கொழுப்பைக் குறைக்க வந்தாச்சு புது மாத்திரை!பொதுவாக, ரத்தக் கொழுப்பைக் குறைப்பதற்கு ‘ஸ்டாட்டின்’ வகை மாத்திரையைக் கொடுப்பது வழக்கம். அத்துடன் கொழுப்பு குறைந்த உணவைச் சாப்பிட வேண்டியது முக்கியம். ‘இனி உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இந்த மாத்திரையைச் சாப்பிட்டாலே போதும்; கொழுப்பு குறைந்துவிடும்’ என்ற அறிவிப்புடன் புதிய மாத்திரை ஒன்று அறிமுகமாகியுள்ளது அமெரிக்காவில். அதன் பெயர், எசிட்டிமைப் (Ezetimibe). உலக மருத்துவர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன் பக்கமாகத் திருப்பியுள்ளது, இந்த மாத்திரை!

இந்த மாத்திரையின் புதுமையைப் பற்றி பேசும்முன், கொழுப்பின் புராணத்தைக் கொஞ்சம் படிக்கலாம். கொழுப்பு என்பது ஒரு கரிம வேதிப்பொருள். கொழுப்பு இல்லாமல் நம்மால் வாழமுடியாது. முக்கியமாக, உடலில் ஹார்மோன் உற்பத்திக்கு கொழுப்பு தேவை. இது நமக்கு உணவிலிருந்தும் கிடைக்கிறது; உடலிலும் தயாரிக்கப்படுகிறது. புரதச் சத்துக்கு அடுத்தபடியாக நம் உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற முக்கியமான உணவுப் பொருள் இது. சக்தி மிகுந்த ஒரு சத்துப் பொருள் என்றும் சொல்லலாம்.

கொழுப்பில் நேரடி கொழுப்பு (Visible fat), மறைமுகக் கொழுப்பு (Invisible fat) என்று இரண்டு வகை உண்டு. சமையல் எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவை நேரடி கொழுப்பைச் சேர்ந்தவை. பால், பால் பொருள்கள், இறைச்சி, முட்டை போன்றவற்றில் இருப்பது மறைமுகக் கொழுப்பு. அடுத்து, கொழுப்பு திடப்பொருளாகவும் திரவப் பொருளாகவும் இருக்கிறது.

 உணவில் உள்ள கொழுப்பை வேதியியல் அமைப்பின்படி, திண்ம கொழுப்பு (Saturated Fat), நீர்மக் கொழுப்பு (Unsaturated Fat) என இரு வகைகளாகப் பிரிக்கிறார்கள். நீர்மக் கொழுப்பில் மேலும் இரு வகைகள் உண்டு. அவை தனித்த நீர்மக் கொழுப்பு (Mono Unsaturated Fat), பன்முக நீர்மக் கொழுப்பு (Poly Unsaturated Fat).

கொழுப்பு தனியாகவும் இருக்கும், கூட்டுச்    சேர்மமாகவும் (Ester)      இருக்கும். கொலஸ்டிரால் (Cholesterol), கொழுப்புப் புரதங்கள் (Lipoproteins), ட்ரைகிளிசரைட்ஸ் (Triglycerides), பாஸ்போலிப்பிட்ஸ் (Phospholipids), கொழுப்பு அமிலங்கள் (Fatty Acids) ஆகியவை கொழுப்பின் ‘கூட்டாளிகள்’. ஆரோக்கியம் காக்க நம் தினசரி உணவில் 20 முதல் 25 கிராம் வரை கொழுப்புள்ள உணவைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்குமேல் சாப்பிட்டால், அது  கொலஸ்டிராலாக மாறிவிடும். நமக்கு இருக்க வேண்டிய கொலஸ்டிராலின் அதிகபட்ச அளவு 180 IA./டெசி லிட்டர். உணவிலிருந்து பெறப்படும் கொலஸ்டிரால் ரத்தத்தில் கரைவதில்லை; குமிழ் போன்று மிதக்கும். உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இதனால் தனியாகச் செல்ல முடியாது. அதனால்,இது புரத மூலக்கூறுகளுடன் இணைந்து உடலுக்குள் பயணம் செய்கிறது. இதற்கு ‘கொழுப்புப் புரதம்’ (Lipoprotein) என்று பெயர்.

