முத்தான 3 விஷயங்கள்



டை தானே வேண்டும்?

‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ என்ற நூலை எழுதிப் புகழ்பெற்றவர் ‘ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்’ என்ற எழுத்தாளர். இவரைப் பார்க்க ஒரு முறை மார்க் ட்வைன் சென்றார். நகைச்சுவையாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன். ஆனால் எப்போதுமே உடை விஷயத்தில் அவ்வளவு அக்கறை காட்ட மாட்டார். வெளியில் செல்வதாக இருந்தால் கூட கையில் கிடைப்பதை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.

மார்க் ட்வைன், ஸ்டோவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றபோது, திருமதி ஸ்டோவ், ‘‘என்ன இப்படி டை கூட அணியாமல் வெளியே கிளம்பி விடுகிறீர்கள்?’’ என்று கேட்டதும்தான் மார்க் ட்வைன் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்தார்.

‘‘மறந்து விட்டது’’ என்று கூறி விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் ஸ்டோவ் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். திருமதி ஸ்டோவ் கதவைத் திறந்தபோது, வாசலில் ஒரு ஆள் கையில் ஒரு பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தான். ‘‘மார்க் ட்வைன் இதைத் தங்களிடம் தரச் சொன்னார்’’ என்று சொல்லிக் கொடுத்தான்.

 திருமதி ஸ்டோவ் அதைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே ஒரு கறுப்பு டையும், ஒரு குறிப்பும் இருந்தன. குறிப்பில் எழுதப்பட்டு இருந்தது இதுதான்: ‘‘இதோ என் டை. இன்று உங்கள் வீட்டில் அரை மணி நேரம் நான் டையில்லாமல் இருந்தேன்.

எனவே, அரை மணி நேரம் என் டையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, திருப்பி அனுப்பி விடுங்கள். தயவு செய்து தாமதிக்க வேண்டாம். ஏனென்றால், என்னிடம் இருப்பது ஒரே ஒரு ‘டை’தான். ‘இவரிடம் போய் வாயைக் கொடுத்தோமே’ என்று அவர் நொந்து போனார்.

நல்ல பண்பு

அண்ணல் காந்தியிடம் பெரும் ஈடுபாடு கொண்டவர் வினோபா பாவே. காந்தியடிகளின் அகிம்சை, மனித உரிமைக் கொள்கைகளில் கவரப்பட்டு, அதைக் கடைப்பிடித்து வாழ்ந்தார். அவரை ‘ஆச்சார்ய வினோபா’ என்று கூறுவார்கள்.

‘ஆச்சார்ய’ என்றால் ‘ஆசிரியர்’ என்று பொருள். காந்திஜியிடமிருந்து தனக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் பாதுகாத்து வைத்திருப்பார் வினோபா. ஒரு முறை மகாத்மாவிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போது அவருடன் ஜம்னாலால் பஜாஜ் என்ற பெரும் புள்ளி இருந்தார்.

வினோபா, கடிதத்தைப் படித்த வேகத்தில் கிழித்துப் போட்டு விட்டார். அதைப் பார்த்த ஜம்னாலால் பஜாஜ், ‘‘நீங்கள் கிழித்துப் போடும் அளவுக்கு மகாத்மா அப்படி என்ன எழுதி விட்டார்?’’ என்று கேட்டார். அதற்கு வினோபா சொன்னார்: ‘‘நான் வருத்தப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. மாறாக, என்னை மகான் என்று தமது பெருந்தன்மையால் புகழ்ச்சியாக எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தைப் பாதுகாத்து வைத்திருந்தால், நாளடைவில் என் மனம் கெடும்.

குணங்களும் மாறுபடும். அதனால்தான் கிழித்துப் போட்டு விட்டேன்’’ என்றார்.தன்னைப் பெரிதெனக் கருதாத வினோபாஜியின் அடக்கத்தைக் கண்ட ஜம்னாலால் பெரிதும் வியந்தார்.

சர்வாதிகாரியின் விலை


பெர்ஷியாவின் புகழ்பெற்ற கவிஞர் கெர்மானி. இவரிடம் ஒரு சமயம் சர்வாதிகாரி தைமூர் பேசிக் கொண்டு இருந்தார். ‘‘என்னை விலைக்கு விற்றால் பொது மக்கள் என்ன பணம் கொடுத்து வாங்குவார்கள்?’’ என்று தைமூர் கேட்டார்.உடனே கவிஞர் இவரது கர்வத்தை அடக்கும் விதமாக, ‘‘இப்போதிருக்கும் நிலையில் சுமார் 25 வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்குவார்கள்’’ என்றார்.

அதைக் கேட்டவுடன் தைமூர் ஆச்சர்யத்துடன், ‘‘என்ன! 25 வெள்ளிக் காசுகளா? நான் அணிந்திருக்கும் உடை, பெல்ட், இவற்றின் மதிப்பே 25 வெள்ளிக் காசுகள் இருக்குமே!’’ என்று கேட்டார்.

உடனே கெர்மானி, ‘‘ஆமாம்! நானும் அதை மட்டும்தான் சொன்னேன்’’ என்றார். அதைக் கேட்டவுடன் தைமூர், தன் கர்வத்தை விட்டொழித்தார்.

-மு.சுலைஹா, கீழக்கரை.