கருப்பை மாற்று அறுவை சிகிச்சை!



அசர வைக்கும் ஓர் உலக சாதனை

சிறுநீரக மாற்று சிகிச்சை, இதய மாற்று சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கருப்பை மாற்று சிகிச்சையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகிலேயே முதன்முறையாக ஒரு பெண்ணுக்குக் கருப்பை மாற்று சிகிச்சை செய்து, குழந்தை பிறக்க வைத்து மிகப் பெரிய சாதனை புரிந்திருக்கிறார்கள் ஸ்வீடன் நாட்டு மருத்துவர்கள்.இந்த அதிசயத்தை நீங்கள் தெரிந்து ஆச்சரியப்படுவதற்குள், குழந்தைப்பேறு எனும் பிரமிக்க வைக்கும் அதிசயத்தையும் கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.

பெண்ணுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு உதவுகின்ற உறுப்புகள் வரிசையில் முதலில் வருவது பெண் பிறப்புறுப்பு. பாலுறவின் உச்சகட்டத்தில் ஆண் வெளியேற்றும் உயிரணுவைப் பெற்றுக் கொள்வதுதான் இதன் முக்கிய வேலை. அடுத்து வருபவை கருப்பை, கருக்குழாய், சினைப்பை, சினைமுட்டை, இவை எல்லாவற்றையும் தாங்கி நிற்கின்ற இடுப்பு எலும்பு.

இவற்றில் கருப்பை (Uterus) என்பது பார்ப்பதற்கு கருஞ்சிவப்பு நிறமான ஒரு பேரிக்காயைப் போல மேற்புறம் பருத்தும், கீழ்ப்புறம் சிறுத்தும் இருக்கிற ஒரு தசை வீடு. பாதாம் பருப்பு அளவில் கருப்பையின் இரண்டு பக்கத்திலும் இருப்பவை ‘ஓவரி’ எனும் சினைப்பைகள். ‘ஓவம்’ எனும் சினை முட்டையை இடது பக்கத்திலிருந்து ஒரு மாதம்; வலது பக்கத்திலிருந்து மறு மாதம் என்று கணக்குத் தவறாமல் உருவாக்கித் தருவது இவற்றின் வேலை.

கருப்பையின் கைகளைப் போல வலதும் இடதுமாக இருக்கின்ற குழாய்களுக்குக் கருக்குழாய் என்று பெயர். நோட்டுப் புத்தகம் தைக்கப் பயன்படும் நூல் பருமனில் இருக்கின்ற      இந்தக்குழாய்கள் கருப்பையையும் சினைப்பைகளையும் இணைக்கின்றன. இந்தக் குழாயின் உள்ளேதான் பெண்ணின் சினை    முட்டையோடு ஆணின் உயிரணு சேர்ந்து ‘கருத்தரித்தல்’ என்கிற   அற்புதம் நடக்கிறது.

மாதவிலக்கு ஆனதிலிருந்து 14 அல்லது 15வது நாள் பெண்ணின் வலது அல்லது இடது பக்கச் சினைப்பையிலிருந்து ஒரு சினைமுட்டை வெளிவருகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக கருக்
குழாய்க்குள் நகர்ந்து கருப்பையை நோக்கிப் பயணிக்கிறது. இது ஒரே ஒரு நாள்தான் உயிருடன் இருக்கும். அதற்குள் உறவு நிகழ்ந்து, பெண்ணின் பிறப்புறுப்புக்கு ஆணின் உயிரணு வந்து, கருப்பைக்குள் நுழைந்து, கருக்குழாய்க்கு வந்து சேர்ந்தால்தான் சினைமுட்டையுடன் கலந்து கருவாக உருமாற முடியும்.

இப்படி உருவெடுத்த கருவானது முதலில் ஒரேயொரு ‘செல்’லாகத்தான் இருக்கும். பிறகு இது இரண்டாகி, நான்காகி, பல மடங்கு செல்களாக வளர்ந்து மெதுவாக நகர்ந்து ஒரு வாரத்தில் கருப்பையை அடைகிறது. அங்கு மெத்தை போன்று இருக்கின்ற எண்டோமெட்ரியத்தில் குடியேறுகிறது.

