காசாகும் கரப்பான் பூச்சி!



பூச்சிப் பூக்கள் 44

நாற்றம் பிடித்த கரப்பான் பூச்சிகளை நமக்குப் பிடிப்பதில்லை. ஆனால் 1999ம் ஆண்டில் தாய்லாந்து நாட்டு இளைஞன் ஒருவனுக்கு வேறு மாதிரியான சிந்தனை உதித்தது. சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இந்நாட்டில் மீன் பிடித்தல் ஒரு பிரதான பொழுதுபோக்கு. இங்கு வருபவர்கள் ஜாலியாக தூண்டில் போட்டு மீன் பிடிப்பது வாடிக்கை. இப்படி மீன் பிடிப்போருக்கு தூண்டில் இரையாக, கரப்பான் பூச்சிகளை விநியோகம் செய்தால் என்ன என்பதுதான் அந்த மாற்று யோசனை!

அருவருப்பான கரப்பான் பூச்சிகளில் புரதச் சத்து மிகுந்து இருப்பதாலும், பெரிய உருவத்தில் அகலமாக இருப்பதாலும் மீன்கள் இதை விரும்பி உட்கொள்கின்றன. இதைப் புரிந்து கொண்ட அந்த இளைஞன், இந்த மீன் இரையை வியாபார ரீதியில் உற்பத்தி செய்ய முடிவு செய்தான். இதற்காக ஒரு அரிசி ஆலையில் உயிருடன் சேகரிக்கப்பட்ட கரப்பான் பூச்சி      களைக் கொண்டு ஒரு பூச்சிப் பண்ணையை உருவாக்கினான். உலகின் முதல் கரப்பான் பூச்சிப் பண்ணை! 

இந்தப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் கரப்பான் பூச்சிகளைக் கொஞ்சமும் சேதம் இல்லாமல் உஷ்ணத்தில் உலர்த்தி, பாக்கெட்டுகளில் அடைத்து சந்தைப்படுத்தினான். மேலும் எளிதில் கிடைப்பதற்கு ஏதுவாக பல ஸ்டோர்களுக்கும் சப்ளை செய்தான்.

அப்போது ஒரு உலர் கரப்பான் பூச்சியின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.25/- மட்டுமே. இது அன்றைய மார்க்கெட்டில் இருந்த மற்ற தூண்டில் இரைகளைவிட மிகவும் குறைவான விலை என்பதால் விரைவில் இதற்கு மவுசு கூடிப் போனது. மூன்று ஆண்டுகளில் தினசரி ஆயிரக் கணக்கான பூச்சிகளை உற்பத்தி செய்யும் அளவிற்கு இப்பண்ணை பெரிதாகிப் போனதாம். கரப்பான் விற்ற காசில் சற்றுமில்லை துர்வாடை!

இதன் பிறகு கரப்பான் பூச்சிகளை வைத்து இன்னொரு வகையில் பணம் பண்ணும் ஐடியா ஆஸ்திரேலியர்களுக்கு உதித்தது. இந்நாட்டுக் குழந்தைகளுக்கு கரப்பான் பூச்சிகளின் மீது கொள்ளைப் பிரியம். இப்பூச்சிகளை இவர்கள் சிறந்த செல்லப் பிராணியாக விரும்பி வளர்க்கிறார்கள். இதனால் இப்பூச்சிகள் கணக்கில்லாமல் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. வீதி தோறும் விற்பனை வெகு ஜோர்!

நம்ம ஊரில் கண்ணாடித் தொட்டியில் அலங்கார மீன் வளர்ப்பது போல, அங்கு கரப்பான் பூச்சி வளர்க்கிறார்கள். இந்தத் தொட்டிக்குள் யூகலிப்டஸ் இலைகளால் படுக்கை அமைத்து, அதன் மீது கரப்பான் பூச்சிகளை விட்டு, தினசரி தீனி போடுகிறார்கள். பின்னர் தொட்டியைச் சுற்றி அமர்ந்து கொண்டு அவற்றின் இயக்கங்களை ஆர்வத்தோடு ரசிக்கிறார்கள். கூடவே துர்வாடைக்கு மாற்று பெர்ஃபியூம்!

