மருத்துவ ஞானி சரகர்



மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு வித்திட்ட இந்திய மாமேதை சரகர். ‘தாயின் சினை முட்டையும் தந்தையின் உயிரணுவுமே குழந்தை பிறப்புக்குக் காரணம்’ என்பதை முதலில் அறிவித்தவரும் இவர்தான்.  கி.மு. 5ம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த இவர், ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தார்.

நோய் வந்த பின் சிகிச்சை தருவதைவிட வரும்முன் காப்பதே சிறந்த ஆரோக்கியம் என்றும் கூறியுள்ளார். ஒரு நோயாளிக்கு மருத்துவம் செய்வதற்கு முன்பு, அவரது சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் நோயாளிக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்ய முடியும் என்பது இவரது கருத்து.

மனித உடலின் அமைப்பு, உடல் உறுப்புகள் பற்றி ஆராய்ந்து அந்தக் காலகட்டத்திலேயே உடலில் உள்ள எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கண்டறிந்தார். மனித உடலில் இதயத்தின் செயல்பாடுகள் மற்றும் 13 ரத்தக் குழாய்கள் உதவியுடன் உடல் முழுவதும் தொடர்பு கொண்டுள்ளது என்றும், எண்ணற்ற ரத்த இணைக் குழாய்கள் உடலில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்த ரத்தக் குழாய்கள் உடலின் வெவ்வேறு உறுப்புகளுக்கும் பகுதிகளுக்கும் சத்துப் பொருட்களைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன என்பதும் அவரது கருத்தாகும்.

மற்றொரு மருத்துவ மேதையான ஆத்ரேயர் என்பவரது மேற்பார்வையில், அக்னிவேசன் என்ற மருத்துவ நிபுணர் ‘மருத்துவக் கலைக் களஞ்சியம்’ என்ற மகத்தான நூலை எழுதியிருந்தார். சரகர் அந்த நூலை ஒரு வரி விடாமல் படித்து ஆராய்ந்து அங்கீகாரம் அளித்த பிறகே அந்நூல் புகழ்பெற்றது. மற்றவர்களால் பயன்படுத்தப்பட்ட அந்நூல்   இப்போது ‘சரக சம்ஹிதை’ (Charakasamhita) என்ற பெயரில் அறியப்படுகிறது.

இந்த நூலில் இதயம், சுவாசம், ரத்தக்கொதிப்பு, பற்கள் போன்றவற்றில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை முறை, நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு, உறக்கம், ஓய்வு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவை உள்ளன. இவரது சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது.

இந்த 120 அத்தியாயங்களில் 120 வயது வரை எப்படி வாழலாம் என்பதைப் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சுமார் 2000 ஆண்டுகளாக இந்த நூலே மருத்துவத்துறையின் அடிப்படை நூலாக இருக்கின்றது. இந்த நூல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பாரம்பரியப் பண்புகள் குறித்தும் சரகர் சில நிர்ணயங்களை உருவாக்கியிருந்தார். ஒரு குழந்தை கருவறைக்குள் ஆண் அல்லது பெண்ணாக வடிவம் பெறுவது குறித்தும் வரையறைகள் செய்திருந்தார்.

கருவிலிருக்கும் குழந்தையின் ஊனமுறும் தன்மைக்கு குறிப்பிட்ட தந்தையின் உயிரணுக்களோ... அல்லது தாயின் சினைமுட்டைகளோதான் காரணம் என்று தமது நூலில் விவரிக்கிறார் சரகர். இந்திய மொழிகளில் வெளிவந்த மருத்துவ நூல்கள் அனைத்தும் சரகரை சிறப்பித்தே கூறுகின்றன.

சி.பரத்