அப்போது அதில் குழந்தைக்கு உணவு கொடுக்க பனிக்குடம் உருவாகிறது. கருவானது இந்த உணவைச் சாப்பிட்டு குழந்தையாக வளர வளர, எண்டோமெட்ரியத்தின் பின்னால் இருக்கும் மயோமெட்ரிய தசைகள் விரிந்து கொடுக்கின்றன. மொத்தம் ஒன்பது மாதம் ஒரு வாரம் முடிந்ததும், அதாவது குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததும் பிரசவ வலி ஏற்படுகிறது. பனிக்குடம் உடைகிறது. கருப்பை வாய் திறக்கிறது. பிரசவம் ஆகிறது. இப்படித்தான் ஒரு பெண்ணானவள் ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள்.

இந்தத் தாய்மைக்குத் தேவை ஒரு கருப்பை. பிறப்பது இயற்கை குழந்தையாக இருந்தாலும் சரி, சோதனைக்குழாய் குழந்தையாக இருந்தாலும் சரி, வாடகைத் தாய் குழந்தையாக இருந்தாலும் சரி, குழந்தை வளர்வதற்கு கருப்பை கட்டாயம் தேவை.

 அப்படியென்றால், கருப்பையே இல்லாத அல்லது கருப்பை கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எப்படிக் குழந்தை பிறக்க வைப்பது? இதைத்தான் ஸ்வீடன் நாட்டு மருத்துவர்கள் யோசித்தார்கள். நல்ல வழியும் கண்டுபிடித்துச் சாதனை புரிந்திருக்கிறார்கள்.

எப்படி?


மார்ட்டினா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் 36 வயதுப் பெண். ‘ரொகிடான்ஸ்கி’ (Rokitansky) எனும் மரபணுக் கோளாறால் பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்தார். என்றாலும், அவருக்குச் சினைப்பைகளும் சினைமுட்டைகளும் இருந்தன. அவை கருவாக உருவாவதற்குத் தோதாக கருக்குழாயும் கருப்பையும்தான் இல்லை. ஆனால், அவரோ தான் ஒரு தாயாகவேண்டும் என்று கனவு கண்டார்.

அதுமட்டுமல்ல, தன் குழந்தை தன் வயிற்றில்தான் வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு ஒரே வழி கருப்பை மாற்று சிகிச்சை மட்டுமே என்றனர் மருத்துவர்கள். அதற்கும் அவர் சம்மதித்தார். மார்ட்டினாவின் அதிர்ஷ்டம், அவரின் குடும்ப நண்பரான 61 வயதான பெண்மணி ஒருவர் தன்னுடைய கருப்பையை தானமாகத் தருவதற்கு முன்வந்தார்.

கருப்பை மாற்று சிகிச்சையை மார்ட்டினாவுக்கு வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். அதற்கு முன்னால் அவருடைய சினைமுட்டைகளை எடுத்து கணவரின் உயிரணுவோடு சேர்த்து, சோதனைக் குழாயில் வளர்த்தனர்.

இப்படி மொத்தம் 13 சினைமுட்டைகளைக் கருவாக்கினர். வளர்ந்த கருவை ஆய்வகத்தில் ‘கிரையோபிரிசர்வேஷன்’ முறையில் பாதுகாத்தனர். மார்ட்டினாவுக்குக் கருப்பை மாற்று சிகிச்சை முடிந்த ஒரு வருடத்துக்குப் பிறகு, பாதுகாத்து வைத்த கருமுட்டைகளில் ஒன்றை எடுத்து அவரது கருப்பையில் வைத்தனர். அதன்பிறகு 3 வாரம் கழித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கருப்பையில் கரு வளர்ந்திருப்பது நிரூபணமானது. 

இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து வலிப்பு வந்த காரணத்தால், சுகப்பிரசவத்துக்கு வழி இல்லாமல், சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 1.8 கிலோ எடை இருந்தது. தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். குழந்தைக்கு வின்சென்ட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உலகில் முதன்முதலாக கருப்பை மாற்று சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்குப் பிறந்த குழந்தை இதுதான்.

இதுகுறித்து ஸ்வீடனில் உள்ள கோதன்பெர்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பேராசிரியரும், இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டவருமான மேட்ஸ் ப்ரயென்ஸ்டாம், ‘‘சுமார் 10 வருடங்களாக விலங்குகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறுவை சிகிச்சையைச் செய்தோம். இதன் மூலம் உலகம் முழுவதிலும் கருப்பைப் பிரச்னையால் கருத்தரிக்க வாய்ப்பில்லாத பெண்கள் பலருக்கு ஒரு புதிய தீர்வு கிடைத்துள்ளது’’ என்றார் சந்தோஷமாக!    
                                                                 
(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்