உலகின் உயரமான பாலம்!



இது காஷ்மீர் அதிசயம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சீனாப் ஆற்றின் மீது உலகிலேயே உயரமான ரயில் பாலம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பெருமிதமான அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இருக்கப் போகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் சீனாப் ரயில் பாலம் ஜம்மு - உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுலா பாதையில் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2002ல் துவங்கின. பாதுகாப்பு காரணங்களுக்காக இதன் கட்டுமானப் பணி 2008ல் நிறுத்தப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பணிகள் துவங்கின. ரிணீtக்ஷீணீ  ஙிணீஸீவீலீணீறீ பகுதியில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் போடப்படும் ரயில் பாதையில் சீனாப் ரயில் பாலத்தின் கட்டுமான மதிப்பீடு ரூ.512 கோடியாகும். இதன் கட்டுமானப் பணிகளை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் மேற்கொண்டுள்ளது.

இந்த பாலத்திற்கு அஸ்திவாரம் போட 5 கி.மீ. தொலைவிற்கு மலைச் சரிவில் சாலை அமைத்தார்கள். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை உருவாக்க ஒரு தொழிற்சாலை அமைத்துள்ளார்கள். கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன் இது ரயில் நிலையமாக மாற்றப்படும்.

பல ஆண்டுகளாக சாலை இல்லாமல் அவதிப்பட்ட மலை வாழ் பழங்குடியினர் வசிக்கும் கவுரி போன்ற குக்கிராமங்கள் இந்த பால கட்டுமானப் பணிகள் காரணமாக சாலை இணைப்பை பெற்றன.

சீனாப் பள்ளத்தாக்கின் ஒரு முனையில் 127.7 மீட்டர் உயரமுள்ள இரும்பு நுழைவாயில் கட்டப்பட்டுள்ளது. பாக்கல் ஆற்றின் குறுக்கே 105.7 மீட்டர் உயரத்தில் மற்றொரு நுழைவாயில் கட்டப்பட்டுள்ளது. 1315 மீட்டர் நீளத்துக்கு இந்தப் பாலம் அமைகிறது. தரையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமையும் இந்தப் பாலத்துக்கு தாங்கு தூண்கள் அமைக்க முடியாது என்பதால், ஒரு ஆர்ச் அமைத்து அதன்மூலம் பாலத்தை தாங்கிப் பிடிக்கச் செய்கிறார்கள்.

கிரேன்கள் மூலம் தூண்களை இணைக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. காற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தூண்கள் இரும்பு சட்டங்களைக் கொண்டும், கான்க்ரீட் நிரப்பப்பட்ட இரும்புப் பெட்டிகளைக் கொண்டும் அமைக்கப்பட்டு வருகின்றன.

பள்ளத்தாக்கின் உச்சியில் தனியாக நிற்கும் பாலங்களுக்கு காற்றுதான் பிரச்னை. ஆனால் மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் வீசக்கூடிய காற்றை இந்தப் பாலம் தாங்கும். 40 கிலோ சக்தியுள்ள வெடியைத் தாங்கும் சக்தி கொண்டது. 120 ஆண்டு உழைக்கக்கூடிய வளைந்த நுழைவாயில்கள் மற்றும் பாலத்திற்கு முறையே 35, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை வண்ணம் பூச வேண்டும்.

இணையதளம் மூலம் ஆபத்துகளை எச்சரிக்கை செய்யும் வசதி இதில் நிறுவப்படும். இதன்மீது நடந்து செல்வதற்கும், சைக்கிளில் செல்வதற்கும் வசதிகள் செய்யப்படும். சர்வதேச அளவில், தேசிய அளவில் பின்பற்றப்படும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இப்பாலம் உருவாக்கப்படுகிறது.

AFCONS Infrastructure Ltd என்ற நிறுவனம் பாலம் கட்டும் வேலைக்கும், பின்லாந்தைச் சேர்ந்த டபிள்யூ.எஸ்.பி குரூப், ஜெர்மனியைச் சேர்ந்த Leonhardt Andra and Partners மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகியவை ஆலோசனைப் பணிக்கும் Jochum Andreas Seiltransporte  என்ற நிறுவனம் பாலத்திற்கு வண்ணம் பூசும் வேலைக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு - பாரமுல்லா ரயில் பாதையை 2018ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எப்படியும் 2020ம் ஆண்டு முடிவடைந்துவிடும். ரயில் பாதை வருவதற்கு முன்பாகவே இப்பணிகளால் இப்பகுதி மேம்பாடு அடைந்து வருகிறது. பாக்கல் என்ற கிராமத்திலிருந்து சலால் நீர் மின் நிலையம் உள்ள பகுதியை அடைய பல நாட்கள் நடக்க வேண்டும். பாடால் காலா ரயில் சுரங்கப் பாதை கட்டியதன் மூலம் இப்பிரச்னை தீர்வுக்கு வந்தது. 128 கி.மீ. நீள சாலைகள் போடப்பட்டு இப்பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைத்துவிட்டது.

சீனாப் பாலத்தைப் போலவே 3 கி.மீ. சுரங்கப் பாதை, 189 மீட்டர் உயரமுள்ள தூண்கள், 14 சுரங்கங்கள், 21 பாலங்கள் உள்ளடக்கிய அஞ்சி காட் ரயில் பாலத்தையும், கொங்கன் ரயில் நிறுவனம் கட்டி வருகின்றது.

359 மீட்டர் உயரமுடைய சீனாப் பாலம் கட்டி முடிந்தவுடன் பிரான்சில் டான் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை விட 15 மீட்டர் அதிக உயரமானதாகவும், ஈபிள் கோபுரத்தை விட 50 மீட்டர் உயரமானதாகவும் திகழும். குதுப்மினாரின் உயரத்தைப் போல் ஐந்து மடங்கு உயரமாகத் திகழும். 1.30 கி.மீ. நீளமுள்ள இப்பாலத்தின் அடிப்பகுதி 475 மீட்டர் அகலம் கொண்டது. இதன் மேல் பகுதி இரண்டு ரயில் பாதைகளோடு 14 மீட்டர் அகலத்தோடு விளங்கும்.

க.ரவீந்திரன், ஈரோடு.