நோபல் இந்தியர்!



அரிதாக இந்தியர்களுக்குக் கிடைக்கும் நோபல் பரிசை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெற்றிருக்கிறார் கைலாஷ் சத்யார்த்தி. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கும், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய சிறுமி மலாலாவுக்கும் இணைந்து வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் வழங்கப்படும் வரை இந்தியர்களுக்கே சத்யார்த்தியின் பெயர் தெரியாது. சாதனையாளர்களை அரிதாகத்தான் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.

நோபல் வென்ற இந்தியர்களின் பட்டியல் மிகச் சிறியது. 1913ம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர், சர். சி.வி.ராமன் (1930), அன்னை தெரசா (1979), அமர்த்யா சென் (1998) ஆகிய நான்கு இந்தியர்களுக்குப் பிறகு இந்தப் பரிசை வெல்லும் ஐந்தாவது இந்தியர் சத்யார்த்தி. (அன்னை தெரசா அல்பேனிய நாட்டில் பிறந்தாலும், இந்தியக் குடிமகள் ஆகிவிட்டார்.

 இந்தியாவில் பிறந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பிறகு நோபல் வென்றவர்கள் ஹர் கோபிந்த் கொரானா, சுப்ரமணியம் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன் ஆகியோர். இந்தியரான சுரேஷ் பச்சௌரி தலைவராக இருந்தபோது சூழல் மாற்றம் தொடர்பான ஐ.நா. குழு நோபல் பரிசு பெற்றது.)

60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா நகரில் பிறந்தவர். குழந்தைத் தொழிலாளர் அவலத்தைத் தடுப்பதற்காக தனது 26 வயதிலிருந்து போராடி வருகிறார். அவர் உருவாக்கிய ‘பச்பன் பச்சாவோ அந்தோலன்’ (குழந்தைத்தன்மையைக் காக்கும் இயக்கம்) இதுவரை 80 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

செங்கல் சூளை, கட்டுமானத் தொழில், வளையல் தொழில், பட்டாசுத் தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் என பல இடங்களில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகளை மீட்டு, அவர்களின் கல்விக்கு உத்தரவாதம் அளித்துள்ளார் சத்யார்த்தி. அடிப்படையில் எஞ்சினியரான இவர், குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை பிராக்டிகலாக அணுகி இதை சாதித்திருக்கிறார்.

 ‘குடும்ப வறுமையே குழந்தைகளை இளம் வயதில் உழைக்க வைக்கிறது’ என்பதைப் புரிந்துகொண்ட இவர், குழந்தைத் தொழிலாளர்களை மீட்ட பிறகு, அவர்களின் பெற்றோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபடுவார். இதுவே அந்தக் குழந்தையை மீண்டும் உழைக்க அனுப்பாமல் தடுக்கச் செய்தது.

மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்த கல்வி உரிமைச் சட்டத்துக்காக போராடிய பலரில் முதன்மையானவர் சத்யார்த்தி. ஏற்கனவே அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி என பல நாடுகளின் மனித உரிமை விருதுகளைப் பெற்றிருக்கும் சத்யார்த்தி, பல ஆண்டுகளாகவே நோபல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.

இந்த ஆண்டு இந்தப் பரிசுக்கு 278 பேருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவர்களிலிருந்து ஒரு இந்தியரையும், ஒரு பாகிஸ்தானியரையும் இணைந்து தேர்ந்தெடுத்து நியாயம் செய்திருக்கிறது நோபல் குழு.

சத்யார்த்தியோடு இணைந்து பரிசு பெறும் மலாலா யூசுப்சாய்க்கு 17 வயது. மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற சாதனையைப் புரிந்திருக்கும் மலாலா, நோபல் பரிசு பெறும் 47வது பெண். நோபல் வெல்லும் இரண்டாவது பாகிஸ்தானியர் என்ற பெருமையையும் பெறுகிறார். 1979ம் ஆண்டில் நோபல் வென்ற முதல் பாகிஸ்தானியர் அப்துஸ் சலாம்.

 இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சலாம், பாகிஸ்தானில் அறிவியல் வளர்ச்சிக்கு மகத்தான பங்களித்தவர். ஆனால் சர்ச்சைக்குரிய சட்டங்களை எதிர்த்து அந்த நாட்டிலிருந்து வெளியேறினார். இப்போது மலாலாவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து பாகிஸ்தானை விட்டு வெளியேறி இருக்கிறார்.

லோகேஷ்