இருள் என்பது குறைந்த ஒளி!



விலங்குகளால் அடர்ந்த இருட்டில் பார்க்க முடியுமா?
- ஆர்.கமலேஷ், 8ம் வகுப்பு, கணபதி பள்ளி, சென்னை24.

ஒளியே இல்லாத போதும், கிலுகிலுப்பை விரியன் போன்ற குழிவிரியன் வகை பாம்புகளால், வெப்ப ரத்த பிராணிகளை அகச்சிவப்பு ஒளி மூலம் பார்க்க முடியும். இவற்றின் மூக்குத் துவாரம் அருகிலுள்ள கண் போன்ற பகுதி யில் லென்ஸ்கள் இல்லை. அதனால் இந்த வெப்ப உருவங்கள் தெளிவற்றே தெரியும்.தேனீக்கள் உள்பட பல பூச்சிகளால் புறஊதா ஒளியைக் காண முடியும். ஆனால், புறஊதா ஒளியானது வேறு ஏதேனும் ஒளி இருந்தால் மட்டுமே, இயற்கையில் புலப்படும். அதனால், அடர் இருளில் இதனால் எந்தப் பயனும் இல்லை.

வௌவால்களும் டால்பின்களும் ‘எதிரொலி’ மூலம் ‘பார்’க்கின்றன! எல்லா உயிரினங்களாலும் உருவாக்கப்படும் சிறு மின்காந்த மண்டலம் மூலம், சுறாக்கள் உணர்கின்றன. மின்காந்த அலையை ஏற்றுக்கொள்ளும் வகையில் சுறாக்களின் உடலில் ஒரு சிறப்புப் பகுதி அமைந்துள்ளது. இது ஓரிரு மீட்டர் தொலைவுக்குள் மட்டுமே வேலை செய்யும். எனினும், கருமையான இருளிலும், சுறாக்களால் மிகத்தெளிவாக இரையை அறிய முடியும். அந்த இரை, மண்ணுக்கு உள்ளோ, கடல் படுகைக்குக் கீழோ இருந்தாலும் கூட!

தும்பா, ராக்கெட் மையமாகத் தெரிவு செய்யப்பட என்ன காரணம்?
- க.ஜோதி, 10ம் வகுப்பு,
ஆண்ட்ரூஸ் பள்ளி, ராமநாதபுரம்.

தும்பா மையம் திருவனந்தபுரம் அருகில் அமைந்துள்ளது. 1968ல் தொடங்கப்பட்ட தும்பா ஈக்வேடோரியல் ராக்கெட் லாஞ்சிங் ஸ்டேஷன், இப்போது விண்வெளி ஆய்வுக்காக சவுண்டிங் ராக்கெட்களை ஏவும் ஐ.நா. சபை நாடுகளின் சர்வதேச மையமாகத் திகழ்கிறது. இது, காந்த ஊசி சாய்வில் இல்லாத நடுநிலையான கோடுக்கு (Magnetic equator) அருகில் அமைந்துள்ளது.

இந்தக் கோடும் நிலநடுக்கோட்டுக்கு வடக்கிலேயே உள்ளது. மேக்னடிக் ஈக்வேட்டர் மண்டலத்துக்கு மேலே உள்ள வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதியான மீவளிமண்டலத்தில் (Ionosphere) தனித்துவம் வாய்ந்த பல விஷயங்கள் உண்டு. ஆகவே, இவை பற்றி அறிய சவுண்டிங் ராக்கெட்கள் ஏவப்படுகின்றன.