இந்தக் கொழுப்புப் புரதம் மூன்று வகைப்படும்: 1. அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதம். (Low Density Lipoprotein  சுருக்கமாக LDL), 2. அடர்த்தி மிகுந்த கொழுப்புப் புரதம் (High Density Lipoprotein  சுருக்கமாக HDL), 3. அடர்த்தி மிகக் குறைந்த கொழுப்புப் புரதம் (Very Low Density Lipoprotein சுருக்கமாக க்ஷிலிஞிலி).

கொழுப்புப் புரதங்களில், எல்.டி.எல்.லும் வி.எல்.டி.எல்லும் கெட்டவை. இவை இரண்டும் கல்லீரலிலிருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை உண்டாக்கும். அதுபோல், கொழுப்பை மூளைக்கு எடுத்துச் சென்று அங்கும் ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். அப்போது பக்கவாதம் வரும். ஆகவே இவற்றைக் ‘கெட்ட கொழுப்பு’ (Bad Cholesterol) என்கிறோம். அதேவேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது.

இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு எடுத்துச் செல்கிறது. இதன் மூலம் இதயத் தமனிக் குழாயைக் கொழுப்பு அடைப்பதைத் தடுத்து, மாரடைப்பு வராமல் பார்த்துக்கொள்கிறது. ஆகவே, இதற்கு ‘நல்ல கொழுப்பு’ (Good Cholesterol) என்று பெயர். உணவின் மூலம் ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதற்கு சிம்வாஸ்டாட்டின், அட்டார்வாஸ்டாட்டின், ரோஸ்வாஸ்டாட்டின் போன்ற மாத்திரைகளைக் கொடுப்பது நடைமுறையில் உள்ளது.

ஆனால், இவை எல்லோருக்கும் ஒத்துக்கொள்வதில்லை. உடல்வலி, தலைவலி, தசைவலி, கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி, தூக்கமின்மை போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் சிலருக்கு இவற்றைப் பரிந்துரை செய்வதில் சிரமம் உண்டாகிறது. இந்தக் குறையைத் தீர்க்கிறது ‘எசிட்டிமைப்’ மாத்திரை. டாக்டர் ராபர்ட் காலிஃப் என்பவர் இதைக் கண்டுபிடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள டியூக் மருத்துவமனையின் இதயப் பிரிவுத் தலைவர்.

‘‘இதற்கு ஒன்பது ஆண்டுகள் பிடித்தன. நெஞ்சுவலி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள் வரும் ஆபத்துள்ள சுமார் 18 ஆயிரம் பேருக்கு இந்த மாத்திரையைக் கொடுத்துப் பார்த்தோம்.

எல்லா வகை கெட்ட கொலஸ்டிராலையும் இது மிக நன்றாகவே குறைக்கிறது. முக்கியமாக இதயத்துக்கு ஆபத்து தருகின்ற எல்டிஎல் கொலஸ்டிராலை மற்ற ஸ்டாட்டின் மாத்திரைகளைவிட பல மடங்கு வேகமாகவும் சீக்கிரமாகவும் குறைக்கிறது. மேலும் இதற்கு தசைவலி, கிறுகிறுப்பு போன்ற பக்கவிளைவுகள் எதுவும் இல்லை.

பொதுவாக, ஸ்டாட்டின் மாத்திரைகள் ரத்தத்தில் ஏற்கனவே கலந்துவிட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும் தன்மையுள்ளவை. ஆனால், ‘எசிட்டிமைப்’ மாத்திரையோ குடலில் கொழுப்பை உறிஞ்ச விடாமல் தடுக்கின்ற ஆற்றலைப் பெற்றுள்ளது. அதாவது, குடலில் கொழுப்பு உறிஞ்சப்படுவதற்கு ‘ழிறிசி1லி1’ எனும் புரதம் உதவுகிறது.

‘எசிட்டிமைப்’ மாத்திரை இதன் செயலாற்றலை முற்றிலும் தடுத்துவிடுகிறது. இதன் பலனால், கொழுப்பானது ரத்தத்தில் சேருவதற்கே இடமில்லாமல் போகிறது. மற்ற ஸ்டாட்டின் மாத்திரையோடு இதைச் சேர்த்துப் பயன்படுத்தினால் இது தருகின்ற பலன் பல மடங்கு அதிகரிக்கிறது.

இதனால் லட்சக்கணக்கானவர்களை மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை தாக்குவதைத் தவிர்க்கலாம்; பைபாஸ் ஆபரேஷன் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை போன்ற செலவு மிகுந்த சிகிச்சைகளும் குறைந்துவிடும். இது இதய நலம் காக்க வந்துள்ள மகத்தான மாத்திரை’’ என்கிறார் ராபர்ட் காலிஃப்.

(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்