புதிய நாடுகளைத் தேடியவர்கள்!



ஒரு சுவாரசியத் தொகுப்பு


கிறிஸ்டோபர் கொலம்பஸ் போர்ச்சு கீசியக் கப்பல் வணிக மாலுமி. இவர் 1492ல் சான்டா மரியா, நீனா மற்றும் பிட்டா என்ற மூன்று கப்பல்களில் 120 பேரோடு சீனாவுக்குப் பயணித்து அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கேப்டன் குக் என்ற பிரிட்டிஷ் மாலுமி எண்டெவர் (Endeavour) என்ற கப்பலில் 176871 ஆண்டுகளில் மேற்கொண்ட கடல் பயணத்தில் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தார். 1776ல் Resolution மற்றும் Discovery என்ற கப்பல்களில் இவர் பயணித்தார்.

1776  1779களில் இவர் மேற்கொண்ட மூன்றாவது கடற் பயணத்தின்போது ஹவாயில் பாலினேஷிய பழங்குடிகளால் கொல்லப்பட்டார். ஹவாயைக் கண்டுபிடித்து அதற்கு   Sandwich Island   என்ற பெயரைச் சூட்டியது இவர்தான்.

பிரான்சிஸ் டிரேக் என்பவர், ராணி எலிஸபெத் காலத்தில் வாழ்ந்த மிகப் பிரசித்தி பெற்ற கடலோடி. இவர் 1577ல் பயணத்தைத் தொடங்கி மெகல்லன் ஜலசந்தி வழியே பசிபிக் கடலை அடைந்து, தொடர்ந்து வட அமெரிக்காவின் தெற்குக் கரையைச் சென்றடைந்தார்.

பின்பு தெற்கு நோக்கித் திரும்பி தற்போதைய சான்பிரான்சிஸ்கோ நகரத்தைச் சென்றடைந்தார். மேற்கிந்தியத் தீவுகள் பயணத்தின்போது காய்ச்சல் கண்டு இறந்த இவரது உடலைக் கடலில் இட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

போர்ச்சுகல் நாட்டவரான பார்த்தலோமி டீயஷ் புதுக் கடல்வழி காண்பவராக விளங்கியவர். 1487ல் ஆப்ரிக்காவின் தென் எல்லையை கண்டறிய பயணித்த இவர், 1488ல் நன்னம்பிக்கை நில முனையைச் சுற்றி வந்தார்.

இதன்மூலம் அம்முனையை சுற்றி வந்த முதல் ஐரோப்பியர் என்ற சிறப்பைப் பெற்றார். பிரேசில் நாட்டை முதன்முதலில் கண்டறிதலில் பங்கு பெற்றார். நன்னம்பிக்கை முனையை அடைந்தபோது இவர் கடலில் மூழ்கிப் போனார்.

வாஸ்கோடகாமா போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கடல் பயணி. இந்தியாவுக்கான தன் முதல் பயணத்தை லிஸ்பனிலிருந்து 1497ல் துவக்கி 1498ல் தென்னிந்தியா வந்தார். கடல் வழியே இந்தியாவுக்கு வந்த முதல் பயணி இவர். இவர் 1524ல் கொச்சியில் மரணமடைந்தார்.

மேற்கு ஆப்ரிக்காவில் மிக உயர்ந்த சிகரம் கேமரூன் ஆகும் (13,353 அடி). இதில் முதன் முதலில் ஏறியவர் மேரி கிங்ஸ்லி என்ற பெண்மணி ஆவார். முதல் பெண் பயணியான இவர் கெபோன் (மத்திய ஆப்ரிக்கா) நாட்டைக் கண்டுபிடித்தார். ஐரோப்பியரான இவர், ஆப்ரிக்கர்களை மதித்தார்.

ரிச்சர்ட் லேமன் லேண்டர் என்ற ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர் நைஜர் (ஆப்ரிக்கா) ஆற்றின் போக்கை ஆராய்ந்தவர். நைஜர் ஆறு கினியில் உற்பத்தியாகி கினி வளைகுடாவினுள்ளும் பாய்கிறது என்பதைக் கண்டுபிடித்தவர் இவர்தான்.

