்டு முயற்சியால் தாம்பரம் அருகே உள்ள மாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்களுக்கு அழகுக்கலை மற்றும் தையற்கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தலைவர் ஜெயகுமாரிடம் பேசினோம்...

‘‘இந்த மையம் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் தொடங்கப்பட்டது. ஒரு பேட்ச்சுக்கு 20 பேர் என்ற வகையில் 5வது பேட்ச்சுக்கு இப்போது பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இங்கு பயிற்சி முடித்த 80 பேருக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு தொழிற்பயிற்சிகளை முடித்து சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஈக்வடார் என்ற மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம், அடையாளச் சான்று, முகவரிச் சான்று மட்டுமே வாங்கிக்கொண்டு வங்கிக்கடனுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இதில் 13,000 ரூபாய் வரை கடன் வாங்கிட வழி செய்கிறோம். இங்கு தற்போது தையற்கலை மற்றும் அழகுக்கலை பயிற்சி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆகவே, பெரும்பாலும் இவர்கள் தையல் மெஷின் வாங்கவும் மேக்கப் கிட் வாங்கவுமே முயற்சிப்பார்கள். லேபர்நெட் நிறுவனம் கோத்ரெஜ் நிறுவனத்துடன் டை-அப் வைத்துள்ளதால் குறைந்த விலையில் மேக்கப் கிட் வாங்குவதற்கு உதவி செய்கிறோம்.

வருங்காலங்களில் மேலும் பல தொழிற்பயிற்சிகளை இங்கு தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். முதல் முயற்சியாக தொழிற்சாலைகளில் பொருட்களைக் கையாளப் பயன்படுத்தும் ஃபோர்க் லிஃப்ட் ஆபரேட்டர் பயிற்சியை இங்கு கொடுக்க உள்ளோம். அதற்காக 50 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என மூன்று மாத காலத் திட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில், சுமார் 200 பேராவது பயனடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

கூடிய விரைவில் கார்மென்ட் புரொடக்ஷன் யூனிட் ஒன்று தொடங்கும் திட்டமும் உள்ளது. இங்கு பயிற்சி பெறுவதற்கான தகுதி, வயது 18 முதல் 35 வரை இருந்தால் போதும். கல்வி அறிவுக்கு எந்த வரையறையும் கிடையாது. அனைவருக்கும் இலவசமாகவே பயிற்சிகளை வழங்குகிறோம்’’ என்றார் அவர். இதுபோன்ற மையங்கள் மேலும் பல இடங்களில் துவங்கப்பட உள்ளதாம். அதுபற்றிப் பேசினார் லேபர்நெட்டின் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவுக்கான துணை மேலாளர் கிளமன்ட் ராஜ்குமார்.

‘‘இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட லேபர்நெட் பயிற்சி மையங்கள் மூலம் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் எங்களுக்கு 6 மையங்கள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னைக்கு அருகில் மாத்தூர் மற்றும் வல்லக்கோட்டையிலும், கோவை மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலும் பயிற்சி மையங்கள் உள்ளன.

அப்பல்லோ நிறுவனம், சமூகப் பங்களிப்பு நடவடிக்கை அடிப்படையில் எங்களுடன் டை-அப் வைத்துள்ளது. அதன் காரணமாகவே மாத்தூர் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, சுற்றியுள்ள 8 கிராம மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். சிவகாசியில் ஒரு புதிய மையமும், கோவையில் மேலும் இரண்டு பயிற்சி மையங்களும் ஆரம்பிக்க உள்ளோம்’’ என்றார் அவர் உற்சாகத்தோடு!

மேலும் விவரங்களுக்கு,
LabourNet Services India Pvt.Ltd.
Mathur Village Post, 
Angalamman Kovil Street,
Sriperumbudur Taluk,  Kanchipuram Dist.
Pin: 602105 ,  Cell: 8144868545

எம்.நாகமணி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்