கரப்பான் பூச்சிகளுக்கு உறுதியான உடலமைப்பு. அகன்ற தட்டையான பெரிய உடலுக்குப் பொருத்தமில்லாத சிறிய தலை. தலையின் கீழே வாயுறுப்புகள். இதில் உள்ள தாடைகள் உணவுப் பொருட்களை துண்டுகளாக நறுக்கி, பிறகு மென்று தின்ன  உதவுகின்றன. முரட்டுக் கால்கள், ஓடவும் எகிறிக் குதிக்கவும் உதவுகின்றன. உணர்தலுக்கு பிரத்தியேக ஆண்டெனா கொம்புகள். பெரிய கூட்டுக் கண்கள். இதுபோக இரண்டு ஜோடி இறக்கைகள்!

முதல் ஜோடி கெட்டியான கவசம் போல் மற்றொரு மெல்லிய ஜோடி இறக்கைகளைப் போர்த்திப் பாதுகாக்கும். இந்த மெல்லிய இறக்கைகள் 10-15 மி.மீ நீளத்தில் விசிறி போல் மடிந்திருக்கும். இவை பறக்க உதவினாலும் பறத்தல் என்பது வெகு குறைவே. எப்போதாவது சொற்பப் பறத்தல் இருக்கும். மற்றபடி ஓட்டம்தான், அதுவும் நொடிக்கு ஒரு அடி தூரத்தைக் கடந்துவிடும். இருந்தாலும் இவற்றால் அதிக நேரத்திற்கு தொடர்ந்து ஓட முடியாது. சீக்கிரத்தில் ஒரு மறைவான இடம் பார்த்துப் பதுங்கிக் கொள்ளவே முயற்சிக்கும்.

இவற்றுக்கு   பறப்பதிலும் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. பொதுவாக இரையைத் துரத்திப் பிடிக்க வேண்டிய அவசியம் இந்தப் பூச்சிகளுக்கு இருப்பதில்லை. அபாய சூழலில் இருந்து தப்பிப்பதற்கு மட்டுமே ஓட்டம் உதவுகிறது. இதனால்தான் சில இனங்களுக்கு இறக்கைகளே இருப்பதில்லை. சிலவற்றுக்கு இருந்தாலும் பறப்பதற்குப் பயனில்லாமல் சின்னஞ் சிறியதாய் இருக்கும். பிசுக்கு இறக்கை!

கரப்பான் பூச்சி ஒரு நிழல் பேர்வழி. வெளிச்சம் மிகுந்த பகல் பொழுதுகளில் இருட்டான இடம் பார்த்து மறைந்திருக்கும். கல்லிடுக்கு, சுவர் விரிசல், டாய்லெட்டில் உள்ள பொருட்களின் அடிப்பகுதி, சமையல் அறையிலும் ஸ்டோர் ரூமிலும் உள்ள பொருட்களின் பின்புறம் போன்ற இடங்கள் இதற்குத் தோதானவை. இத்தகைய ஸ்தலங்களில் ஒன்றை தம் ஜாகையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. பகல் முழுதும் இங்கே கப்சிப்!

இரவு வந்து விட்டால் இவற்றுக்கு குஷி பிறந்துவிடும். குடும்பப் பெண் போல் குனிந்த தலை நிமிராமல், மூன்று ஜோடிக் கால்களால் வேக நடை போட்டுக் கொண்டு டின்னருக்கு கிளம்பி விடும். இரை என்பது இவற்றுக்கு இன்னதென்று இல்லை. உணவுப் பண்டங்கள், பேப்பர், துணி, லெதர் மெட்டீரியல்ஸ் மட்டுமின்றி இறந்து கிடக்கும் வேறு ஜீவராசிகளின் பிரேதங்களைக் கூட சாப்பிடும். எனினும் இவற்றின் ஃபேவரைட் மெனு என்பது ஸ்வீட்டும் மாவுப் பொருட்களும்தான்.

எனவேதான் இவை ஸ்வீட் ஸ்டால்களிலும் ரொட்டிக் கடைகளிலும் மலிந்து காணப்படுகின்றன. சமயத்தில் இவை ஒரு மாதம் வரை கூட சாப்பிடாமலேயே சுறுசுறுப்பாக இருக்கும். கரப்பான் பூச்சிகள் உண்பதை விடவும் தம் கெட்ட வாடையால் நாஸ்தி பண்ணுவது தான் ஜாஸ்தி!பாவம், எத்தனை ருசியாகப் புசித்தாலும் இப்பூச்சிகளின் ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் இருப்பதில்லை. வெள்ளை வெளேர் ரத்தமே. நசுக்கிப் பாருங்கள், பால் போல ரத்தம் வடியும். அப்புறம் விரல்களில் நாற்றத்தைப் போக்க ஏராள சென்ட் வேண்டும்.

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்