விபத்தை விளக்கும் இ-கிராஷ் கார்டர்!



மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு

இ-கிராஷ் கார்டர்... ‘இது என்ன புது வெரைட்டி ஜூஸா? பேரே வித்தியாசமா இருக்கே!’ என ஒருமுறை சொல்லிப் பார்க்கும்போதே அதகளமாய் சூழ்ந்துகொள்கிறது ஒரு யுவதிப் படை. திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இவர்கள் ‘இ-கிராஷ் கார்டர்’ பற்றிப் பேசும்போது 007 ஆய்வகத்துக்குப் போன ஃபீல்.

முதலில் ஸ்ருதி... ‘‘நம்ம ஊர்ல இப்ப டிராபிக் பெருகிடுச்சு. சின்ன ஊருல கூட தினம் நாலு விபத்துகள் நடக்குது. ஆளில்லாத ரோட்டுல யார் இடிச்சதுன்னே தெரியறதில்ல. ‘அடையாளம் தெரியாத வாகனம் மோதி...’ன்னு செய்தியில பாக்கறோம். இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் நாங்க நாலு பேர் இந்த ப்ராஜெக்ட்டை கையில் எடுத்தோம்!’’ என்றவரை, உதயா தொடர்கிறார்...‘‘விமானங்கள் எப்படி விபத்துல சிக்குதுன்னு ரெக்கார்ட் பண்ண அதிலேயே பிளாக் பாக்ஸ்னு ஒரு கருவி இருக்கு.

இது நமக்கே தெரியும். அதே மாதிரி ஒரு டெக்னாலஜியை ஏன் எளிமைப்படுத்தி எல்லா வாகனத்துக்கும் கொண்டு வரக் கூடாது? இதுதான் எங்க இ-கிராஷ் கார்டர்! இதை முழுமையான டிஜிட்டல் வீடியோ-ஆடியோ ரெக்கார்டரா உருவாக்கி இருக்கோம்’’ என்று அவர் நிறுத்த, தங்கள் கண்டுபிடிப்பின் செயல்பாட்டை விளக்குகிறார் சுகன்யா.

‘‘வண்டியோட முன்பக்கம் பொருத்தப்படுற கேமரா மூலமா, எதிர்ல வர்ற வாகனங்கள், வண்டி ஓடுற பாதை எல்லாம் எப்பவுமே பதிவாகிட்டே இருக்கும். தேவைப்பட்டா நாலு பக்கமும் கேமரா பொருத்தக் கூட இதில் வசதி பண்ணியிருக்கோம். மைக்ரோபோன் மூலமா சத்தங்களும் பதிவாகும். வண்டி விபத்தில் சிக்கிட்டா எந்த வாகனம் மோதிச்சுன்னு இதன் மூலமா கண்டுபிடிச்சிடலாம். அது மட்டுமில்ல...

ஜி.பி.எஸ் இணைக்கப்பட்டிருக்கிற இந்தக் கருவி, விபத்து நடந்த இடத்தை துல்லியமா காட்டிடும். கூடவே, ட்ரிபிள் ஆக்சிஸ் ஆக்சிலோமீட்டர், ட்ரிபிள் ஆக்சிஸ் மேக்னட்டோ மீட்டர் போன்ற சென்சார்களையும் இதில் சேர்த்திருக்கோம். வாகனம் வந்த வேகம், எந்த திசையில் இருந்து வந்தது, எப்படி விபத்து நிகழ்ந்ததுன்னு எல்லாத் தகவலையும் இது சேகரிக்கும்’’ என்று அவர் முடிக்க, ரேவதி தொடர்ந்தார்...

‘‘கேமரா, மைக், சென்சார்கள் மூலமா உள்வாங்கப்படுற எல்லா தகவல்களும் ஒரு 32 ஜி.பி மெமரி கார்டுல போய் பதிவாகும். கடந்த ஒரு மாசமா அந்த வண்டி எங்கே போச்சு, என்ன ஆச்சுன்னு முழு ஜாதகத்தையும் எங்களோட இந்தக் கண்டுபிடிப்பு விலாவாரியா கொடுத்துடும். இந்த இ-கிராஷ் கார்டர் எல்லா வாகனங்களுக்கு அத்தியாவசியமாகிற ஒரு காலம் சீக்கிரமே வரும்’’ என்கிறார் ரேவதி நம்பிக்கையோடு. நல்லவை வெல்லும்!

- எம்.நாகமணி