வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?



பரம்பரைப் பணக்காரரான அந்த தொழிலதிபருக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள். திடீரென ஒரு நாள் அவர் இறந்துவிட, போட்டி போட்டு சொத்துகளைப் பிரித்துக் கொண்டார்கள் மகன் - மகள்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்துகளை தங்கள் பெயருக்கு மாற்ற நினைத்தபோதுதான் தெரிந்தது வாரிசு சான்றிதழின் அவசியம்.

ஒருவரின் சொத்துகளை அனுபவிக்க தாங்கள்தான் வாரிசுகள் என்பதை உறுதிப்படுத்த வட்டாட்சியரிடமிருந்து பெறப்படுவதுதான் வாரிசு சான்றிதழ். சொத்துகள் என்றில்லை, மின் இணைப்பு, கேஸ் இணைப்பு என குடும்பத் தலைவர் பெயரில் இருந்த பலவற்றையும் வாரிசுகள் பெயரில் மாற்ற இந்தச் சான்றிதழ் கட்டாயமாகிறது.

சிலர் போலியான சான்றிதழ் பெற்று சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகள் நடப்பதால் பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகே இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழை முறைப்படி பெறுவது எப்படி? தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் சிவராஜிடம் நாம் பெற்ற தகவல்கள் இவை...

எங்கெல்லாம் வாரிசு சான்றிதழ் தேவை?



*சொத்துரிமை பெறுவதற்கும்...
*பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும்...
*இறந்தவர் அரசு ஊழியராக இருப்பின், அவரது வாரிசுகள் பணி நியமனம், பணி பலன்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கும்...
*வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத் தொகையைப் பெறுவதற்கும்...
*அரசின் நிவாரணம் பெறுவதற்கும்...
*மின் இணைப்பு, சமையல் கேஸ், தொலைபேசி இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கும்...

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?


ஒரு வெள்ளைத்தாளில் மனு எழுதி, தேவையான ஆவணங்களை இணைத்து தாசில்தாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்குவார். பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிப்பது சிறந்த வழி. தாசில்தாரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே வாரிசு சான்றிதழ் செல்லுபடியாகும்.
விண்ணப்பம் எப்படி இருக்க வேண்டும்?

*விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம், இருப்பிட முகவரி, இறந்தவரின் பெயர் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
*இதோடு ‘இறப்புச் சான்றிதழ்’ எண்ணைக் குறிப்பிட்டு அந்தச் சான்றிதழின் அசலினையும் (ஒரிஜினல்) இத்துடன் இணைக்க வேண்டும்.
*பிறகு, இறந்தவரின் வாரிசுகள் யார் யார் என்ற விபரத்தை நிரப்ப வேண்டும். 
*அடுத்து என்ன காரணத்திற்காக சான்றிதழ் தேவைப்படுகிறது என்கிற காரணத்தை தெரிவித்து அதற்கான ஆவணத்தையும் இணைக்க வேண்டும். இதில் இறந்தவர் ஒரு மணம் புரிந்தவரா? இரு மணம் புரிந்தவரா? என்பதைக் குறிப்பிட்டு, அவர்களின்
குழந்தைகளின் விவரங்களையும் எழுத வேண்டும்.
*நிறைவாக, குடும்ப அட்டை எண் எழுதி, மனுதாரருக்கு இறந்தவர் எந்த வகையில் உறவு என்பதையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

இரண்டு மனைவிகள் இருந்தால்..?

இறந்த நபருக்கு இரண்டு மனைவிகள் இருப்பின், அந்த இரண்டு தரப்பினரின் வாரிசுகளும் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை என்றால் பிரச்னை இல்லை. ஒருவேளை ஆட்சேபணை இருந்தால், தாசில்தார் அதை முறைப்படி விசாரித்து சான்றிதழ் வழங்கலாம். ஆனால், பெரும்பாலும் அவர்களை நீதிமன்றத்தை அணுகச் சொல்லி விடுகிறார்கள்.
இதனால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் இறங்குரிமைச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

எவ்வளவு நாட்களாகும்?


வருவாய்த் துறையின் மக்கள் சாசனத்தில் இதற்கு 15 நாட்கள் வரை காலவரையறை வழங்கப்பட்டிருக்கிறது. இதில் குறைபாடு இருப்பின் அதனை வருவாய்க் கோட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கவில்லை எனில்?
வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பொது தகவல் அலுவலரிடம் ஆர்.டி.ஐ  மூலம் ஆவணம் எந்த நிலையில் இருக்கிறது? கொடுக்க மறுத்ததற்கான காரணம் என்ன? போன்ற தகவல்களைக் கேட்க முடியும். அதன் வழியாக மேல் முறையீடு செய்து சான்றிதழைப் பெறலாம்.

இறங்குரிமைச் சான்றிதழ்? 


இறங்குரிமைச் சான்றிதழ் என்றால் என்ன? - விளக்கம் தருகிறார் ஹைகோர்ட் வழக்கறிஞர் ஆர். ரவீந்திரன்...

‘‘இறந்தவரின் வாரிசுகள் கிளாஸ் 1, கிளாஸ் 2 என பிரிக்கப்படுகிறார்கள். கிளாஸ் 1 என்பது நேரடியான வாரிசுகள். அதாவது மனைவி, மகன், மகள், தாயார் உள்ளிட்டவர்கள். இவர்கள் தாசில்தாரிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் பெற முடியும்.

ஆனால், ஒருவர் மனைவியோ, குழந்தைகளோ இல்லாமல் சொத்துகளோடு இறந்துவிட்டால், அவரது வாரிசு என ஒருவர் சான்றிதழ் பெற நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். இவர்கள் கிளாஸ் 2 வகையினர்.

இவர்கள், ஹைகோர்ட் அல்லது மாவட்ட கோர்ட்டில் இறங்குரிமைச் சான்றிதழ் கேட்டு மனு செய்யலாம். அப்படி மனு செய்யும்போது இறந்த நபரின் சொத்து மதிப்பில் மூன்று சதவீத பணத்தை கோர்ட்டிற்கு கட்ட வேண்டும். பிறகு கோர்ட் பத்திரிகைகளின் வாயிலாக ‘இதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா?’ என்பதைக் கேட்கும்.

 இதில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையெனில், சான்றிதழ் வழங்கும். ஒருவேளை எதிர்ப்பு தெரிவித்தால் அவர் வாதத்தினைக் கேட்ட பிறகு சான்றிதழ் வழங்கப்படும். குறைந்தபட்சம் இந்தச் சான்றிதழ் வழங்க ஆறு மாத காலம் பிடிக்கும்’’ என்கிறார் அவர்.

 பேராச்சி கண்ணன்