அக்கறையான வழிகாட்டி!



பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு, சாகசம் செய்வதாய் நினைத்து அநியாயமாக விபத்தில் இறந்து போன கல்லூரி மாணவர்கள் நம்மூரில் ஏராளம். இதற்கு முடிவு கட்டும் கருவியைக் கண்டுபிடித்துள்ள மாணவர் முத்துராஜுக்கு பாராட்டுக்கள். இதைப் பொருத்த  பெங்களூரு போக்குவரத்துக் கழகம் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. நம்ம ஊர் பேருந்துகளிலும் இதைப் பொருத்தலாமே! - டி.கே.ஆனந்தன், கடலூர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வாயிலாக வீட்டிலிருந்தே பால் பண்ணை நடத்த கற்றுத் தரும் படிப்பை முடிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டேன். இந்தக் கல்வி வருங்காலத்தில் கிராமந்தோறும் பால் பண்ணை அதிபர்களை உருவாக்கும் என்பது நம்பிக்கை செய்தி.
- வி.ரோஸ்லின் ஜெபராஜ், புதுச்சேரி.

ஜிணிஜி ஆசிரியர் தகுதித் தேர்வு, ஸ்டேட் வங்கி கிளார்க் தேர்வுகளின் மாதிரி வினா-விடைகள் கொடுத்து அமர்க்களப்படுத்திவிட்டீர்கள். படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ‘கல்வி வேலை வழிகாட்டி’  உண்மையில் அக்கறை மிகுந்த வழிகாட்டிதான். 
- சு.சகுந்தலா, சேலம்.

சாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி? அந்தச் சான்றிதழின் அவசியம் என்ன? அதன் மூலம் என்னென்ன பயன்களைப் பெற முடியும் என்பதை எல்லாம் தெளிவாக விளக்கியது ‘கல்வி வேலை வழிகாட்டி’ பயனுள்ள கட்டுரை, பாராட்டுகள்.
- ஜெ.பால்பாண்டி, மதுரை.

ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட 14,000 இடங்களில் சுமார் 10,000 இடங்களை சீண்ட ஆளில்லை என்ற செய்தி அதிர்ச்சி தந்தது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள்தான் பாடம் நடத்த முடியும் என்கிற புது சட்டத்தால் ஏற்பட்ட அவலம் இது என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமல்ல!
- இரா.கணபதிராவ், தஞ்சாவூர்.

சென்னையில் முதல் பெண்கள் கல்லூரி, விளையாட்டுக்கே என ஒரு பல்கலைக் கழகம் என அசத்தலான தகவல்கள் தந்திருக்கும் ‘கல்வி வேலை வழிகாட்டி’க்கு வாழ்த்துக்களோடு ஒரு பூங்கொத்து!
- அனன்யா, கடலூர்

திருச்சியில் இருக்கும் மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில்நுட்பவியல் கல்லூரியின் முதல்வர் சிங்காரவேல வன் சொல்வது போல் கேட்டரிங் படிப்பு, மனிதர்கள் வாழும்  அத்தனை இடங்களிலும் வேலைவாய்ப்பைத் தரும் என்பது உண்மைதான்.
- ஆர்.சூசையப்பன், வேலூர்.