பெர்டினாண்ட் மெகல்லன் என்ற போர்ச்சுகீசிய மாலுமி தென் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தபோது மெகல்லன் ஜலசந்தி என்று பின்னர் அறியப்பட்ட ஜலசந்தியைக் கண்டுபிடித்தவர். பசிபிக் கடலை ‘அமைதியான’ (பசிபிக்) என்று அழைத்தவர் இவர்தான். பூர்வ குடியினரால் பிலிப்பைன்ஸில் இவர் கொல்லப்பட்டார்.

ராபர்ட் பியரி அமெரிக்க ஆய்வுப் பயணி. நாய்கள் இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டிகளில் பயணித்து, கிரீன்லாந்தை 1886 மற்றும் 1891ம் ஆண்டுகளில் ஆராய்ந்து, அது ஒரு தீவு என்று கண்டறிந்தார். இவர் வட துருவத்துக்கு 30லிருந்து 60 மைல்கள் வரை அருகில் சென்றவர்.

ஏபெல் டாஸ்மான் என்ற டச்சுக்காரர் கடலில் பயணித்து 1642ல் டாஸ்மேனியா, டோங்கா மற்றும் பிஜித் தீவுகளைக் கண்டறிந்தார்.

ஜேம்ஸ் கிளரிக் ரோஸ் என்ற ஆங்கிலேயர் 1841ல் Terror மற்றும் Erebus என்ற கப்பல்களில் அன்டார்க்டிகாவிற்கு பயணமானார். இவர் அன்டார்க்டிகாவை அடையாவிட்டாலும் இவர் பயணம் செய்த கடல் பகுதி ரோஸ் சீ (Rose Sea) என அழைக்கப்படுகிறது. இவரது பயணம் பிற்கால கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவியது.

அலெக்ஸாண்டர் மெக்கன்ஸி ஸ்காட்லாந்தில் பிறந்த கனடா நாட்டவர். இவர் 1793ல் சைப்வையக் கோட்டையிலிருந்து ராக்கி மலைத் தொடர்கள் வழியாக பசிபிக் கடற்கரைக்குப் பயணம் செய்தார். இதன் மூலம் மெக்ஸிகோவுக்கு வடக்கே கண்டங்களினூடான பயணத்தை மேற்கொண்ட முதல் ஐரோப்பியரானார்.

ஜான் கேபாட் என்ற இத்தாலிய மாலுமி 1497ல் தற்போது கனடாவில் உள்ள நோவா ஸ்கோஷியா, நியூஃபவுண்டு லேண்ட் ஆகிய பகுதிகளைக் கண்டுபிடித்தார்.

ஆங்கிலேய மாலுமி மார்டின் பரோபிஷர் கனடாவின் வடகிழக்குப் பகுதியை முதலில் கண்டுபிடித்தவர் ஆவார். பசிபிக் பெருங்கடலில் வடமேற்கு வழியைக் கண்டுபிடிப்பதற்காக கடல் பயணம் மேற்கொண்ட இவர், 1576ல் அட்லாண்டிக்கைக் கடந்தார். லேப்ரடார் (கனடா) மற்றும் பாபின் தீவுகளை அடைந்தபிறகு பரோபிஷர் விரிகுடாவைக் கண்டுபிடித்தார்.

பெட்ரோ அல்வாரெஸ் கேப்ரால் போர்ச்சுகீசிய கடல்வழி ஆய்வாளர். 1500ல்13 கப்பல்களுடன் இந்தியாவுக்குப் பயணமான இவர், தற்போதைய பிரேசிலின் கடற்கரையில் இறங்கி, அந்நாட்டை அதிகாரபூர்வமாக போர்ச்சுகலுடன் இணைத்துக் கொண்டார்.

க.ரவீந்திரன், ஈரோடு.