நம்பினால் நம்புங்கள்!*மைக் ரோவ் என்ற இளைஞர் mikerowesoft.com என்ற இணையதளத்தைத் தொடங்கினார். இதன் உச்சரிப்பு தங்கள் நிறுவனத்தின் பெயர் போலவே இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தது மைக்ரோசாஃப்ட். அந்த இளைஞர் மீது வழக்கும் தொடர்ந்தது. இறுதியில் நீதிமன்றத்துக்கு வெளியே, அந்த இளைஞருக்கு நல்லதொரு தொகை கொடுத்து செட்டில் செய்யப்பட்டது. இப்போது mikerowesoft.com என க்ளிக் செய்து பாருங்களேன்... எங்கு செல்கிறது என!

*மீன் பிடித்தல், உடற்பயிற்சி செய்தல், ஷவரில் குளித்தல் போன்ற செயல்களை தொடர்ச்சியாகச் செய்யும்போதுகூட, மனம் ஒருவித படைப்பாற்றல் மனநிலையை அடைகிறது.

*ஹாலந்தில், உலகில் முதன்முதலாக ‘இருளில் ஒளிரும் பைக் பாதை’ அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதை புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்காவின் ‘ஸ்டேரி நைட்’ ஓவியத்தைப் போலவே பிரதிபலிக்கிறது.

*மேற்புறம் மினுமினுக்கும் வகையிலும், கடித்துத் தின்னும்போது சோடா குடிக்கையில் ஏற்படும் விறுவிறு தன்மை போலவும் இருக்கும் ஆப்பிள் ரகத்தை வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

*சார்லஸ் டார்வின், ஆப்ரகாம் லிங்கன் - இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் (1809 பிப்ரவரி 12).

*‘கடில் பார்ட்டி’ என்ற அமைப்பு கட்டிப்பிடி வைத்தியத்தை பிரபலப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு நடத்தும் பார்ட்டிகளில் யாரை வேண்டுமானாலும் கட்டிப் பிடித்து நண்பர்கள் ஆகலாம்!

*வாக்கிங் செல்வது, இசை கேட்பது ஆகியவற்றை விடவும், மன அழுத்தத்தைக் குறைப்பதில் புத்தகம் படிப்பது 68 சதவீத அதிக பலன் அளிக்கிறதாம்!

*நின்றுகொண்டே சாப்பிடவும் குடிக்கவும் உதவக்கூடிய ஒரே அமைப்பிலான தட்டுக்குடுவை ‘கோ பிளேட்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கிறது!

*தொடர்ந்து வாயுத் தொல்லையால் அவதிப் படுபவர்களுக்காக ஒரு வேடிக்கை மாத்திரை அறிமுகமாகி இருக்கிறது. அம்மாத்திரை எடுத்துக்கொண்டால், அவர்கள் வாயு பிரிக்கும்போது ரோஜாவின் நறுமணம் வீசும். சாக்லெட் வாசனைக்கான மாத்திரையும் உண்டு!

*அமெரிக்காவில் ஒவ்வொரு நொடியிலும் 350 ஸ்லைஸ் பீட்சாக்கள் சாப்பிடப்படுகின்றன.