தூவானம்




நகைச்சுவை நாயகன்


பிரபல அமெரிக்க நகைச்சுவை நடிகர், பாப் ஹோப். இவருடைய ஐந்து லட்சம் நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்து ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகத்தில் வைத்திருக்கிறார்கள். இந்த நகைச்சுவைத் துணுக்குகளை யாரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற சலுகை இருந்தாலும், பெரும்பாலானவை அவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்படாமல் இருக்கின்றன. பாப் ஹோப் 2003ம் ஆண்டு ஜூலை மாதம் காலமானார்.

சிகிச்சைக்குப் பிறகு இரை


சிறு பிராணிகளை சாப்பாடாக உலகுக்கே அறிமுகப்படுத்திய சீனர்கள்தான், முதன் முதலில் விலங்குகளுக்கான சிகிச்சை முறைகளையும் அறிமுகப்படுத்தியவர்கள்.

முயற்சியின் கால அளவு

மிகப் பிரபலமாகி தனக்குக் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த கார்ட்டூன் படங்களைத் தயாரிக்க வால்ட் டிஸ்னி 13 ஆண்டுகள் முயற்சிக்க வேண்டியிருந்தது. ஸ்டோரேஜ் பேட்டரியைக் கண்டுபிடிக்க தாமஸ் ஆல்வா எடிசன் எடுத்துக்கொண்டது 9 ஆண்டுகள்.

 மனசுக்குள்ளேயே ஊறப் போட்ட காலம் நீங்கலாக, ராமாயணம் எழுத கம்பர் 5 ஆண்டுகள் செலவிட்டார். டாக்டர் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், 8 ஆண்டுகள் முயற்சிக்குப் பின் கண்டுபிடித்ததுதான் பென்சிலின். நீராவி எஞ்சின், ஜேம்ஸ் வாட்டின் 15 ஆண்டு கால முயற்சியின் பலன்.

வாரம் பிறந்த கதை

பாபிலோனியர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளையும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கும், மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும் செலவிட்டனர். இந்த நாளில் அவர்கள் வேறு எந்த வேலையையும் பார்ப்பதில்லை. இந்த வழக்கத்தைப் பின்னாளில் யூதர்களும் பின்பற்றினர்.

இப்படித்தான் ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரம் பிறந்தது. ஏழாவது நாள் ஞாயிற்றுக்கிழமையாகவோ, அல்லது வேறு கிழமையாகவோ இருக்கலாம். ஆனால் ஏழாவது நாள் அவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கான நாள்.

ஒன்றிற்கே இரண்டு

மேரி க்யூரி, லினஸ் பாலிங் இருவரும் இருமுறை நோபல் பரிசு பெற்று சாதனை படைத்தவர்கள். இதேபோல இருமுறை விருது பெற்ற ஆனால் இவர்களைவிட சிறப்பாகப் பேசப்படுபவர், ஜான் பார்டீன். ஆமாம், மேரி க்யூரி - இயற்பியல், வேதியியல்; லினஸ் பாலிங் - வேதியியல், அமைதி என்று இருவேறு துறைகளுக்கு பரிசு பெற்றிருக்க, ஜான் பார்டீனோ ஒரே இயற்பியல் துறையைச் சேர்ந்த டிரான்சிஸ்டர் மற்றும் சூப்பர் கண்டக்டிவிடி இரண்டையும் கண்டுபிடித்ததற்காக இருமுறை விருது வென்றிருக்கிறார்.

ராக்கெட் முன்னோடிகள்

விழாக்காலங்களில் பயன்படுத்தும் பட்டாசுகளைக் கண்டுபிடித்த சீனர்கள்தான் போர்த் தாக்குதலுக்கான ராக்கெட்டையும் முதலில் கண்டுபிடித்தவர்கள். 13ம் நூற்றாண்டில் இவ்வாறு கண்டுபிடித்த அவர்கள், பின்னாளில் தங்களுக்கும் மங்கோலி யருக்கும் நடைபெற்ற போரில் அந்த யுத்த ராக்கெட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பார்வையின் கூர்மை

மனிதனின் பார்வை மிகக் கூர்மையானது; தொலை நோக்குடையது. ஓர் அமாவாசை நாள் இரவில், ஒரு மலை உச்சியில் நின்றுகொண்டால், நம்மால் நூறு கிலோமீட்டர் தொலைவில் எரியும் தீக்குச்சியையும் பார்க்க முடியும்; அடையாளம் சொல்ல முடியும்.

- வித்யுத்