ஆய்வையே வாழ்வாக்கிக் கொண்ட காமர்லிங்க்தாழ்ந்த வெப்பநிலையில் உள்ள பொருட்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காகவும் அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழி அமைத்ததற்காகவும் நோபல் வென்றவர் ஹெய்க் காமர்லிங்க் ஆன்ஸ். 1853ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி நெதர்லாந்தில் குரோனிஜென் என்ற ஊரில் காமர்லிங் பிறந்தார்.

படிப்பில் சுட்டியான இவர், கிரேக்கம், லத்தீன் மொழிப்பாடங்களை தனியே பயின்று வந்தார். குரோனிஜென் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ஆவி அடர்த்தி பற்றி எழுதி முதல் பரிசை வென்றார். 1878ல் முதுகலைப் பட்டமும் 1879ல் முனைவர் பட்டமும் பெற்றார். பின் லெய்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் இயற்பியல் துறையில் பேராசிரியராகவும் அங்குள்ள ஆய்வுச் சாலையின் இயக்கு நராகவும் பணியமர்த்தப்பட்டார். அங்கு தாழ்ந்த வெப்பநிலைகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். 42 வருடங்கள் இதே லெய்டன் ஆய்வுச்சாலையில் அவருடைய வாழ்க்கை கழிந்தது.

காமர்லிங்கிற்கு முன்பு வாயுக்களைத் தாழ்ந்த வெப்பநிலையில் திரவமாக்குவது நடைமுறைப்படுத்தப்படவில்லை. காமர்லிங்க் இந்த ஆய்வினை மேற்கொண்டபோது பொருளின் அணுத்தன்மையின் முழு ஆய்வுச் சான்றை அறிய விரும்பினார். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் முதலிய வாயுக்களை மிகத் தாழ்ந்த வெப்பநிலைக்கு உட்படுத்தும் ஆய்வை மேற்கொண்டார். ‘ஒரு திரவம் ஆவியாகும்போது அங்கு ஒரு குளிர்ச்சி விளைவு ஏற்படுகிறது’ என்பதை ஸ்வீடன் நாட்டு அறிவியல் அறிஞர் ஆர்.பி.ஃபிட் என்பவர் கண்டறிந்தார்.

அதே வருடத்தில் பிரெஞ்சு இயற்பியலாளர் எல்.பி.கெயிட்லெட் என்பவர், அதிக அழுத்தத்திற்கு ஆக்ஸிஜனை உட்படுத்தியபோது அங்கு தாழ்ந்த வெப்பநிலை உருவானதைக் கண்டறிந்தார். ஜே.பி.ஜூல்ஸ் மற்றும் வில்லியம் தாம்சன், ஒரு வாயுவை அதிக அழுத்தத்தில் மிகச் சிறிய திறப்பின் வழியே வாயுவின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட அளவு செலுத்தும்போது அதனுடைய வெப்பநிலை குறைவதைக் கண்டறிந்தனர். 1895ல் மூனிச்சில் கார்ல் லிண்டே என்பவர் ஜூல்-தாம்சன் விளைவின் அடிப்படையில் வாயுவைத் திரவமாக்கும் கருவியை உருவாக்கினார்.

இந்த இருவரின் முறைகளை ஒருங்கிணைத்து காமர்லிங்க் ஒரு புதிய முறையைக் கண்டறிந்தார். இதன்படி ஆக்ஸிஜனை திரவ மாக்கும் முயற்சியில் வெற்றி   கண்டார். ஒரு மணி நேரத்தில் 14 லிட்டர் அளவு ஆக்ஸிஜனை   திரவமாக்கினார் கார்மலிங்க். 1904ல் தாழ்ந்த வெப்பநிலை உருவாக்கத்திற்கான மிகப்பெரிய ஆய்வுக் கூடத்தை நிறுவினார்.

1908ல் ஹாம்ப்சன்-லிண்டே சுழற்சி முறைப்படி ஜூல்-தாம்சன் விளைவைப் பயன்படுத்தி வெப்ப நிலையை 1 டிகிரிக்கும் குறைவாக்கும் கருவியை வடிவமைத்தார். இந்த ஆய்வுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1926ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தனது 72வது வயதில் காமர்லிங் மறைந்தார். அவரை கௌர விக்கும் விதமாக சந்திரனில் உள்ள ஒரு குழிப் பகுதிக்கு அவர் பெயர் சூட்டியது அறிவியல் உலகம்.

 சி.பரத்